உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்கள்


உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்கள்
x

‘இலக்கியம் படிப்போம்! உலக இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வருவோம்! தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளுக்கு கொண்டு சேர்ப்போம்! உலக அறிவுலகத்துக்கு தமிழை அறிமுகம் செய்வோம்’ என்பது முதல்-அமைச்சர் உறுதிமொழி.

'இலக்கியம் படிப்போம்! உலக இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வருவோம்! தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளுக்கு கொண்டு சேர்ப்போம்! உலக அறிவுலகத்தை நாம் அறிவோம்! உலக அறிவுலகத்துக்கு தமிழை அறிமுகம் செய்வோம்' என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதிமொழி. அதற்கு ஒரு நல்ல தொடக்கத்தை சென்னையில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சி அளித்தது. என்னதான் இணையவழி மூலமாக படித்தாலும், மனதில் உள்வாங்கி படிப்பதற்கும், படித்ததை நினைவில் கொள்வதற்கும், படித்ததை நினைவூட்டிக்கொள்வதற்கும், புத்தகங்களை படிப்பதற்கு ஈடு இணையே கிடையாது. அதனால்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு சிறிய நூலகமாவது இருக்கவேண்டும் என்பது கற்றறிந்த நல்லோரின் அறிவுரையாகும். அந்த இலக்கை அடைய உதவும் வகையில்தான், கடந்த 46 ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மற்றொரு சிறப்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் பொது நூலகத்துறையும், தமிழ்நாடு பாடநூல் கழகமும் இணைந்து சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சியை 3 நாட்கள் நடத்தின. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியை முதல்முறையாக சென்னையில் நடத்துவதற்கு முன்பு, இதை மிக சிறப்புடன் நடத்த வேண்டும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு, அதற்காக ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியை பார்த்துவிட்டு வருமாறு பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளை அனுப்பிவைத்தார்.

ஏனெனில் 1949-ம் ஆண்டு முதல் பிராங்க்பர்ட் சர்வதேச புத்தக கண்காட்சி நடந்துவருகிறது. சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்காக தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கியிருந்தது. கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்மொழியில் இருந்து சற்றேறக்குறைய 100 புத்தகங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பிற மொழிகளில் இருந்து 1,200 புத்தகங்களுக்கு மேல் தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் 30 நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வந்து இருந்தனர். தமிழ்மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க ரூ.3 கோடி மானியமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

தமிழ்மொழியில் இருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையில் 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்பதே இந்த கண்காட்சியின் வெற்றிக்கு சான்றாகும். இதில் 90 புத்தகங்கள் தமிழில் இருந்து உலகின் பிற மொழிகளுக்கும், 60 புத்தகங்கள் இந்தியாவில் உள்ள பிற மொழிகளுக்கும் மொழியாக்கம் செய்யப்பட இருக்கின்றன. 170 புத்தகங்கள் உலகில் உள்ள பிற மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட இருக்கின்றன. ஆக, மகாகவி பாரதியாரின் கனவான, 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்!', என்பதை நனவாக்கிவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Next Story