கொரோனா பரவலையும், குரங்கு அம்மை நுழைவதையும் தடுக்க வேண்டும்


கொரோனா பரவலையும், குரங்கு அம்மை நுழைவதையும் தடுக்க வேண்டும்
x

2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா முதலில் கேரளாவில்தான் காலெடுத்து வைத்தது.

2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா முதலில் கேரளாவில்தான் காலெடுத்து வைத்தது. இப்போது குரங்கு அம்மையும் கேரளாவில்தான் நுழைந்துள்ளது. கொரோனாவையே முழுவதுமாக விரட்டி அடிக்க முடியாத நிலையில், குரங்கு அம்மையும் இப்போது சேர்ந்துவிட்டது. சீனாவின் உகான் நகரில், மருத்துவம் படித்துவந்த கேரள மாணவியால், கொரோனா அடியெடுத்து வைத்தது. இப்போது ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரம் வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் விமானத்தில் அடுத்தடுத்த இடங்களில் அமர்ந்திருந்த பயணிகளின் சொந்த மாவட்டங்களான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கேரள அரசாங்கம் சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர, மங்களூரு விமானநிலையத்தில் வந்து இறங்கிய மற்றொரு இளைஞருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவின் அண்டை மாநிலம் தமிழ்நாடு. எனவே, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் கேரளாவையொட்டிய எல்லை பகுதிகள் 13 இருக்கின்றன. அந்த பகுதிகளில் எல்லாம் தீவிர தடுப்பு கண்காணிப்பு பகுதிகளை மேற்கொள்ள மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களிலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஏனெனில், குரங்கு அம்மை இப்போது ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்பட 63 நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. அந்த பட்டியலிலுள்ள இந்தியாவில், தமிழ்நாடு பாதிப்புக்குள்ளாகிவிடக்கூடாது. மேலும் முன்னெச்சரிக்கைக்காக பெரிய மருத்துவமனைகளில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக தனி வார்டுகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இதற்கெல்லாம் அவசியம் ஏற்படாதநிலை வருவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்த நோய் கொரோனா போல ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பாகும். பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள், அவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தியவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பு இருக்கிறது. இது தவிர, அவர்கள் மூக்கிலிருந்து வரும் சளி துளிகள் மூலமாக, காற்றில் பரவும் அபாயம் இருக்கிறது. 2 வாரங்கள் முதல் 4 வாரங்களுக்கு இதன் பாதிப்பு இருக்கும்.

காய்ச்சல், தோலில், முகத்தில் தொடங்கி, கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் சிறுசிறு கொப்புளங்கள் ஏற்படுவது, நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைப்பிடிப்பு, உடல்சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை குரங்கு அம்மை நோய் பாதிப்பின் அறிகுறிகளாகும். கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, மூச்சுவிடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகியவை ஒருவர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டதற்கு அடையாளமாகும்.

இந்த நோய் வராமல் தடுக்க வேண்டுமென்றால், கொரோனா பாதிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்ற என்னென்ன செய்கிறோமோ, அதையே செய்தால் போதுமானது. பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பை தவிர்த்தல், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் மற்றும் உயிர் கவசமான முககவசம் அணிதல் ஆகியவற்றை எல்லோரும் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களுக்கு பரவுவதைத்தடுக்க முககவசம் அணியவேண்டும். இப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இரண்டு வேலை இருக்கிறது. துப்பாக்கி சுடும் போட்டியில், ஒரே நேரத்தில் வானத்தில் பறக்க விடப்படும் 2 தட்டுகளை சுட்டுவீழ்த்தும் 'டிராப் அண்டு ஸ்கீட்' போட்டிபோல, இப்போது கொரோனா பரவலையும் கட்டுப்படுத்தவேண்டும். குரங்கு அம்மை வராமலும் தடுக்கவேண்டும். இதில் பொதுமக்களின் பங்கும் இருக்கிறது. பூஸ்டர் டோஸ் உள்பட தடுப்பூசி போடாத அனைவரும் உடனடியாக போட்டுக்கொள்ளவேண்டும். அனைவரும் தவறாமல் முககவசம் அணியவேண்டும்.


Next Story