பல்கலைக்கழக ஆசிரியர்கள் தேர்வு


பல்கலைக்கழக ஆசிரியர்கள் தேர்வு
x

ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணியாகும். ஏதோ வேலை பார்த்தோம், சம்பளம் வாங்கினோம், நமது கடமை அதோடு முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டு திருப்திபட்டுக்கொள்ளும் பணியல்ல இது.

ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணியாகும். ஏதோ வேலை பார்த்தோம், சம்பளம் வாங்கினோம், நமது கடமை அதோடு முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டு திருப்திபட்டுக்கொள்ளும் பணியல்ல இது. மாணவச்செல்வங்களுக்கு அறிவை புகட்டி, நாளைய சமுதாயத்தை உருவாக்கும் வல்லவர்களாக அவர்களை செதுக்கும் பணியாகும். மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் பணிகளைச்செய்யும் ஆசிரியர்கள் அறிவில் தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியர்களை நியமிக்கும் பெரும்கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

அதனால்தான் பள்ளிக்கூடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கும், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு இப்போது நடத்தப்படுகிறது. அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட முடியும். ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலமே கல்லூரி கல்வி இயக்குனரகம், தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம், சட்டக்கல்வி இயக்குனரகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களையும் நியமிக்க ஏற்கனவே அரசு உத்தரவு இருக்கிறது.

ஆசிரியர் தேர்வு மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், விரைவாகவும் இருக்கும் வகையில், அதை சீரமைத்து வலுவுள்ளதாக அமைக்கவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தரத்தை உயர்த்தும் வகையிலும், பரிந்துரைகளை அளிக்க தமிழக அரசு கடந்த 20.9.2021 அன்று ஒரு குழுவை நியமித்தது. அந்த குழு மிக விரிவாக ஆராய்ந்து 39 பரிந்துரைகளை அளித்தது. இந்த பரிந்துரைகளை மிக கவனத்துடன் தமிழக அரசு பரிசீலித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை தலைவராகக் கொண்டு இயங்கும். மேலும் புதிதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்படுவார்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து பள்ளி-கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல், இனி பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத்தேர்வில் தரமான கேள்விகளைக் கேட்கும் வகையில் வினா வங்கியின் தரத்தை உயர்த்த ஒரு குழு அமைக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டு ஆட்சேர்ப்புக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளில் கலந்துகொள்பவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.233 கட்டவேண்டும். இந்த தேர்வு கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.

தேர்வு பற்றிய விளம்பரம், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மட்டுமல்லாமல், அதிகம் விற்பனையாகும் ஒன்று அல்லது இரண்டு தமிழ்பத்திரிகைகள், ஒரு ஆங்கில பத்திரிகையில் பிரசுரிக்கப்படவேண்டும். போட்டித்தேர்வு மூலமாக சிறந்த ஆசிரியர்களை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக தேர்வு செய்யவேண்டும். இவ்வாறு 39 பரிந்துரைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கதாகும். அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவிப்பவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போல ஒரு தன்னாட்சி மிக்கதாக அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தாண்டு 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் உள்பட 15,149 ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் உத்தரவால் இவ்வளவு நியமனங்களையும் மேற்கொள்ளப்போகும் ஆசிரியர் தேர்வு வாரியம், எந்தவித ஊழலுக்கும் இடமில்லாமல், தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுப்பதில்தான் அரசின் உத்தரவுக்கு கிடைக்கும் வெற்றி இருக்கிறது.


Next Story