தமிழ்மொழிக்கு பிரதமரின் புகழாரம்


தமிழ்மொழிக்கு பிரதமரின் புகழாரம்
x

இந்தியாவின் அறிவுசார் மையங்களாகவும், ஆன்மிக புகலிடங்களாகவும், கலாசார மையங்களாகவும் திகழ்வது தமிழ்நாடும், காசியும்தான்.

இந்தியாவின் அறிவுசார் மையங்களாகவும், ஆன்மிக புகலிடங்களாகவும், கலாசார மையங்களாகவும் திகழ்வது தமிழ்நாடும், காசியும்தான். இன்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பல மூதாதையர்கள் கட்டிய மடங்கள், சத்திரங்கள், காசியில் இருக்கின்றன. பல தமிழ் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக காசியில் வாழ்ந்துவருகிறார்கள். இவ்வளவு ஏன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட சிறுவயதில் காசியில் தன் உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று படித்து இருக்கிறார். 'கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்' என்று அவர் பாடியிருக்கிறார்.

காசிக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்றால்தான், செய்த பாவம் தீரும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்கள் தமிழக இந்துக்கள். வடக்கே உள்ள காசிக்கு செல்ல பணவசதியும், உடல் ஆரோக்கியமும் இல்லாதவர்கள் காசி விசுவநாதரை வழிபட வசதியாக, தென்காசியில் கோவில் கட்டியவர் மன்னர் பராக்கிரம பாண்டியன். காலம் காலமாக காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள அனைத்து உறவுகள், இணைப்புகளை புதுப்பிக்கும் வகையிலும், தமிழர்களின் பாரம்பரியத்தை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணர்த்தும் வகையிலும், பிரதமர் என்ற முறையிலும், வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் நரேந்திர மோடியின் சிந்தையில் உதித்த திட்டம்தான், ஒரு மாத காலம் காசியில் கொண்டாடப்படும் காசி தமிழ்ச் சங்கமம் கோலாகல திருவிழா.

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, வேட்டி சட்டையுடன் தோளில் துண்டு போட்டுக்கொண்டு வந்தார். 'வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு' என்று தமிழில் பேசி தன் உரையைத்தொடங்கினார். "காலத்தால் அழியாத நமது கலாசார மற்றும் நாகரிகத்தின் மையங்களாக திகழும் காசியும், தமிழ்நாடும், சமஸ்கிருதம் - தமிழ் ஆகிய உலகின் தொன்மையான மொழிகளின் மையங்களாக திகழ்கின்றன. உலகின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. இதில் இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். இந்த பழமையான மொழியை முழுமையாக கவுரவிப்பதில் நாம் தவறிவிட்டோம். தமிழின் பாரம்பரியத்தை பாதுகாத்து வளப்படுத்துவது 130 கோடி இந்தியர்களின் பொறுப்பு. நாம் தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும்கேடு விளைவித்தவர்களாவோம். தமிழை கட்டுப்பாடுகளுக்குள் அடைத்து வைப்பது, அதற்கு பெரும் தீமை விளைவிப்பதாகும்" என்று செம்மொழியான தமிழ்மொழிக்கு புகழாரம் சூட்டினார்.

இது மட்டுமல்லாமல், அய்யன் திருவள்ளுவர் படைத்த திருக்குறளின் 13 மொழிகளிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டார். 13 மொழிகளில் திருக்குறள் என்பது தமிழுக்கு மேலும் சிறப்பாகும். திருக்குறளுக்கு இவ்வளவு புகழ் சேர்த்த, தமிழுக்கு பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி, உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நீண்ட நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பிரதமருடன் விழா மேடையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 9 மடாதிபதிகள் அமர்ந்து இருந்தது மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால், மத்திய அரசாங்கம் நடத்திய இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதல்-மந்திரி, மத்திய மந்திரிகள் அமர்ந்து இருக்க, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இடம்பெறாதது சற்று மனக்குறையாக இருக்கிறது. அவர்களையும் கலந்துகொள்ள செய்திருந்தால், விழா சீரும் சிறப்புமாக இருந்து இருக்கும்.


Next Story