ராஜராஜ சோழனை தமிழ்நாடு மறக்கவில்லை


ராஜராஜ சோழனை தமிழ்நாடு மறக்கவில்லை
x

வரலாறுகள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது. தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை தேடித்தந்தவர்களின் புகழ் ஒரு போதும் மங்கிப்போய்விடக்கூடாது.

வரலாறுகள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது. தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ்மொழிக்கும் பெருமை தேடித்தந்தவர்களின் புகழ் ஒரு போதும் மங்கிப்போய்விடக்கூடாது. எப்போதும் ஒளி விட்டுக்கொண்டு பிரகாசிக்கவேண்டும். நமது பண்பாட்டையும், பெருமையையும் தலைமுறை தலைமுறையாய் நினைவில் கொண்டால்தான் நாம் தமிழர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பூரிப்படைய முடியும். தமிழர்களின் கலாசாரமும், வீரமும், நாகரிகமும் எவருக்கும் சளைத்ததல்ல என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

அவற்றைப்போற்றி பாதுகாப்பதுதான் மக்களுடைய கடமை மட்டுமல்ல, அரசின் தலையாய கடமையாகும். பழைய பெருமையை கொண்டாடும்போது நம்மை பண்டைய காலத்தில் ஆண்டவர்களின் ஆற்றல் இவ்வளவாக இருக்கிறதே என்று எண்ணுகிற நேரத்தில், இந்த தலைமுறைக்கும் ஒரு புதிய உற்சாகம், ஊக்கம் பிறக்கும். அந்த வகையில், நேற்று மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள். ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாக இல்லையென்றாலும், அவர்களில் ஒரு சிலர் காலத்தால் மறக்கப்படுவதில்லை. மறக்கவும் கூடாது. அதில் பெருமைமிகு இடத்தைப் பெற்றிருப்பவர் ராஜராஜ சோழன்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதுபோல, மக்கள் நலனை முன்வைத்து ஒரு மன்னர் செயல்பட்டால், காலத்தால் அவர் மறக்கப்படுவதில்லை என்பதற்கு ராஜராஜ சோழனே சான்று. 1037 ஆண்டுகள் கடந்தும், அவரை தமிழ் சமுதாயம் போற்றுகிறது, புகழ்கிறது, நினைவில் வைத்து கொண்டாடுகிறது என்றால், அவர் நடத்திய ஆட்சிமுறைதான் மேலோங்கி நிற்கிறது. தென்னிந்திய வரலாற்றில் ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலமாக கருதப்படுகிறது. ஒரு மன்னர் ஆட்சி எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு இலக்கணமாக அவருடைய ஆட்சி இருந்தது. அவருக்கு பட்டத்து உரிமை இருந்த நேரத்திலும், சித்தப்பாவுக்காக விட்டுக்கொடுத்து, அவரது மறைவுக்கு பிறகே மன்னராக முடிசூட்டிக்கொண்டார். மன்னராக இல்லாத நேரத்திலும், இளவரசராக நாட்டை வளப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டார். ராணுவத்தை குறிப்பாக கடற்படையை வலுப்படுத்தினார். கடல் தாண்டி சென்று கடற்படை மூலம் பல நாடுகளோடு போரிட்டு வெற்றிக்கொடி நாட்டினார்.

ஆயுத தொழிற்சாலைகள், போரில் காயம்பட்டவர்கள் உள்பட மக்களுக்கு மருத்துவம் செய்யும் ஆதுரசாலை என்று கூறப்படும் மருத்துவமனைகளை நிறுவினார். ஜனநாயகத்தை நிலைநாட்ட கிராமசபைகளை உருவாக்கி அதன் நிர்வாகிகளை குடவோலை மூலம் ஓட்டுப்போடும் ஜனநாயகமுறையை அமல்படுத்தியவர் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கால கட்டிடக்கலை நிபுணர்களே அதிசயித்து நிற்கும் வகையிலான தஞ்சை பெரியகோவிலைக்கட்டி சாகாப்புகழ் பெற்றுள்ளார். நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கோவிலில் இருந்து ஆடுகளைக்கொடுத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் கோவிலுக்கு விளக்கு எரிக்க எண்ணெய் மட்டும் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்துக்கொள்ள செய்தார். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்த ராஜராஜ சோழனின் புகழுக்கு மெருகூட்டும் வகையில், ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும், தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூரில் அவரது நினைவிடம் இருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை வரலாற்று ஆய்வாளர்கள் மூலம் உறுதிப்படுத்திவிட்டு மிகப்பெரிய ஒரு நினைவிடத்தை தமிழக அரசு அமைக்கவேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.


Next Story