பதிவுத்துறைக்கு போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம்


பதிவுத்துறைக்கு போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம்
x

மக்கள் தங்கள் சேமிப்புகளை முதலீடு செய்வதற்கும், வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்வதற்கும், வீடு கட்டுவதற்கும் மற்றும் தொழில்களை தொடங்குவதற்கும் நிலம் வாங்கிப்போடுகிறார்கள்.

மக்கள் தங்கள் சேமிப்புகளை முதலீடு செய்வதற்கும், வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்வதற்கும், வீடு கட்டுவதற்கும் மற்றும் தொழில்களை தொடங்குவதற்கும் நிலம் வாங்கிப்போடுகிறார்கள். பலர் ஒரு இடத்தில் நிலம் வாங்கிவிட்டு வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கோ, வெளியூர்களுக்கோ சென்றுவிடுகிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய இடங்களை சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து, வேறு ஒருவருக்கு விற்று விடுவதும், அவர்களே தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்வதுமான பல மோசடிகள் அரங்கேறுவது உண்டு.

நில உரிமையாளர்கள் இதைக் கண்டுபிடிக்கிற நேரத்தில், உடனடியாக தனக்கு பதிவுசெய்து கொடுத்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தாலும் மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் அந்த அதிகாரிக்கு இல்லாதநிலை இருந்தது. நீதிமன்றங்களின் கதவைத்தான் தீர்வுக்காக தட்டவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது சொத்து பதிவுக்கு தேவையான பட்டா, இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களில் கியூ ஆர் கோடு வசதி இருக்கிறது. எனவே இந்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை எளிதாக கண்டறிய முடியும். ஆனால், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட இந்த சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை கண்டறிய முடியாது.

எனவே, போலி ஆவணங்கள் அடிப்படையில் பல சொத்துக்கள் உரிமம் மாற்றப்பட்டு மோசடிகள் நடந்துள்ளன. மேலும், அப்போது ஆதார் கார்டுகள், பதிவுத்துறை அலுவலகங்களில் போட்டோ எடுக்கும் வசதிகள் இல்லாத சூழ்நிலைகளில், ஆள்மாறாட்டம் செய்தும் சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. ஏமாற்றப்பட்டவர்கள் தொடர்ந்த லட்சக்கணக்கான வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அமைந்தவுடன், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலா சாமியை அழைத்து அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி, நில அபகரிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்களை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரத்தை கொடுக்கும் வகையில், ஒரு சட்டதிருத்தம் கொண்டுவர உத்தரவிட்டார். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சட்டமசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 6-8-2022 அன்று ஜனாதிபதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டது.

திருத்தப்பட்ட இந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவு 22-பி ஆனது, போலி ஆவணங்களின் பதிவை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஏற்கனவே நடந்த மோசடி பதிவுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரிடம் உரிய ஆவணங்களுடன் மனு செய்யவேண்டும். அவர் 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார். போலி பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டு உண்மையான நில உரிமையாளருக்கு சொத்து திரும்பக்கிடைக்கும். இவ்வாறு 11 ஆண்டுகளாக தன் நிலத்தை மீட்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்த பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் சென்னையில் உள்ள 4 கிரவுண்டு நிலத்தை, இந்த சட்டத்தின் மூலம் மீட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையினாலேயே போலி ஆவண ரத்து சான்றிதழ்களை வாணிஸ்ரீ பெற்றுக்கொண்டார். இதுமட்டுமல்லாமல், பதிவுக்காக வந்த ஆவணங்களை முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி பத்திரத்தை பதிவு செய்த ஆவணதாரர்கள் மட்டுமல்லாமல், பதிவு அலுவலர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறைத்தண்டனை வழங்கிடவும், இந்த சட்டதிருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மிகவும் பாராட்டத்தக்க இந்த சட்டம், இந்தியாவிலேயே முதலாவதாக நிறைவேற்றப்பட்டு, அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாட்டை ஆச்சரியத்தோடு பார்க்க வைக்கிறது. ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்கள் இதை செயல்படுத்த தமிழக அரசிடம் ஆலோசனை நடத்துகிறது. மொத்தத்தில் இந்த புரட்சிகர சட்டம் தமிழக அரசுக்கு புகழ் சேர்க்கும் சட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்களுக்கும் தங்கள் சொத்து பாதுகாப்பு குறித்து இனி அச்சம் இருக்காது.


Next Story