சாட்டையை கையில் எடுத்துவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!


சாட்டையை கையில் எடுத்துவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
x

தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்து, இப்போது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல், அனைத்து மாநகராட்சி மேயர்கள் வரை, அனைத்து பதவிகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்து, இப்போது பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல், அனைத்து மாநகராட்சி மேயர்கள் வரை, அனைத்து பதவிகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு மக்கள் தங்கள் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க, மக்கள் பிரதிநிதிகள் இல்லையே என்று ஏங்கிக்கொண்டு இருந்தனர். என்னதான் அதிகாரிகள் நிர்வாகம் இருந்தாலும், மக்களுக்கு தங்களின் நெருங்கிய தொடர்புகொண்ட, தங்களின் நிறை குறைகளை நேரில் வந்து பார்த்து, தங்களோடு நன்றாக பேசி பழகும் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் இருந்தால், அவர்களிடமே எல்லாவற்றையும் மனந்திறந்து சொல்ல முடியுமே என்று எண்ணிக்கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்றவுடன், மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும், ஆளும் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களே பெருவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், செயல் திறன் வாய்ந்த, முதல்-அமைச்சரால் பெரிதும் பாராட்டப்படும் அமைச்சர் கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கிறார். நமது பிரதிநிதிகள் அவரிடம் சொல்லி, எல்லா திட்டங்களையும் நமது பகுதிக்கு கொண்டுவந்து விடுவார்கள் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், பலர் மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகிறார்கள். சிலரின் நடவடிக்கைகள் மக்களின் வெறுப்பை சம்பாதிப்பதுபோல இருக்கிறது. கரப்ஷன், கலெக்‌ஷன், கமிஷனை எதிர்ப்பதே, தவிர்ப்பதே முதல்-அமைச்சரின் லட்சியம் என்பதற்கு மாறாக, அவர்களின் செயல்பாடுகள் அமைந்து இருந்தன. சிலரை பொறுத்தமட்டில், இவர்களை தேர்ந்தெடுத்தது நமது தவறோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு இருந்தன.

பெண் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தபிறகு, அவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றுவதுதான் நியதி. ஆனால், சில பெண் கவுன்சிலர்களின் கணவர்கள், தாங்கள்தான் மக்கள் பிரதிநிதிகள் என்பதுபோல, அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டனர். ஆனால், அவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. நவீன தொழில்நுட்பத்தில் கரைகண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு வராமல் எதுவும் தப்பிவிடுவதில்லை. பல வழிகளில் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், தவறு செய்பவர்களின் பட்டியலை அமைச்சர் நேருவிடம் கொடுத்து, அவரும் பலரை எச்சரித்து வருகிறார்.

இத்தகைய சூழ்நிலையில், இப்போது முதல்-அமைச்சரே கையில் சாட்டையை எடுத்துவிட்டார். "ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அது யாராக இருந்தாலும் விடமாட்டேன்" என்பதுபோல அவரது செயல்பாடுகள் இருக்கும் என்பதை, நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், அவரது உரையே பிரகடனப்படுத்திவிட்டது. உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம் என்று தொடங்கிவிட்டு, மக்களுக்காக எப்படி தொண்டாற்றவேண்டும் என்பதை விளக்கினார். அதன் பிறகு அவரது உரை, கண்டிப்பான ஒரு தலைவரின் எச்சரிக்கையாக இருந்தது. "சட்டப்படி-விதிமுறைப்படி-நியாயத்தின்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல, சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஒழுங்கீனமும்-முறைகேடும் தலை தூக்குமானால், நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, இங்குள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் பெற்றிருப்பது பதவியல்ல; பொறுப்பு. மக்களின் பாராட்டை பெறுங்கள் என்று சாட்டையை சுழற்றுவது போல அவர் கூறியதைப் பார்த்து, தமிழகமே அவரை பாராட்டும் வகையில், இதுதான் எங்கள் முதல்-அமைச்சர் என்று பெருமை கொள்கிறது. இனி உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பிரதிநிதிகள், நாங்கள் பெரிதும் மதிக்கும் எங்கள் சேவையே தனது பணி என்று பம்பரமாக சுழலும் எங்கள் அன்புக்குரியவர்கள் என்று மக்கள் நினைக்கும் பெருமையை ஒவ்வொரு பிரதிநிதியும் பெற்று முதல்-அமைச்சரின் பாராட்டுகளை பெற வேண்டும்.


Next Story