'ரெப்போ ரேட்' உயர்வு; பாதிப்பு யாருக்கு? பலன் யாருக்கு?


ரெப்போ ரேட் உயர்வு; பாதிப்பு யாருக்கு? பலன் யாருக்கு?
x

பொருளாதாரம் ஒரு கப்பல் என்றால், அதை திறம்பட செலுத்தும் மாலுமி ரிசர்வ் வங்கி என்று சொல்லலாம்.

பொருளாதாரம் ஒரு கப்பல் என்றால், அதை திறம்பட செலுத்தும் மாலுமி ரிசர்வ் வங்கி என்று சொல்லலாம். விலைவாசி உயர்வை 2 சதவீதத்தில் இருந்து அதிகப்படியாக 6 சதவீதம் வரை கட்டுக்குள் வைக்கும் பொறுப்பும், கடமையும் ரிசர்வ் வங்கிக்கு உண்டு. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுக்கும். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு விதிக்கும் வட்டி 'ரெப்போ ரேட்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ந்தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 'ரெப்போ ரேட்' விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாக உயர்த்தியது. இப்போது மீண்டும் நேற்று முன்தினம் கூடிய இந்தக்குழு, தொடர்ந்து மேலும் 50 புள்ளிகளை உயர்த்தி, இப்போது 'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்திவிட்டது.

ஏப்ரல் மாதம் இந்த நிதி ஆண்டு தொடங்கியது. அதற்குள் 90 புள்ளிகள் வட்டி உயர்ந்து இருக்கிறது. 'ரெப்போ ரேட்' விகிதம் இப்படியே நிற்கப்போவதில்லை. 4.9 சதவீதமாக இருக்கும் இந்த வட்டி விகிதம், வருகிற ஆகஸ்டு மாதத்தில் 5.75 சதவீதமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். 'ரெப்போ ரேட்' விகிதம் வங்கிகளுக்குத்தானே, நமக்கு என்ன வந்தது? என்று பொதுமக்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஏனெனில் இதனால் மக்கள் மீதுதான் தாக்கம் அதிகமாக இருக்கும்.

நிதிஆலோசகர் வ.நாகப்பன் இந்த 'ரெப்போ ரேட்' உயர்வு பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ''தபால் நிலையங்களிலும், வங்கிகளிலும் பணத்தை 'டெபாசிட்' செய்து அதன் வட்டியை நம்பி வாழ்க்கை நடத்தும் முதியோர், ஓய்வு பெற்றோர் போன்றவர்களுக்கு இது நல்ல விஷயம். ஏனெனில் அவர்கள் இனி 'டெபாசிட்' செய்யும் தொகைகளுக்கான வட்டி உயரும், அதே நேரத்தில் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களுக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக கடன் வாங்கும்போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் கூடும்'', என்று கூறினார்.

இதற்கு எடுத்துக்காட்டு கூற வேண்டும் என்றால், ஒருவர் ஒரு கோடி ரூபாய் கடனை 20 ஆண்டுகளில் திருப்பி கட்டுவதாக வாங்கியிருந்தால், அவர்களின் மாத தவணை ரூ.3,029 உயரும். மே மாத உயர்வையும் கருத்தில் கொண்டால் மாத தவணை ரூ.5,500 உயரும். பழைய தவணை தொகையையே கட்டுபவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக கூடுதலாக 2 ஆண்டுகள் கட்ட வேண்டியது இருக்கும்.

இதுமட்டுமல்லாமல், மற்றொரு அபாய சங்கையும் ரிசர்வ் வங்கி ஊதியிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த நிதி ஆண்டு பணவீக்கம் அதாவது விலைவாசி உயர்வு 5.7 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்த ரிசர்வ் வங்கி, இப்போது 6.7 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளது. அதுவும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7.5 சதவீதமாகவும், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வை 6 சதவீதத்துக்குள் வைக்கவேண்டிய ரிசர்வ் வங்கியே தன் வரம்புக்கு அதிகமாக விலைவாசி உயர்வு இருக்கும் என்று வெளிப்படையாக அறிவித்து இருப்பதைப் பார்த்தால், இந்த ஆண்டு விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட போகிறார்கள் என்பது மட்டும் புலனாகிறது. இப்போது மத்திய-மாநில அரசாங்கங்கள்தான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.


Next Story