பரந்தூர் விமான நிலையம் போல விமானப்பயிற்சி பள்ளிக்கூடமும் வேண்டும்


பரந்தூர் விமான நிலையம் போல விமானப்பயிற்சி பள்ளிக்கூடமும் வேண்டும்
x

கடந்த மாதம் 26-ந்தேதி தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்று, சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய விமான நிலையங்களின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக வலியுறுத்தி விவாதித்தார்.

கடந்த மாதம் 26-ந்தேதி தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்று, சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து, தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய விமான நிலையங்களின் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக வலியுறுத்தி விவாதித்தார். அதில் முக்கியமாக இடம் பெற்றது, சென்னை அருகே 2-வது விமான நிலையம், அதாவது பசுமைவெளி விமான நிலையத்தை எங்கு அமைப்பது? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

24 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய விமானப் போக்குவரத்து மந்திரி ஆனந்தகுமார், சென்னையில் ஒரு புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை இருக்கிறது என்று அறிவித்தார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, அந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே இந்த திட்டத்தை நிறைவேற்ற துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனாலும் இதற்கான திட்டப்பணிகள் மெதுவாகவே நடந்தது. முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பதவியேற்றவுடன் இந்த திட்டப்பணிகளை வேகப்படுத்தினார்.

கடந்த ஜனவரி மாதத்தில், தமிழக அரசு இந்த 2-வது விமான நிலையத்தை படாளம், திருப்போரூர், பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒரு இடத்தில் தொடங்கலாம் என்று தெரிவித்தது. பிப்ரவரி மாதத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் 4 இடங்களையும் வந்து பார்வையிட்டது. மார்ச் மாதத்தில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இடங்களில், ஒரு இடத்தில் தொடங்கலாம் என்று சாத்தியக்கூறு ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய விமானப்போக்குவரத்து மந்திரியுடன் தங்கம் தென்னரசு சந்தித்தபோதே, எங்கு தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க. உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு, நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது, மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துணை மந்திரி ஜெனரல் வி.கே.சிங் இந்த 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த விமான நிலையத்துக்காக குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கல்பாடி, எடையார்பாக்கம், அக்கமாபுரம், பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு, மேல் பொடவூர் போன்ற சில பகுதிகளில் 4,800 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால், விவசாய நிலங்களை, வீடுகளை ஏராளமானவர்கள் இழக்க வேண்டிய நிலை உருவாகும். பாதிக்கப்படும் அனைவருக்கும் புது வாழ்வு தொடங்க உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த புதிய விமான நிலையம் சென்னையிலிருந்து 69 கிலோ மீட்டர் தூரத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைய இருக்கிறது. இரு ஓடுதளங்களுடன் ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் படைத்தது. இப்போதைய திட்டமதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாகும். இந்த முயற்சியின் வெற்றிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அனுமதி வழங்கிய மத்திய அரசாங்கம் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரு கோரிக்கை நிறைவேறிவிட்டது. அடுத்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற தொடர்ந்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் விமானிகளுக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று ஓ.பி.ரவீந்திரநாத் மக்களவையில் கேட்ட கேள்விக்கு மத்திய சிவில் போக்குவரத்து துணை மந்திரி பதில் அளித்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு விமான பயிற்சி பள்ளிக்கூடத்தை தொடங்கவேண்டும், அதை கோவில்பட்டியில் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பெரிய விமானங்கள் வந்து இறங்கும் வகையில், விரிவாக்கம் செய்யவேண்டும், மதுரை, தூத்துக்குடியில் இரவு நேரத்தில் விமானங்கள் இறங்க வசதிவேண்டும் என்பது உள்பட தமிழக அரசின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.


Next Story