தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு பேராசிரியர் பதவி


தொழில் அனுபவம் உள்ளவர்களுக்கு பேராசிரியர் பதவி
x

எழுதப் படிக்க தெரிந்தவர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூட படிப்பை முடித்தவர்களும், பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் என ஆண்டுதோறும் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.

எழுதப் படிக்க தெரிந்தவர்கள் மட்டுமல்ல, பள்ளிக்கூட படிப்பை முடித்தவர்களும், பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் என ஆண்டுதோறும் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. எப்படி படித்தவர்கள் எண்ணிக்கை உயருகிறதோ, அதுபோல வேலையில்லாமல் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது. இது சமுதாயத்துக்கு நல்லதல்ல. படித்து முடித்து ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய இளைய சமுதாயம், வேலை கிடைக்காத விரக்தியால் வேறுபாதைக்கு, சில நேரம் சமூகவிரோத செயல்களை செய்வதற்குகூட தள்ளப்படுகிறார்கள்.

வேலை கிடைக்காமல் போவதற்கு அவர்கள் மட்டும் காரணமல்ல. வேலை வழங்கும் பல நிறுவனங்கள், 'நாங்கள் வேலை வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால், நாங்கள் எதிர்பார்க்கும் திறமை, ஆற்றல் அவர்களிடம் இல்லையே' என்று குறைபட்டுக்கொள்கிறது. நமது கல்விமுறை அனுபவம் இல்லாத கல்வி முறையாக இருக்கிறது. அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டிய ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பாடங்களை மட்டுமே கற்றுக்கொடுக்க முடியுமே தவிர, அனுபவ ரீதியிலான தொழில்முறை பயிற்சியை அளிக்க முடியாது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இப்போது மோட்டார் வாகன பொறியியல் பாடம் இருக்கிறது. ரசாயன பாடம் இருக்கிறது. ஆனால், எந்த படிப்பும் இல்லாமல் அனுபவத்தினால் பெற்ற ஆற்றலைக்கொண்டு, பல திறமைசாலிகள் சமுதாயத்தில் இருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடையாரில் 'புல்லட்' மணி என்று ஒரு மெக்கானிக் இருந்தார். அவர் ஒரு மோட்டார் சைக்கிள் வரும்போது, எழும்பும் சத்தத்தைக்கொண்டே அதில் என்ன கோளாறு இருக்கிறது? என்பதை சொல்லிவிடுவார். இதுபோல, 50 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி ரசாயன சோதனை கூடத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர், ரசாயன உப்பு போன்ற பொருட்களை கையில் எடுத்து தடவி பார்த்தே, இது இந்த ரசாயன பொருள், இந்த சோதனையை செய்யுங்கள், 'ரிசல்ட்' வந்துவிடும் என்று சொல்லிவிடுவார். ஆக, ஜூலியஸ் சீசர் சொல்லியதுபோல, அனுபவம்தான் மிகச்சிறந்த ஆசிரியர். இத்தகைய படிப்பு இல்லாத, ஆனால் அனுபவம் மிகுந்த ஆற்றலாளர்களை தொழில் அனுபவமிக்க பேராசிரியர்கள், அதாவது புரபசர்ஸ் ஆப் பிராக்டிஸ் என்ற பதவியில் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நியமிக்க பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியிட்ட நகல் வழிமுறைகளில் இந்தத்திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு ஆண்டுக்கு முதலில் நியமிக்கப்படுவார்கள். ஆனால், அவர்களின் திறமை அடிப்படையில் பதவி காலத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அனுபவசாலிகளின் ஆற்றலும், செயல்முறை அணுகுமுறையும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பாடங்கள் மீது அதிக ஆர்வத்தையும், உன்னிப்பாக கற்றுக்கொள்ளும் உந்துசக்தியையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாணவர்களை அவர்களுக்கு ஆர்வமுள்ள வேலைகளை தேர்ந்தெடுக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும். அனைத்து வேலைகளிலும் இதுபோல அனுபவம் மிக்கவர்களை நியமிக்க முடியும். கல்லூரிகளில் படிப்பது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் களப்பயிற்சிக்கு அழைத்துக்கொண்டு போய் கற்றுக்கொடுக்க முடியும். பல்கலைக்கழக மானியக்குழு எடுத்த இந்த முடிவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், அரசுகளின் உயர்கல்வித்துறையும் இதற்கு ஒப்புதல் அளித்து, விரைவில் தொடங்கவேண்டும். பள்ளிக்கூடங்களிலும் இந்த முறையைக் கொண்டுவர பரிசீலிக்கலாம். படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்புகள் மாணவர்களின் கதவுகளைத் தட்டவேண்டும்.


Next Story