கோலாகலமாய் நடந்து முடிந்த செஸ் திருவிழா!


கோலாகலமாய் நடந்து முடிந்த செஸ் திருவிழா!
x

நிறைவு விழா வந்தவுடன் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட்டிலேயே நம்ம சென்னை செஸ் ஒலிம்பியாட்தான் மிக சிறப்பான ஒலிம்பியாட் என்ற எண்ணங்கள் வெளிப்பட்டன.

பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித்திரிந்த பறவைகளே! பழகி கழித்த தோழர்களே! பறந்துசெல்கின்றோம்! நாம் பறந்து செல்கின்றோம்!................எந்த ஊரில், எந்த நாட்டில் என்று காண்போமோ............... இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ? என்று நம்ம சென்னை- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் தங்கள் மனதில் இந்த நினைவலைகளோடு திரும்பி சென்று இருக்கிறார்கள்.

இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் இதை ஒரு போட்டியாக மட்டும் பார்க்கவில்லை. செஸ் திருவிழாவாகத்தான் பார்த்தார்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதாவது நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடப்பதுண்டு. அந்த வகையில் ஒரு நாட்டில் செஸ் ஒலிம்பியாட் முடிந்தவுடனேயே அடுத்து இந்த போட்டி நடக்கும் நாட்டிடம் செஸ் ஒலிம்பியாட் கொடியை கொடுத்து விடுவார்கள். ஆக அடுத்த போட்டி நடக்கும் நாட்டுக்கு இந்த போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க 2 ஆண்டுகள் கால அவகாசம் இருக்கும்.

அந்தவகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷியாவில்தான் நடப்பதாக இருந்தது. ஆனால் ரஷியா- உக்ரைன் போர் காரணமாக இந்த போட்டியை நடத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் நடத்த நான் தயார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து வாய்ப்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், 2 ஆண்டுகளில் மற்ற நாடுகள் செய்யும் ஏற்பாடுகளுக்கும் மேலாக 4 மாதங்களில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து, 186 நாட்டு வீரர்களையும் பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டார்.

கடந்த மாதம் 28-ந் தேதி சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டிகளின் தொடக்க விழா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைத்தார். அவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஆற்றிய உரைகளும் பின்பு நடந்த கலை நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் மிக சிறப்பாக இருந்தன என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளே பெரிதும் பாராட்டினார்கள். இடையில் ஒரு நாள் விடுமுறை இருந்தது.

சென்னையை சுற்றிப் பார்க்க சர்வதேச வீரர்கள் சென்றபோது, தமிழக மக்கள் தங்கள் உறவினர்களை வரவேற்பது போல அன்புடன் உபசரித்தது கண்டு களிப்படைந்தனர்.எல்லாவற்றுக்கும் மேலாக விருந்தோம்பல் கண்டு வீரர்கள் பூரிப்படைந்தனர். நாங்கள் இதுவரையில் வாழை இலையில் சாப்பிட்டது இல்லை. வாழை இலையில் உணவு வகைகளை வைத்து, கையால் அந்த ருசி மிகுந்த சாப்பாட்டை சாப்பிட்ட அனுபவம் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. அதுவும் இட்லி, தோசை, வடை, பொங்கலை சட்னி சாம்பாரோடு சாப்பிட்ட ருசியை நாங்கள் அனுபவித்தது இல்லை என்று ஆனந்தமாக சொன்னார்கள்.

நிறைவு விழா வந்தவுடன் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட்டிலேயே நம்ம சென்னை செஸ் ஒலிம்பியாட்தான் மிக சிறப்பான ஒலிம்பியாட் என்ற எண்ணங்கள் வெளிப்பட்டன. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவேல் ஆரோனை அவரது வயது முதிர்ந்த நிலையிலும் மேடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தது செஸ் உலகுக்கே கிடைத்த கவுரவமாக கருதி கரகோஷம் எழுப்பினர். டிரம்ஸ் சிவமணியின் டிரம்ஸ் நிகழ்ச்சியும், முதல்-அமைச்சரும் டிரம்ஸ் அடித்ததும், ரஷிய பெண் பறக்கும் பியானோவில் வந்தேமாதரம் பாடலுக்கு தலைகீழாக சுற்றி இசை அமைத்ததும் மட்டுமல்லாமல், அனைத்து கலை நிகழ்ச்சிகளும் மெய்மறந்து பார்க்க வைத்தது. இறுதியில் முதல்-அமைச்சர் பேசும்போது சர்வதேச வீரர்களே! நீங்கள் மீண்டும் சென்னைக்கு வர வேண்டும். உங்கள் சகோதரன் இங்கே இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள் என்று சொல்லி முடித்தது அனைவரின் உள்ளத்தையும் உருக்குவதாக இருந்தது. ஆக சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் உலக வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது.


Next Story