பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு


பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு
x

பெருந்தலைவர் காமராஜரின் சீரிய முயற்சியால் கட்டப்பட்ட பல அணைகளே இன்றும், அவரது பெருமைக்கு சாட்சியாக விளங்குகிறது.

பெருந்தலைவர் காமராஜரின் சீரிய முயற்சியால் கட்டப்பட்ட பல அணைகளே இன்றும், அவரது பெருமைக்கு சாட்சியாக விளங்குகிறது. அதில் ஒன்றுதான் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம். ஆண்டுக்கு 70 அங்குலம் மழை பொழியும், மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதியில், ஆண்டுதோறும் பெய்யும் மழைத் தண்ணீர், மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருந்தது. இந்தத் தண்ணீரை கிழக்கு நோக்கி திருப்பி, சமவெளியில் பாயும் ஆறுகளுடன் இணைத்து, தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும், கேரளாவில் உள்ள பகுதிகளுக்கும் குடிநீர் வசதியும், பாசன வசதியும் அளிப்பதுதான் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம்.

கேரளாவிலுள்ள பெரியாறு, சாலக்குடி மற்றும் பாரதப்புழா ஆறுகளின் துணை ஆறுகளை பயன்படுத்தும் கூட்டுத் திட்டமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில் 18 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்கலாம். காமராஜரின் பெயர் சொல்லும் இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்துதான் திருமூர்த்தி, ஆழியாறு அணைக்கு நீர் வருகிறதே தவிர, இந்த அணைகளுக்கு என பெரிய அளவில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் இல்லை.

திருமூர்த்தி அணை மூலம் 4¼ லட்சம் ஏக்கரும், ஆழியாறு அணை மூலம் 50 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. பரம்பிக்குளம் அணை நிரம்பி வழிந்ததால், விவசாயிகள் எல்லாம் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி நள்ளிரவில் பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி கேரள பகுதிக்குள்போய் கடலில் கலந்து வீணாகியது மட்டுமல்லாமல், அங்கு கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனடியாக பரம்பிக்குளம் அணைக்கு சென்று பார்வையிட்டு, தன் வேதனையை தெரிவித்ததுடன், தண்ணீரின் அளவு குறைந்ததும், மதகுகளை சரிசெய்யும் பணியை தொடங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அணையின் 3 மதகுகளில் ஒரு மதகு உடைந்ததால், இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் வீணாகிவிட்டது. இவ்வளவு தண்ணீர் வீணாகிப் போய்விட்டதால், அடுத்த ஆண்டு மழைவரும் வரை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அந்த அணையை பார்வையிட்டபோது கூறினார். இப்போது, 1¼ லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் நிலையும், அடுத்து பாசனத்துக்கு தயாராக உள்ள 1¼ லட்சம் ஏக்கர் சாகுபடியும் கேள்விக்குறியாகிவிட்டது. இதுவரை 4½ மாதத்துக்கு தேவையான தண்ணீர் வீணாகிவிட்டது என்று கூறுகிறார் அவர்.

பரம்பிக்குளம் அணையின் பராமரிப்பை தமிழக அரசுதான் மேற்கொண்டிருக்கிறது. அங்கேயே பொறியாளர்கள் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பணியாளர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும், இந்த மதகு சரியாக பராமரிக்கப்படவில்லையோ என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணை மதகுகளும், 4 ஆண்டுகளுக்கு முன்பு முக்கொம்பு அணை மதகுகளும், இதுபோல பாதிப்புக்கு உள்ளாகின. எனவே, அனைத்து அணைகளையும் ஆண்டு முழுவதும் பராமரிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். எல்லா அணைகளிலும் நீர்ப்பாசன உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள 24 அணைகள் மட்டுமல்லாமல், அனைத்து அணைகளையும் பராமரிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். உடனடியாக, அணைப் பாதுகாப்பு தொடர்பாக, நல்ல ஆலோசனைகள் வழங்க, நீர்வளத்துறையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மூத்த பொறியாளர்களும் கொண்ட நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story