ஜனாதிபதி தேர்தல் ; 2024 தேர்தலுக்கு ஒத்திகையா?


ஜனாதிபதி தேர்தல் ; 2024 தேர்தலுக்கு ஒத்திகையா?
x

‘ஜனாதிபதி பதவி என்பது கேட்டு பெறுவதாக இருக்கக்கூடாது. அது தானாக வழங்கப்பட வேண்டும்’, என்றார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

'ஜனாதிபதி பதவி என்பது கேட்டு பெறுவதாக இருக்கக்கூடாது. அது தானாக வழங்கப்பட வேண்டும்', என்றார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. இப்போது ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியோடு முடிகிறது. அரசியல் சட்டம் 62-வது பிரிவின்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான கால அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 29-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 30-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2-ந்தேதி. ஜூலை 18-ந்தேதி தேர்தல் நடக்கும். 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து அன்று புதிய ஜனாதிபதி யார்? என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும். புதிய ஜனாதிபதியின் பதவிக்காலத்தில்தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்.

ஜனாதிபதியை நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டுமதிப்பு 700 புள்ளிகளாகும். எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுமதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அந்தந்த மாநிலத்தின் மக்கள்தொகை, எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை பொறுத்து ஓட்டுமதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு 176 புள்ளிகளாகும். தமிழக எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டுமதிப்பு 41,182 ஆகும். இந்தத்தேர்தலில் 543 மக்களவை உறுப்பினர்களும், 233 மாநிலங்களவை உறுப்பினர்களும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள 4,033 எம்.எல்.ஏ.க்களும் வாக்களிப்பார்கள். மொத்தம் எம்.பி.க்களின் ஓட்டுமதிப்பு 5,43,200. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,231 ஆகும். ஆக மொத்த ஓட்டுமதிப்பு 10,86,431 ஆகும். இதில் பாதிக்கு மேல் ஓட்டு பெறும் வேட்பாளரே வெற்றிபெற முடியும்.

இப்போதைய சூழ்நிலையில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கே அதிக ஓட்டுகள் இருந்தாலும் 50 சதவீதத்துக்கு மேல் இல்லை. மொத்தமுள்ள 10,86,431 ஓட்டு மதிப்பில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5,25,706 ஓட்டு மதிப்புகள் இருக்கின்றன. இன்னும் 20 ஆயிரம் ஓட்டு மதிப்புகளே வெற்றி பெறுவதற்கு குறைவாக இருக்கிறது. ஆனால் பிஜூ ஜனதா தளத்தின் 31,686 ஓட்டுமதிப்பும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 43,450 ஓட்டு மதிப்புகளும், பா.ஜ.க. வேட்பாளருக்கே கிடைக்கப்போகிறது. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியும் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உறுதி அளித்துவிட்டனர்.

2017-ல் நடந்த ஜனாதிபதி தேர்தலைவிட இந்த தேர்தல் வித்தியாசமானது. இப்போது 2 மாநிலங்களில் அரசு அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இணையாக ஆம் ஆத்மி கட்சியும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதுபோல அந்த தேர்தலில் காங்கிரசுக்கு துணையாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்பட சில கட்சிகள் காங்கிரஸ் தலைமையை ஏற்க தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி டெல்லியில் தன் வீட்டில் நாளை (புதன்கிழமை) ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 22 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எல்லா கணக்கையும் கூட்டி கழித்து பார்த்தால், பா.ஜ.க.வின் வேட்பாளர்தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இருக்குமா? என்பதற்கும், அதே ஒற்றுமையுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்குமா? என்பதற்கும் இது ஒரு ஒத்திகையாக இருக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மொத்தத்தில் இந்த தேர்தல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை எடைபோட்டு பார்க்கும் ஒரு அளவுகோலாகத்தான் இருக்கிறது. வேட்பாளர்கள் யார்? என்பதையும் அறிய நாடு ஆர்வமாக இருக்கிறது.


Next Story