மூத்த குடிமக்களின் சலுகைகள் பறிப்பா?


மூத்த குடிமக்களின் சலுகைகள் பறிப்பா?
x

1959-ம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படத்தில், “கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி, மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி” என்ற பாடல் வரும்.

1959-ம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படத்தில், "கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி, மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி" என்ற பாடல் வரும். அதே பாடலைத்தான் மூத்த குடிமக்கள் சோகத்தோடு பாடும் வகையில், அவர்களுக்கு கொடுத்து வந்த பல சலுகைகள் இப்போது பறிக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, ரெயில் பயணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆண்களுக்கு 40 சதவீத கட்டண சலுகையும், பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா நேரத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த சலுகை வழங்கப்படவேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை விடப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என்று மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தன் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

2019-2020-ம் ஆண்டுகளில் முன்பதிவு செய்த ரெயில் பெட்டிகளில், இந்தியா முழுவதும் 6 கோடியே 18 லட்சம் மூத்த குடிமக்களும், கொரோனா காலங்களான 2020-2021-ம் ஆண்டில் ஒரு கோடியே 90 லட்சம் மூத்த குடிமக்களும், 2021-2022-ம் ஆண்டில் 5 கோடியே 55 லட்சம் மூத்த குடிமக்களும் பயணம் செய்து இருக்கிறார்கள். பொதுவாக, வசதி படைத்த மூத்த குடிமக்கள் தங்களின் சமுதாய கடமையை உணர்ந்து, அவர்களாகவே எங்களுக்கு சலுகை வேண்டாம், நாங்கள் மற்ற பயணிகளைப்போலவே முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள். 2019-2020-ல் மட்டுமே 22 லட்சத்து 62 ஆயிரம் மூத்த குடிமக்கள் தங்களுக்கு கட்டண சலுகை வேண்டாம் என்று கூறி முழு கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், "மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கியதன் மூலம் ரெயில்வேக்கு 2017-2018-ம் ஆண்டில் ரூ.1,491 கோடியும், 2018-2019-ல் ரூ.1,638 கோடியும், 2019-2020-ல் ரூ.1,667 கோடியும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது" என்று ரெயில்வே மந்திரி தெரிவித்து இருக்கிறார். "ரெயில்களில் பயணிகள் கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதாலும், கட்டண சலுகைகள் வழங்குவதாலும் ரெயில்வேக்கு மிகவும் இழப்பு ஏற்படுகிறது. ரெயில் பயணத்துக்கு ஆகும் செலவில் 50 சதவீதத்துக்கு மேல் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவெல்லாம் சரிதான். ஆனால் மூத்த குடிமக்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டதில்லை. ரெயில்வேயில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இலவச பாஸ், கட்டண சலுகை, இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச பாஸ் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. அப்படி இருக்க, மூத்த குடிமக்களை மட்டும் குறிவைத்து ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஒருமுறை கொடுத்து வந்த சலுகையை திடீரென நிறுத்துவது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. இது, தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தட்டை பறிப்பதற்கு இணையாகும். மேலும், 60 வயது வரை இந்த மூத்த குடிமக்களெல்லாம் ரெயிலில் டிக்கெட் எடுத்துத்தான் பயணம் செய்து இருப்பார்கள். அவர்களால் ரெயில்வே துறைக்கு வருமானம் கிடைத்திருக்கும். இப்போது அவர்களுக்கு கட்டண சலுகை கொடுப்பதை இழப்பாக கருதக்கூடாது.

இந்த சலுகையை சமூகநல சலுகையாக கருத வேண்டும். மூத்த குடிமக்கள் தினமும் பயணம் செய்யப்போவதில்லை, அப்படி போகவும் முடியாது என்பதையும் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே, மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் தொடரவேண்டும், அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தவேண்டும் என்பதே மூத்த குடிமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதுபோல, சேமிப்புகளில் மூத்த குடிமக்களின் சேமிப்புகளுக்கான வட்டியையும் குறைக்கக்கூடாது.


Next Story