தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு


தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு
x

மக்களின் வாழ்க்கை சக்கரம் எளிதில் சுழல்வதற்கு விலைவாசி முக்கிய காரணம்.

மக்களின் வாழ்க்கை சக்கரம் எளிதில் சுழல்வதற்கு விலைவாசி முக்கிய காரணம். வருமானம் அதிகரித்து, விலைவாசி குறைவாக இருந்தால், வரவுக்கும், செலவுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை கொண்டு மக்களால் சேமிக்க முடியும். மாதந்தோறும் நாடு முழுவதும் விலைவாசி எப்படி இருக்கிறது?, மாநிலங்களில் எப்படி இருக்கிறது? என்ற பட்டியலை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் வெளியிடுகிறது.

அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் இரண்டுக்கும் சேர்த்து, அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீடு, நுகர்வோர் உணவு பொருள் விலைவாசி குறியீட்டை கணித்துள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 1,114 நகர்ப்புற சந்தைகள், 1,181 கிராமங்களில் ஆகஸ்டு மாதத்தில் இருந்த விலைவாசி விவரங்கள் களப்பணியாளர்களால் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆகஸ்டு மாதத்துக்கான விலைவாசி விவரங்கள், கடந்த 12-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஜூலை மாதம் 6.71 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு ஆகஸ்டு மாதத்தில் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு ஜூலை மாதம் 6.69 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டு மாதத்தில் 7.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் மட்டும் விலைவாசி உயர்ந்துவிடவில்லை, தொடர்ந்து 8 மாதங்களாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி மக்களால் தாங்கக்கூடிய அளவு விலைவாசி உயர்வு 6 சதவீதம் என்று நிர்ணயித்துள்ள நிலையில், 8 மாதங்களாக இந்தியாவில் அந்த சிவப்பு கோட்டைத்தாண்டி விலைவாசி உயர்வு சென்று கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில்தான், நகர்ப்புறங்களைவிட விலைவாசி சற்று அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் இதைவிட அதிகமாக, அதாவது 7.2 சதவீதம் விலைவாசி உயர்வு இருக்கும் என்றும், அந்த அறிக்கையில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

தானிய வகைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் உள்பட பல உணவு பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் குடும்பங்களில் மாத பட்ஜெட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் இந்த விலை உயர்வால், சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி. அதிகமாக இருக்கும் என்ற வகையில், மக்களுக்கு கூடுதல் வரிச்சுமை, அதேநேரத்தில் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இந்த சிரமமான நேரத்தில் மக்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், மற்ற பொருட்களின் விலையை குறைக்க முடியாது. ஆனால், கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால், இந்த நேரத்தில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கலாமே என்பதுதான். மேலும், விலைவாசி அதிகரிப்பை கருத்தில்கொண்டு, ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் ரெப்போ ரேட்டை அதிகரிப்பது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும். இந்தமுறை அந்த பாதையிலிருந்து விலகி நிற்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

இந்தியாவில் விலைவாசி உயர்வு என்ற புயல் பல மாநிலங்களில் வீசும்போது, தமிழ்நாட்டில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவீதத்துக்கும் குறைவாக, அதாவது 5.14 சதவீதம்தான் இருக்கிறது. ஆகஸ்டு மாதத்தில் மட்டுமல்ல, ஏப்ரலில் 5.37 சதவீதமும், மே மாதத்தில் 5.72 சதவீதமும், ஜூன் மாதத்தில் 5.08 சதவீதமும், ஜூலையில் 4.78 சதவீதமும்தான் விலைவாசி உயர்வு இருந்து இருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விலைவாசியைக் கட்டுக்குள்வைக்க அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டங்களில் பிறப்பித்த ஆணைகளும், அதைத்தொடர்ந்து அரசு எந்திரம் மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளுமே இந்த குறைவான விலைவாசி உயர்வுக்கு காரணம். வரப்போகும் மாதங்களில் இன்னும் விலைவாசியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story