வலி குறைந்து இருக்கிறது; ஆனால் போகவில்லை


வலி குறைந்து இருக்கிறது; ஆனால் போகவில்லை
x

கொரோனா நேரத்திலும் சரி, இப்போதும் சரி, மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்.

கொரோனா நேரத்திலும் சரி, இப்போதும் சரி, மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை கடத்துவது கடும் புயலுக்கிடையே படகை செலுத்துவது போல இருக்கிறது. விலை உயர்ந்த சில பொருட்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளலாம். ஆனால் சில அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டால், அது என்ன விலையானாலும் சரி, மிகுந்த கஷ்டத்துக்கிடையே அதை வாங்கி பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். அந்தவகையில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாசை பயன்படுத்தித்தான் தீர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் சமையல் கியாஸ் விலை கடந்த மாதத்தில் மட்டும் முதலில் சிலிண்டருக்கு ரூ.50-ம், பிறகு சில நாட்களில் ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. இப்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,018.50 ஆக இருக்கிறது.

சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. இதன் பயன்பாடும் குறைந்துவிட்டது. சில வீடுகளில் வெந்நீர் போடுவது போன்ற சில பயன்பாட்டுக்கு விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். கடந்த மாதம் 21-ந் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமரின் ஏழை மக்களுக்கான உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 கோடி பேர் பயனாளிகளாக இருக்கிறார்கள் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். கடந்த 2021-2022 நிதியாண்டில் உஜ்வாலா திட்ட பயனாளிகளில் 90 லட்சம் பேர் சிலிண்டர் வாங்கவே இல்லை என்றும், மேலும் ஒரு கோடி பேர் முழு ஆண்டிலும் ஒரே ஒரு சிலிண்டர் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே இந்த மானியத்தை உஜ்வாலா பயனாளிகளோடு மட்டும் நிறுத்தாமல் சமையல் கியாஸ் வழங்கப்படும் அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.200 என முடியாவிட்டால் அதில் பாதியாவது வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இதுபோல பெட்ரோல்-டீசல் விலை கடந்த பல நாட்களாக 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. இதன் காரணமாக மக்கள் பாதிப்பு ஒருபுறம் இருக்க, இதன் தாக்கத்தால் அனைத்து பொருட்களின் விலையும் கைக்கு எட்டாத உயரத்துக்கு சென்றுவிட்டது. மக்களின் போக்குவரத்து செலவுக்கு வருமானத்தில் பெரும்பகுதி சென்றுவிடுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 ஆகவும் சென்றது. நிர்மலா சீதாராமன் மத்திய கலால் வரியில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.6-ம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் சில்லரை விலை பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறைந்துவிடும் என்றும் அறிவித்தார்.

இந்த வரி குறைப்பினால் மத்திய அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசு குறையவில்லை. லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசுதான் குறைந்ததுள்ளது. டீசலுக்கு விலை ரூ.7 குறையவில்லை. 6 ரூபாய் 70 காசுதான் குறைந்துள்ளது. ஏன் இந்த நிலை என்றால், மத்திய அரசாங்கம் வரி குறைப்பு செய்த அதேநேரத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மீதான அடிப்படை விலையை லிட்டருக்கு 58 காசுகளை உயர்த்திவிட்டது. பொதுமக்களை பொறுத்தமட்டில், மத்திய அரசாங்கத்தின் வரி குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் போதாது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் எற்பட்டுள்ள வலி லேசாக குறைந்துள்ளது. ஆனால் முழுமையாக போகவில்லை. அப்படிப்பட்ட நிலையை மத்திய அரசும், தமிழக அரசும் ஏற்படுத்தவேண்டும் என்றே மக்கள் கோருகிறார்கள்.


Next Story