உயிரைக் காப்பாற்றிய டாக்டர் தமிழிசை!


உயிரைக் காப்பாற்றிய டாக்டர் தமிழிசை!
x

மருத்துவர் பணி என்பது மகத்தான பணி. உயிரைக் காப்பாற்றும் பணி. அதைக் கூறும்வகையில்தான், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்த மன நல நிபுணர் கார்ல் ஜுங், “மருந்துகள் நோயைத்தான் குணமாக்குகிறது.

மருத்துவர் பணி என்பது மகத்தான பணி. உயிரைக் காப்பாற்றும் பணி. அதைக் கூறும்வகையில்தான், சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்த மன நல நிபுணர் கார்ல் ஜுங், "மருந்துகள் நோயைத்தான் குணமாக்குகிறது. ஆனால், டாக்டர்கள் நோயாளிகளைக் காப்பாற்றுகிறார்கள்" என்றார். இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி, "அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் மனித குலத்தின் முகத்தில் புன்சிரிப்பைக் கொண்டுவரும் பெரிய பொறுப்பு டாக்டர்களுக்கு இருக்கிறது" என்றார். அத்தகைய புனிதமான கடமையை, பறக்கும் விமானத்தில் தெலுங்கானா கவர்னரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆற்றி, மருத்துவ உலகத்துக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

அரசியலில் இறங்குவதற்கு முன்பு டாக்டர் தமிழிசை மகப்பேறு மருத்துவ நிபுணராக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் விமானத்தில் வாரணாசியிலிருந்து டெல்லி வழியாக ஐதராபாத் வந்து கொண்டிருந்தார். அதிகாலை 3.40 மணிக்கு அவர் இருக்கையில் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது விமானப்பணிப்பெண், "விமானத்தில் யாராவது டாக்டர் இருக்கிறீர்களா?" என்று ஒலிப்பெருக்கியில் கேட்கும் குரலைக்கேட்டு, பதறிப்போன டாக்டர் தமிழிசை எழுந்து விமானப்பணிப்பெண்ணை நோக்கி ஓடிச்சென்று, "என்ன விஷயம்?" என்று கேட்டார். "ஒரு பயணிக்கு அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு இருக்கிறார்" என்று விமான பணிப்பெண் கூறியவுடன், "அவர் எங்கே இருக்கிறார்?" என்று கேட்ட தமிழிசை, தன் இருக்கையிலிருந்து 20 சீட்டுகள் தள்ளி வியர்வை வெள்ளத்தில் மிகவும் சோர்வடைந்த நிலையில், ஒரு பயணி துவண்டுபோய் இருந்த காட்சியைக் கண்டு, உடனடியாக விமானத்தில் இருக்கும் ரத்த அழுத்தம் பார்க்கும் சாதனம், ஸ்டெதெஸ்கோப் மற்றும் முதலுதவி பெட்டியில் இருக்கும் மருந்துகளை கொண்டு வரச்சொன்னார்.

அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தது. அந்த பயணியை பரிசோதனை செய்த டாக்டர் தமிழிசை அவருக்கு முதலுதவிகளைச் செய்து, அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளிடையேயும் ஒரு பரபரப்பு நிலவியது. சற்று நேரத்தில் அந்த பயணியின் உடல்நிலை சீரடைந்தது. அவர் முகத்தில் புன்னகை வந்தது. மற்ற பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானம் ஐதராபாத்தில் தரை இறங்கியவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த பயணி வேறு யாரும் இல்லை. ஆந்திராவில் பணியாற்றும் ஏ.டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அவரும், மற்ற பயணிகளும் டாக்டர் தமிழிசைக்கு நன்றி தெரிவித்தவுடன், "நான் ஒரு டாக்டராக என் பணியைத்தான் செய்தேன்" என்று அடக்கமாக பதில் சொன்ன தமிழிசை, உஷாராக பணியாற்றிய விமானப் பணிப்பெண்ணையும், மற்ற ஊழியர்களையும் வெகுவாக பாராட்டினார். தமிழக அரசியல்வாதிகளில் டாக்டர் படிப்பை படித்த யாரும் தாங்கள் அடிப்படையில் ஒரு டாக்டர் என்பதை மறப்பதில்லை.

அ.தி.மு.க ஆட்சியின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போன்ற பலர், பல ஆபத்து நேரங்களில் ஒரு டாக்டராக சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரி எம்.சுதாகர் டாக்டர் படிப்பு படித்தவர். பல நேரங்களில் போலீஸ்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் அவசர சிகிச்சை தேவைப்படும் நேரத்தில் எல்லாம், ஒரு டாக்டராக சிகிச்சை அளிக்க தவறுவதில்லை. பொதுவாக டாக்டர்கள் 24 மணி நேரமும் டாக்டர்கள்தான். அதனால் எப்போதும் அவர்கள் தங்களுடன் ஸ்டெதெஸ்கோப், கையடக்க ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி மற்றும் அவசர மருந்துகள் வைத்திருந்தால் நல்லது. அரசும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை முதல் உதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சியை அளிக்கவேண்டும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களின் ஒரு பகுதியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்று கற்றுக்கொடுத்தால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.


Next Story