திசை மாறி செல்லும் மாணவர்கள்


திசை மாறி செல்லும் மாணவர்கள்
x

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டசபையில் பேசும்போது, ‘‘அனைவருக்கும் தேநீர் வழங்குங்கள் என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார்.

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சட்டசபையில் பேசும்போது, ''அனைவருக்கும் தேநீர் வழங்குங்கள் என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அனைவருக்கும் ஒரே அளவில் வழங்குங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார். அனைவருக்கும் ஒரே மாதிரியான குவளையில் வழங்குங்கள் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார். இதில் பசித்தவன் எவனோ அவனுக்கு முதலில் வழங்குங்கள் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னார். அந்த தேநீரையும், அந்த கோப்பையையும் இலவசமாக வழங்குங்கள் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதுதான் சமூக நீதி என்று எங்களால் நெஞ்சு நிமிர்ந்து சொல்ல முடியும்'', என்று கூறினார்.

அந்தவகையில், அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அரசு வாரி வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது. தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அவர்கள் கல்வித்தரம் உயர்ந்து இருக்க வேண்டும் என்ற வகையில், பல வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அரசு பள்ளிக்கூடங்களில் படித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 556 அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது. இப்போது தனியார் பள்ளிக்கூடங்களில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர். ஆனால் இந்த நிலை நீடிக்குமா? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது.

பல அரசு பள்ளிக்கூட மாணவர்கள் திசை மாறி செல்லும் போக்கு, பாதை மாறி செல்லும் போக்கு பற்றிய செய்திகள் அடிக்கடி வருவது வேதனை அளிக்கிறது. மாணவப்பருவம் என்பது பிஞ்சு பருவம். ஆனால் பிஞ்சிலேயே முற்றிய சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பள்ளிக்கூடத்திலேயே சக மாணவர்களால் ஒரு மாணவன் அடித்து கொல்லப்பட்டு இருக்கிறான். ஆசிரியரையே ஒரு மாணவன் ஆபாசமாக பேசி தாக்க முற்பட்டு இருக்கிறான். ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்பறையிலேயே ஆசிரியரை சுற்றி வட்டமடித்து நடனமாடி இருக்கிறார்கள். ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்போது ஓரிரு மாணவர்கள் பின் வரிசையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரையே பீர் பாட்டிலை உடைத்து குத்த முயன்று இருக்கிறான். ஒரு பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு மாணவன் சக மாணவிக்கு தாலி கட்டி இருக்கிறான். அதை சிரித்துக்கொண்டே அந்த மாணவியும் ஏற்றுக்கொண்டு இருக்கிறாள். மாணவர்கள் மட்டுமல்லாமல் சீருடை அணிந்த மாணவிகளும் சர்வ சாதாரணமாக மது குடித்து இருக்கிறார்கள். இதெல்லாம் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வந்த காட்சிகள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறதோ? என்ற கவலையும் ஏற்படுகிறது. 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 'டாஸ்மாக்' கடைகளில் மது விற்கப்படமாட்டாது என்று விதி இருக்கிறது. அப்படியானால் இந்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் எப்படி கிடைத்தது? மேலும் கஞ்சா மற்றும் ஏராளமான போதை மருந்துகளும் தாராளமாக புழங்குகின்றன. இந்த மாணவர்களை நல்வழிப்படுத்த மனநல ஆலோசகர்கள் கொண்ட வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நன்னெறி போதனைகள் வேண்டும். இதுதவிர அவர்களை நல்வழிக்கு கொண்டுவர என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பதை ஆசிரியர்கள், பெற்றோர், உளவியல் நிபுணர்கள் உள்பட ஆற்றல் மிகுந்தவர்கள் குழுவை அமைத்து அவர்கள் பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் மாணவர் குறித்து பெற்றோருடைய கருத்தையும், ஆசிரியரின் கருத்தையும் இரு தரப்பும் உணர்ந்து கொள்ள ஏதுவாக மாதந்தோறும் பெற்றோர்- ஆசிரியர்- மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மை குழுவின் துணையோடு நடத்தப்படும் என்ற கல்வித்துறை அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இத்தகைய சந்திப்புகள் நிச்சயமாக நிலைமையை சீர்படுத்த உதவும்.


Next Story