சாதனைக்கு தமிழ் வழி கல்வி தடையில்லை!


சாதனைக்கு தமிழ் வழி கல்வி தடையில்லை!
x

1 முதல் 12-வது வகுப்பு வரை தமிழ் வழியிலேயே படித்த கலைச்செல்வி, “தமிழ் வழியில் கல்வி கற்றதால்தான், கல்லூரியில் அறிவியல் கோட்பாடுகளை எளிதில் கற்க உதவியாக இருந்தது” என்று கூறுகிறார்.

தமிழ் வழியில் கல்வி கற்றால், தொழில்நுட்ப கல்வியில் மிளிர முடியுமா? உயர் கல்வியில் ஆங்கில வழி மாணவர்களுக்கு இணையாக படிக்க முடியுமா? நல்ல வேலைக்கு போக முடியுமா? தலைமை பொறுப்புகளுக்கு வர முடியுமா? என்ற சந்தேகங்களுக்கெல்லாம், முடியும்! முடியும்! என்ற பதிலைக் கொடுத்துள்ளார், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி என்.கலைச்செல்வி. இந்த உயரிய பொறுப்புக்கு வந்துள்ள முதல் பெண்ணும் இவர்தான்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே தொடங்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர். 80 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. கலைச்செல்வி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்த சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் தலைமை பொறுப்பில் 2 ஆண்டுகள் இருப்பார். இந்த அமைப்பின்கீழ் நாடு முழுவதும் இயங்கும் 38 ஆராய்ச்சி நிலையங்களில் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றுகிறார்கள். இவ்வளவு உயர்ந்த பொறுப்புக்கு வந்துள்ள கலைச்செல்வி அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைக்குளம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை நல்லதம்பி, ஆசிரியர். கலைச்செல்வி அம்பாசமுத்திரம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் இருக்கும் செயிண்ட் ஜோசப் நடுநிலைப்பள்ளிக் கூடத்தில் 8-வது வகுப்பு வரையிலும், திருநெல்வேலி காந்திமதி அம்பாள் மேல்நிலைப்பள்ளிக் கூடத்தில் 9 முதல் 12-வது வகுப்பு வரையும் படித்துள்ளார்.

1 முதல் 12-வது வகுப்பு வரை தமிழ் வழியிலேயே படித்த கலைச்செல்வி, "தமிழ் வழியில் கல்வி கற்றதால்தான், கல்லூரியில் அறிவியல் கோட்பாடுகளை எளிதில் கற்க உதவியாக இருந்தது" என்று கூறுகிறார். அறிவியலில் இருந்த தணியாத ஆர்வம் காரணமாக அறிவியல் படிப்பில் பட்டம் பெற்றார். கல்லூரி கல்வியை முடித்துவிட்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி பட்டம் பெற்றார். படித்து முடித்தவுடன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (செக்ரி) விஞ்ஞானியாக பணியில் சேர்ந்த கலைச்செல்வி, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். மின் வேதியியல் தொழில்நுட்பத்தை வீடுகளிலும் பயன்படுத்தும் வகையில், எளிமைப்படுத்தினால் எரிசக்தியை கணிசமாக மிச்சப்படுத்தமுடியும் என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கு பதிலாக வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றவேண்டும் என்ற முனைப்பில், நாடு இருக்கும் நிலையில், மின்சார வாகனங்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் லித்தியம் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமல்லாமல், சூப்பர் கெபாசிட்டர்கள், மின்னணு கழிவுகளை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் ஆய்வுகள் உள்பட மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவரை 'லித்தியம் பேட்டரி நிபுணர்' என்றே சக விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். 2019-ல் செக்ரியின் முதல் பெண் இயக்குனரான கலைச்செல்வி, இப்போது இந்த உயர்ந்த பொறுப்புக்கு வந்துள்ளது, தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும்.

இதுவரையில் கலைச்செல்வி 125 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தன் ஆராய்ச்சிகளுக்காக 6 காப்புரிமைகளை பெற்றுள்ளார். இவரது வழிகாட்டலில் 6 பேர் பி.எச்.டி. பட்டம் பெற்று இருக்கிறார்கள். 6 பேர் இப்போது பி.எச்.டி.க்காக தயாராகிக்கொண்டு இருக்கிறார்கள். இவர் பணியில் சேர்ந்த செக்ரி நிறுவனம் இந்த ஆண்டு பவள விழாவை கொண்டாடப் போகும் நிலையில், அதன் இயக்குனராக உள்ள கலைச்செல்வி சி.எஸ்.ஐ.ஆர்.-ன் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு இருப்பது மிகவும் சிறப்பாகும்.

மொத்தத்தில் கலைச்செல்வி இந்த உயர்ந்த இடத்தை அடைந்திருப்பது, தமிழ்நாட்டுக்கு பெருமை. அதே சமயம் பெண்களுக்கும், தமிழ்வழிக்கல்வியில் படிப்பவர்களுக்கும் பெரிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்பது உறுதி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதுபோல, தமிழ்வழி கல்வி அறிவியலை கற்றுணர தடையாகாது என்பதற்கு கலைச்செல்வியின் இந்த சாதனையே சிறந்த சான்று.


Next Story