தகைசால் தமிழர் விருது பெற்ற ஆர். நல்லகண்ணு!


தகைசால் தமிழர் விருது பெற்ற ஆர். நல்லகண்ணு!
x

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு அமுத பெருவிழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு அமுத பெருவிழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரையாற்றியதோடு மட்டுமல்லாமல், பல விருதுகளையும், நல உதவிகளையும் வழங்கினார்.

இதுபோல, அனைத்து மாநிலங்களிலும் தலைமைச்செயலகங்களில் முதல்-மந்திரிகள் கொடியேற்றினர். மாநில தலைநகர்களில் முதல்-மந்திரிகள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்பதை நினைத்து, தமிழர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் நன்றியோடு அவரை நினைத்து பாராட்ட வேண்டிய தருணம் இது.

1974-ம் ஆண்டுக்கு முன்பு வரை கவர்னர்தான் குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தன்றும் கொடியேற்றி வந்தனர். முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி டெல்லியில் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி கொடியேற்றுகிறார், சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். ஆனால் முதல்-அமைச்சர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?, குடியரசு தினத்தன்று கவர்னர் கொடியேற்றட்டும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான முதல்-அமைச்சருக்கு, சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமை வேண்டும் என்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் வற்புறுத்தியதன் பலனாகத்தான் மாநில தலைமை செயலகங்களில் முதல்-மந்திரிகள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

அந்த உரிமையைப் பெற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தேசிய கொடியேற்றிவைத்து உரையாற்றிவிட்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான 97 வயதுள்ள ஆர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதும், ரூ.10 லட்சமும் வழங்கினார். இந்த விருதை பெறுவதற்கு ஆர்.நல்லகண்ணு அனைத்து தகுதிகளையும் பெற்றவர். அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதன் மூலம், அந்த விருது மிகப்பெரிய பெருமையை அடைகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு. அங்கு பள்ளிக்கூட படிப்பை முடித்துவிட்டு, திருநெல்வேலியிலுள்ள எம்.டி.டி. இந்து கல்லூரியில் 'இண்டர்மீடியட்' படிக்கும்போது வ.வே.சு.அய்யர், வ.உ.சி. ஆகியோரின் வீர கர்ஜனைகளைக் கேட்டு, கல்லூரி படிப்பை கைவிட்டுவிட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை பார்வையிட்ட நேரத்தில், எஸ்.சத்தியமூர்த்தி, முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் நெருப்பு அலை போன்ற பேச்சுகளை கேட்டு தன் நண்பர்களோடு வந்தேமாதரம் என்று முழக்கமிட்டு நடந்து சென்றார்.

தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டார். 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நல்லகண்ணு, இதுவரையில் ஒரு பதவியிலும் இருந்ததில்லை. தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அதற்கு தடைவிதித்த நீதிபதிகள் நல்லகண்ணுவை வெகுவாக பாராட்டினர். "மணல் காவலர்" என்று மக்கள் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர்.

அவரது 80-வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களிடம் வசூலித்து வழங்கிய ரூ.1 கோடியையும், காரையும் கட்சிக்கே திரும்ப கொடுத்துவிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக வழங்கும் பென்ஷனை அவருக்கு கொடுக்க அரசு முன்வந்த நேரத்தில், "நான் என் நாட்டுக்காக கடமையை செய்தேன். அதற்கு நான் ஓய்வூதியம் பெறுவது நியாயமில்லை" என்று கூறி மறுத்துவிட்டார். 2008-ம் ஆண்டு தமிழக அரசு அம்பேத்கர் விருதுடன் வழங்கிய ஒரு லட்சம் ரூபாயில் பாதியை கட்சிக்கும், பாதியை விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்து விட்டார். நேற்றும் தமிழக அரசு சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ரூ.10 லட்சத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரமும் சேர்த்து, அந்த இடத்திலேயே முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்து, அனைவரையும் நெகிழச்செய்துவிட்டார்.

மிகச்சிறந்த மாமனிதரான நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருது மிகவும் பொருத்தமான ஒருவருவருக்கே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளது.


Next Story