வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பிரதமரும், முதல்-அமைச்சரும் மும்முரம்!


வேலைவாய்ப்புகளை வழங்குவதில் பிரதமரும், முதல்-அமைச்சரும் மும்முரம்!
x

பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக உள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக உள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஜூன் மாதம், "அடுத்த 1½ ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் 10 லட்சம் பேர் வேலைக்காக தேர்வு செய்யப்படுவார்கள்" என்று அறிவித்தார். பிரதமரின் உத்தரவுப்படி, மத்திய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சகங்களும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், தற்போது அந்தந்த துறைகளில் இருக்கும் காலியிடங்களை நிரப்பும் வகையில், எந்திர கதியில் செயல்படுகின்றன.

இதை நிறைவேற்றும் விதமாக, 10 லட்சம் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் இயக்கத்துக்கான வேலைவாய்ப்பு முகாமை சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கிவைத்தார். அப்போது 75 ஆயிரம் புதிய பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 75 ஆயிரம் பேரும் மத்திய அரசாங்கத்திலுள்ள 38 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று பணியில் சேர்ந்தனர். மத்திய ஆயுத படையில் காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், ஸ்டெனோக்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், பல்வகை பணி செய்வோர் உள்பட பல பணிகளுக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்காக, சென்னையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு ரெயில்வே, தபால் இலாகா, மத்திய ரிசர்வ் போலீஸ், வருமானவரி, பொதுத்துறை வங்கிகள் போன்ற பல்வேறு பணிகளுக்காக 255 பேர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கினார். இதேபோல், கோவையில் 250 பேருக்கும், புதுச்சேரியில் 57 பேருக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.

பிரதமரின் இந்த முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக மிக தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் வகையில், அரசு பணிகளுக்கான தேர்வுகள் ஜரூராக நடந்துவருகிறது.

காவல்துறையில் 10 ஆயிரம் பேர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடித்தவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளனர். 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் இப்போது பயிற்சியில் இருக்கிறார்கள், மேலும் 444 பேருக்கு தேர்வு நடந்துவருகிறது. இதுதவிர 6 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அதற்குப்பின் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, காவல்துறையில் காலிப்பணியிடம் இல்லை என்றநிலை உருவாகும் என்கிறார், டி.ஜி.பி. சைலேந்திரபாபு. இதுமட்டுமல்லாமல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற ஒரு லட்சமாவது பணி ஆணையை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் இதுபோல வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பை பெருக்க அவர் நடத்தும் முயற்சிகள் போற்றுதலுக்குரியது. அரசு பணிகள் மூலம் மட்டுமே தேவைப்படும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியாது. தனியார் பங்களிப்பும் மிகமிக அவசியமானதாகும். எனவே, அதிக வேலைவாய்ப்புகளைத் தரும் தனியார் நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் ஊக்கச்சலுகைகளை வழங்கவேண்டும். வேலைக்கு ஆள் தேவை என்றநிலை உருவாகவேண்டுமே தவிர, வேலை இல்லை என்றநிலை மறைந்து போகவேண்டும்.


Next Story