'நீட்' தேர்வுக்கு இப்போதே பயிற்சிகள்...


நீட் தேர்வுக்கு இப்போதே பயிற்சிகள்...
x

ஒரே நாடு; ஒரே நுழைவுத்தேர்வு என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கம் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘நீட்’ தேர்வு முறையை கொண்டுவந்தது.

ஒரே நாடு; ஒரே நுழைவுத்தேர்வு என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கம் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் 'நீட்' தேர்வு முறையை கொண்டுவந்தது. 2016 முதல் இந்த தேர்வுமுறை நடைமுறைக்கு வந்தாலும், தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டில் இருந்துதான் அமலுக்கு வந்தது. ஆரம்பம் முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வு வேண்டாம், பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைவேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தினர்.

சட்டசபையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், இன்னும் அதற்கு பதில்வராமல் நிலுவையிலேயே இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்கும் நேரங்களில் எல்லாம் இந்த கோரிக்கையை வலியுறுத்த தவறுவதில்லை.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில்கூட, "முத்தழிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிகாலத்தில் பள்ளி இறுதி வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன. தற்போதைய மத்திய அரசு 'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தி, தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினைத் தட்டிப்பறித்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே 'நீட்' தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலைப்பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்'' என்று அறிவித்தபடி, அனைத்து முயற்சிகளையும் எடுத்தாலும், இன்னும் ஒரு சாதகமான பதில் வரவில்லை.

முதலில் நடந்த 'நீட்' தேர்வு முடிவுகளில், தமிழக கல்வித்திட்டத்தில் படித்த மாணவர்களால் ஜொலிக்க முடியவில்லை. அதிலும், அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருந்தது. அ.தி.மு.க ஆட்சியின் இறுதியில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்து 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் கிடைக்கும் இடங்கள் அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில், இந்த ஆண்டு 'நீட்' தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த தேர்வை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 167 மாணவர்கள் எழுதியதில், 67 ஆயிரத்து 787 மாணவர்கள், அதாவது 51.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களில் 455 பேருக்கு மருத்துவக்கல்லூரிகளிலும், 114 பேருக்கு பல் மருத்துவக்கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும். கடந்த ஆண்டு 54.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சிபெற்று இருந்தாலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறைந்திருக்கிறது. குறைந்த கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்கள்கூட, தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும், வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளிலும் சேர்ந்து மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மருத்துவக்கல்லூரி தரம் குறைந்துவிடும் என்று விமர்சனங்கள் வந்தாலும், மருத்துவக்கல்லூரி தேர்வுகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தானே டாக்டராக முடியும்.

இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள், கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதியிருப்பதும், 34.6 சதவீத மாணவர்கள் தேர்ச்சிபெற்று இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. குரோம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவர் பி.சுந்தரராஜன், எந்த பயிற்சி வகுப்பிலும் படிக்காமல், 720 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார் என்றால், அரசு பள்ளிக்கூட மாணவர்களும் 'நீட்' தேர்வில் வெற்றிபெற முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையான பயிற்சிகளை உடனேயே தீவிரமாக தொடங்கினால், அவர்களால் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். 'நீட்' தேர்விலிருந்து மத்திய அரசாங்கம் விலக்கு கொடுத்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும், எங்கள் மாணவர்களால் தேர்ச்சி பெறமுடியும் என்ற வகையில், அவர்களை உருவாக்குவது கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களின் இடைவிடா முயற்சியில்தான் இருக்கிறது.


Next Story