பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு வந்த சிக்கல்


பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு வந்த சிக்கல்
x

‘ஆணுக்கு பெண் சமம்’ என்பது நமது முன்னோர் வகுத்துத்தந்த நியதி ஆகும்.

'ஆணுக்கு பெண் சமம்' என்பது நமது முன்னோர் வகுத்துத்தந்த நியதி ஆகும். ஆனால், பெண்களுக்கான இடஒதுக்கீடு வந்தவுடன், அரசு பணிகளில் ஆண்கள் பெறும் இடங்களைவிட பெண்கள் மிக அதிகமான இடங்களில் தேர்ச்சி பெற்று, அரசு பணிகளில் சேர்ந்து விடுகிறார்கள். 1989-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாட்டில் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட ஒரு சட்டத்தை கொண்டுவந்து அமல்படுத்தினார். சட்டசபையில் இப்போது பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இன்றும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட தமிழக அரசு தேர்வாணைக்குழு 18 துணை கலெக்டர்கள், 19 டி.எஸ்.பி.க்கள் உள்பட 66 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவுகளில் 57 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அதிகமாக 86.3 சதவீதம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். இதுபோல, 1,141 கால்நடை உதவி மருத்துவர் தேர்வில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 342 பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தேர்வில் கலந்துகொண்டவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், 424 பெண்கள் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். ஆனால், தவறான நடைமுறைகள் மேற்கொண்டதன் காரணமாக, 544 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

2013, 2021, 2022-ம் ஆண்டுகளிலும், இதுபோல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை கடந்த 7-ந் தேதி ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்து ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "இந்திய அரசியல் சட்டம் அரசு பணிகளில் பெண்களுக்கென தனியாக இடஒதுக்கீடு அளிப்பதை அனுமதிக்கவில்லை. மாறாக அரசியல் சட்டம் 16 (2) ஆண்-பெண் என அரசு பணிகளில் வேறுபாடு அளிப்பதை தடை செய்துள்ளது. மேலும், இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கும் எதிரானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முதலில் பெண்களுக்கு 30 சதவீத இடங்களை மொத்தமாக வழங்கிவிட்டு, மீதமுள்ள 70 சதவீத இடங்களில் சமூக ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யும்போது, அதிகமாக பெண்கள் தேர்ச்சிபெற்று விடுகிறார்கள். இதனால் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறாத ஆண்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். எடுத்துக்காட்டாக, கால்நடை மருத்துவர் தேர்வில் பின்பற்றப்பட்ட தவறான நடைமுறை காரணமாக 337 மதிப்பெண் பெற்ற ஆண் தேர்வு பெறாத நிலையில், 279.25 மதிப்பெண் பெற்ற பெண் தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் முதலில் 69 சதவீத அடிப்படையில், சமூக ரீதியான இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும். அதில் 30 சதவீத இடஒதுக்கீடு அளவு பெண்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால், தனியாக இதற்கென 30 சதவீத இடஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 30 சதவீத இடம் இல்லையென்றால், அந்த அளவு பெண்கள் தேர்வாகும் பட்டியலில் கடைசியில் இருக்கும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை, தேர்வு பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம்" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு இரு வகையான கருத்துகள், விமர்சனங்கள் வருகின்றன. "இது நல்ல தீர்ப்பு, வரவேற்கத்தக்கது" என்று ஒரு சாராரும், "பெண்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீதம் என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த சட்டம். அதற்கு மேல் சமூக ரீதியாகவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இதில் கோர்ட்டு தலையிட முடியாது" என்று மற்றொரு சாராரும் கூறுகிறார்கள். எனவே, அரசு இதுதொடர்பாக ஒரு முடிவை எடுத்து நடவடிக்கை மேற்கொண்டால் நல்லது. ஒன்று செய்; நன்று செய்; அதை இன்று செய் என்கிறார்கள் பலர்.


Next Story