மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள்


மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள்
x

தமிழ்நாட்டில் சரித்திர காலத்தில் இருந்தே கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சரித்திர காலத்தில் இருந்தே கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியார் கூட 'கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று பாடியிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குத்தான் மிக முக்கியத்துவம் கொடுத்தார். ஊர் ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்று முனைப்புடன் முயற்சிகளை எடுத்த அவர், அந்த பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உள்ளூர் மக்களிடம் நன்கொடையாக பெறவேண்டும் என்ற உயரிய நோக்கில் பள்ளி சீரமைப்பு மாநாடுகளை அனைத்து ஊர்களிலும் நடத்தினார். தொடர்ந்து அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியிலும் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பல புதிய திட்டங்கள் கல்வித்துறையில் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, எளிதில் கிடைக்கவல்ல கல்வியை அனைத்து பள்ளிகளிலும் தரமான உள்கட்டமைப்பு வசதியுடன் வழங்கி, முழுமையான வளர்ச்சியை அடையச்செய்வதே தமிழக அரசின் முதன்மை இலக்காகும். ''பள்ளிக்கல்வியை பொறுத்தமட்டில் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், அந்த குழந்தைகள் இடைநிற்றல் ஏதுமின்றி இடைநிலை கல்வி வரை முழுமையாக தொடர செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு பள்ளிக்கூட கல்வித்துறை செயல்படுகிறது'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். பள்ளிக்கூட கல்வித்துறைக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு கொஞ்சம் கூட தொய்வில்லாமல், தொடக்கக்கல்வி மேம்பாட்டுக்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தாலும், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் மொத்தமுள்ள 23 ஆயிரம் அரசு தொடக்க பள்ளிக்கூடங்களில் 669 பள்ளிக்கூடங்களில், 10 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்கள்தான் 5-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் படிக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. ஒரு மாணவர் கூட 22 பள்ளிக்கூடங்களில் இல்லை. 11 பள்ளிக்கூடங்களில் தலா ஒரு மாணவரும், 24 பள்ளிக்கூடங்களில் தலா இரு மாணவர்களும், 41 பள்ளிக்கூடங்களில் தலா 3 மாணவர்களும், 50 பள்ளிக்கூடங்களில் தலா 4 மாணவர்களும் மட்டுமே படிக்கிறார்கள். பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், இப்படி 669 அரசு பள்ளிக்கூடங்கள் ஒற்றை இலக்க மாணவர்களோடு திறந்திருப்பது ஏற்புடையதல்ல. அந்த பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இல்லையே தவிர ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் ஆற்றவேண்டிய பணிகள் வீணாவது சரியல்ல. உள்ளூர் மக்கள், தன்னார்வலர்கள் துணையோடு பள்ளிக்கூடத்துக்கு வராத 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அந்த பகுதியில் யார்-யார் இருக்கிறார்கள்? என்பதை அடையாளம் கண்டு, அவர்கள் பெற்றோரை சந்தித்து, கல்வியின் அவசியத்தை விளக்கி, அரசு என்னென்ன உதவிகளை அளிக்கிறது? என்பதை எடுத்துக்கூறி பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும்.

அனைத்து பகுதியில் உள்ள மாணவர்களும் கல்வி கற்கவேண்டும் என்ற சீரிய நோக்கில், பள்ளிக்கூடங்களுக்கு கட்டிட வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் நிலையில், அதையெல்லாம் பயன்படுத்தி கல்விச்செல்வம் அளிக்கும் வகையில் அந்தபகுதியில் பள்ளிக்கூடத்துக்கு வராத மாணவர்களை, பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து சேர்க்கும் கடமை, அந்த பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இருக்கிறது. இந்த பணியில் அவர்கள் உடனடியாக ஈடுபடவேண்டும். அந்த பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்களா? என்பதை தொழிலாளர் துறை கண்காணிக்க வேண்டும்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை இந்த பள்ளிக்கூடங்களில் முதலில் வழங்க வேண்டும். காலை உணவு, சத்துணவு வழங்குவது, சீருடை வழங்குவது, பாடப்புத்தகங்கள் வழங்குவது போன்ற அரசின் திட்டங்கள் இந்த பள்ளிக்கூடங்களில் உடனடியாக நல்ல முறையில் நடைமுறைப்படுத்தவேண்டும். 'இல்லம் தேடி கல்வி' பணியாளர்களையும், அந்த பள்ளிக்கூட ஆசிரியர்களையும் மாணவர்கள் சேர்க்கைக்கு பொறுப்பாக்க வேண்டும்.


Next Story