கூட்டணி மாறியது; ஆனாலும் நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி !


கூட்டணி மாறியது; ஆனாலும் நிதிஷ்குமார்தான் முதல்-மந்திரி !
x

“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை” என்று ஒரு வழக்கு மொழி உண்டு.

"அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர்களும் இல்லை" என்று ஒரு வழக்கு மொழி உண்டு. அது எப்படி ஏற்படுகிறது? என்பதை, மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சொல்லிய வாசகங்கள் உறுதிப்படுத்துகின்றன. "பூகோளம் நம்மை அண்டை நாடுகளாக்கி இருக்கிறது, சரித்திரம் நம்மை நண்பர்களாக்கி இருக்கிறது. பொருளாதாரம் நம்மை பங்குதாரர்களாக்கி இருக்கிறது, தேவைதான் நம்மை கூட்டணிகளாக்கியிருக்கிறது" என்றார்.

அந்த வகையில் பீகாரில், "நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ" என்று இருந்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகளும், "இன்று முதல் நீ வேறோ, நான் வேறோ" என்ற வகையில், புதிய உறவோடு கை கோர்த்துள்ளனர்.

இதுவரையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக இருந்தவர் நிதிஷ்குமார். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், பா.ஜ.க. 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 இடங்களே கிடைத்திருந்தது. ஆனாலும், பா.ஜ.க. கூட்டணி என்ற வகையில், நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்குள் உறவு சுமூகமாக இல்லை. பா.ஜ.க.வை சேர்ந்த 2 துணை முதல்-மந்திரிகளும், பா.ஜ.க.வின் மந்திரிகளும் அதிகாரமிக்கவர்களாக, ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருந்தனர். பா.ஜ.க.வை சேர்ந்த விஜய்குமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டது, நிதிஷ்குமாருக்கு ஏற்புடையதாக இல்லை. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்க அனுமதிக்கிறார் என்ற குறை நிதிஷ்குமாருக்கு உண்டு. மேலும், அண்மையில் பீகார் சட்டசபையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். விழா மலரில் நிதிஷ்குமாரின் படம் இடம் பெறவில்லை.

இப்படி தொடக்கத்தில் இருந்தே, இரு கட்சிகளுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தாலும், கடந்த 3 வாரங்களில் மட்டும், நிதிஷ்குமார் மத்திய அரசாங்கத்தின் 4 அழைப்புகளை புறக்கணித்தார். நிதி ஆயோக் கூட்டம், ஜனாதிபதி பதவி ஏற்பு விழா, பழைய ஜனாதிபதியின் வழியனுப்பு விழா மற்றும் அமித்ஷா கூட்டிய முதல்-மந்திரிகள் மாநாடு ஆகியவற்றுக்கு செல்லாமல் புறக்கணித்தார். அதே நேரத்தில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர்களுடனும் சோனியாகாந்தியுடன் டெலிபோனிலும் பேசி வந்தார் என்று கூறப்படுகிறது.

இப்போது ஒரே நாளில் 2 முறை கவர்னரை சந்தித்தார் நிதிஷ்குமார். முதல்முறையாக தன் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில மணி நேரங்களில், ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு அரசு அமைக்கக்கோரும் கடிதத்தை எடுத்துக்கொண்டு கவர்னரை மீண்டும் சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் முதல்-மந்திரியாகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர். நிதிஷ்குமார் 8-வது முறையாக முதல்-மந்திரியாகி இருக்கிறார். 6 முறை பா.ஜ.க. கூட்டணியில் முதல்-மந்திரியாகவும், இப்போது 2-வது முறையாக ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் முதல்-மந்திரியாகவும் இருக்கிறார்.

கூட்டணிகள் மாறினாலும் எப்போதும் நிதிஷ்குமாரே முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். "நிதிஷ்குமார் துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டார். அது கிடைக்கவில்லை. அதனால்தான் கூட்டணியைவிட்டு சென்றுவிட்டார்" என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து நிதிஷ்குமார் கூறுகையில், "நான் அடுத்த முறை முதல்- மந்திரியாக மாட்டேன் என்றும், 2014-ல் நரேந்திரமோடி பிரதமரானார். 2024-ல் அவர் மீண்டும் பிரதமராவாரா?, மாட்டாரா? என்பதை காலம்தான் சொல்லும்" என்றும் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால், அவருக்கு எதிர்க்கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணமும் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


Next Story