12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி


12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி
x

ராகுல்காந்தி மக்களை சந்திக்கும் இந்த இந்திய ஒற்றுமைப்பயணம் பாராட்டுக்குரியது.

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் இப்போது வெகுதீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில காலங்களாக பல தலைவர்கள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். கடைசியாக குலாம் நபி ஆசாத்தும், அவரது ஆதரவாளர்களும் கட்சியைவிட்டு விலகி விட்டார்கள். ஏற்கனவே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும் அளவுக்குக்கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து, நடந்து முடிந்த இரு தேர்தல்களிலுமே தொடர்ந்து பா.ஜ.க. அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல், பல சட்டசபை தேர்தல்களிலும் ஆட்சி காங்கிரசை கைகழுவிவிட்டது. இது மட்டுமல்லாமல், 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கப்போகிறது. எப்படி பா.ஜ.க. எப்போதும் காங்கிரஸ் அல்லாத இந்தியா என்று கூறி வருகிறதோ, அப்படி எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் தலைமை இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி அமைக்க மும்முரமாக இருக்கிறது.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜ.க. கூட்டணிக்கு விடை கொடுத்துவிட்டு, எதிர்க்கட்சி கூட்டணிக்கு அவர் தலைமை தாங்குவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார். அடுத்து, மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செல்கிறார். இது மட்டுமல்லாமல், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் களத்தில் இறங்கி விட்டனர். காங்கிரஸ் கட்சியிலும், அடுத்த தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் காங்கிரஸ் தலைமையை ஏற்க தயங்கும் நிலையில், சில தலைவர்கள் நாங்கள் போட்டியிடப்போகிறோம் என்று அறிவித்துவிட்டனர். பல தலைவர்கள், பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் இயங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, துணைத் தலைவர் கோபண்ணா, பொருளாளரான சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்பட பெரும்பாலான தலைவர்கள் ராகுல் காந்திதான் தலைமையேற்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சிகிச்சைக்காக சோனியா காந்தி வெளிநாட்டில் இருக்கும் சூழ்நிலையில், ராகுல் காந்தி கட்சியைப் பலப்படுத்த, பொதுமக்களின் ஆதரவைப்பெற, எந்த தலைவரும் செய்ய முன்வராத ஒரு பெரிய முயற்சியை கையில் எடுத்துவிட்டார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியாக, 3,570 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் செல்லும், 'பாரத் ஜோடோ யாத்ரா' என்று சொல்லப்படும், இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல்காந்தி தொடங்குகிறார். நாளை மாலையில், கன்னியாகுமரியில் இந்த பயணத்தை ராகுல் காந்தியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியைக் கொடுத்து தொடங்கிவைக்கிறார். இதற்காக, ராகுல்காந்தி நாளை காலை, அவரது தந்தையான முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் நினைவிடத்தில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபின், கன்னியாகுமரிக்கு சென்று தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் தேசிய கொடியைப் பெற்று, அங்கிருந்து காங்கிரஸ் தலைவர்களுடன் பொதுக்கூட்ட மேடைக்கு சென்று உரையாற்றுகிறார்.

அடுத்த நாள் பாத யாத்திரையை ராகுல்காந்தி தொடங்குகிறார். முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கதர் சால்வை அணிவித்து வழியனுப்புகிறார். 3 நாட்கள் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாத யாத்திரை செல்லும் அவரது நடைபயணம், அண்டை மாநிலமான கேரளாவை 11-ந்தேதி அடைகிறது. தமிழ்நாட்டில் அவர் நடக்கும் 60 கிலோ மீட்டர் தூரத்திலும், திரும்பிய பக்கமெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் படம் தென்படும் என்றார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கோபண்ணா.

ராகுல்காந்தி மக்களை சந்திக்கும் இந்த இந்திய ஒற்றுமைப்பயணம் பாராட்டுக்குரியது. மக்களின் பிரச்சினைகளை அவர் அறியவும், அவரது கருத்துகளை மக்கள் அறியவும் இந்த பயணம் துணை நிற்கும் என்பதில் சந்தேகமேயில்லை.


Next Story