அரசு - தனியார் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்


அரசு - தனியார் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும்
x

தமிழ்நாட்டில் காமராஜர் காலம் முதல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி வரையும், இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்திலும் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காமராஜர் காலம் முதல் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி வரையும், இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்திலும் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறுவன் அல்லது சிறுமி கூட பள்ளிக்கூடத்தில் சேராமல் இருக்கக்கூடாது, இடைநிற்றல் இருக்கக்கூடாது என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன் துறை அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார். இதன் விளைவாக இப்போது மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. பள்ளிக்கூட கல்வியில் மட்டுமல்லாமல், கல்லூரி கல்வியிலும் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்ததால், ஒவ்வொரு கலை கல்லூரியிலும் அதிகபட்சமாக 20 சதவீதம் கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு மாணவர்களும் படித்து முடித்துவிட்டு, வேலைக்காக அலையும்போது, இதற்காகவா படித்தோம்? என்று மன சலிப்பு அடையும் நிலை ஏற்படுகிறது.

மத்திய - மாநில அரசு பணிகளில் பணியாற்றுபவர்களில் ஓய்வு பெறுவோர், பதவி உயர்வு போன்ற காரணங்களாலும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படுவதாலும், ஆண்டுதோறும் காலியிடங்கள் ஏற்படுகின்றன. இந்த பணியிடங்களை நிரப்ப தேர்வாணையங்கள் மூலமாக அரசு தேர்வுகளை நடத்துகிறது. ஆனால், அறிவிக்கப்படும் காலியிடங்களுக்கு பல மடங்கு அதிகமாக இளைஞர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள். 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022-ம் ஆண்டு வரை மத்திய அரசாங்க பணிகளுக்காக விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?, 22 கோடியே 5 லட்சத்து 99 ஆயிரத்து 238. இதில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 311 மட்டுமே. அதாவது விண்ணப்பம் செய்தவர்களில் 0.32 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பை பெற்று இருக்கிறார்கள். மீதம் உள்ளவர்களெல்லாம் வேலையில்லாத இளைஞர்கள் பட்டியலில் மீண்டும் சேர்ந்து விடுகிறார்கள்.

பணி பாதுகாப்பு, பென்ஷன், நிறைய விடுமுறை, மருத்துவ வசதி உள்பட பல சலுகைகள் கிடைக்கும் என்பதால், இளைஞர்கள் எப்படியாவது அரசாங்க வேலைகளில் சேர்ந்துவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். இதனால்தான் இப்போதெல்லாம் கடைநிலை ஊழியர்கள் பணிகளுக்குக்கூட மிக அதிகம் படித்தவர்கள் விண்ணப்பித்து போட்டியை கடுமையாக்கிவிடுகிறார்கள்.

மத்திய அரசாங்க பணிக்கு சேர வேண்டும் என்று ஆசையோடு இருப்பவர்களுக்கு, கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திரமோடி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேர் அரசு பணிகளுக்கு எடுக்கப்படுவார்கள் என்று வெளியிட்ட அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை கொடுத்துள்ளது. மத்திய அரசாங்க பணிகளுக்கு மட்டும் இந்த போட்டி இல்லை. தமிழக அரசு பணிகளுக்கும் கடும் கிராக்கி இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்ட 92 குரூப்-1 பணியிடங்களுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதுபோல 7 ஆயிரத்து 301 காலியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்து 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கும் பல மடங்கில் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது, தற்போது இந்தியாவில் இருக்கும் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க அரசு பணிகளால் மட்டும் நிச்சயமாக முடியாது. இது யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். இதில் தனியார் பங்களிப்புதான் மிக மிக அவசியமானது. நிறைய வேலைவாய்ப்புகளை தரும் கனரக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தனியார் தொடங்க சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மேலும் படித்தவர்கள் வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து செல்பவர்களாக இல்லாமல், அவர்களே வேலை வாய்ப்புகளை மற்றவர்களுக்கு வழங்கும் சுய தொழில்களை தொடங்க விழிப்புணர்வும், தேவையான சலுகைகள், உதவிகளை வழங்க வேண்டும்.


Next Story