இந்த மத நல்லிணக்கம்தான் நாட்டுக்கு இப்போது தேவை


இந்த மத நல்லிணக்கம்தான் நாட்டுக்கு இப்போது தேவை
x

தமிழ்நாடு இந்தியாவுக்கு பல நற்செயல்களில் வழிகாட்டுகிறது. அதில் முக்கியமானது மத நல்லிணக்கமாகும்.

தமிழ்நாடு இந்தியாவுக்கு பல நற்செயல்களில் வழிகாட்டுகிறது. அதில் முக்கியமானது மத நல்லிணக்கமாகும். ஒரே குடும்பத்திலேயே சகோதரர்களும், சகோதரிகளும் வெவ்வேறு மத நம்பிக்கைகளைக்கொண்டு, தங்கள் பாசத்துக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் வாழும் பூமி இது. மதத்தின் மீது வைக்கும் அன்பு பக்தியானது. அது வெறியாக மாறும்போதுதான் மத மோதல்கள் நடக்கிறது. தமிழக மக்கள் பெரும்பாலும் அடுத்த மதத்தின் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.

இப்போதெல்லாம் பல குடும்பங்களில் மத வேறுபாடு இல்லாமல் திருமணங்கள் நடக்கின்றன. பல இடங்களில் இந்து கோவில்களில் நடக்கும் விழாவில், முஸ்லிம்கள் பங்குகொள்வது மரபாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் அசன பண்டிகைகளுக்கு, அந்த ஊர்களில் இருக்கும் இந்துக்களும் நன்கொடை அளிக்கிறார்கள். அடுத்த மத பண்டிகைகளின்போது எல்லோரும் மிக மகிழ்ச்சியோடு வாழ்த்து சொல்வார்கள். எப்படி நெல்லையில் இருந்து சென்னைக்கு போகும் ஒரு ரெயில் பெட்டியில் இருக்கும் பயணிகள் வெவ்வேறு சாதி, மதம், இனங்களை கொண்டவர்களாக இருந்தாலும், சகஜமாக பயணத்தின்போது பழகும் நிலையில், அவர்கள் அனைவரும் போகும் இடம் ஒன்றுதான் என்பதுபோல, மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவையெல்லாம் காட்டும் வழி ஒன்றுதான் என்பதை அறிந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் இங்கு மற்ற மாநிலங்களைப்போல மதக் கலவரங்கள் இல்லாமல், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாய் விளங்கும் நல்லிணக்க மாநிலமாக இருக்கிறது.

கோவையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சகல பரிசுத்தவான்கள் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஒரு முஸ்லிம் பெண் தலையில் ஹிஜாப் அணிந்தவாறே அருளுரை வழங்கியது மிகவும் பெருமைப்பட வைக்கிறது. கோவையில் ஏ.சலீம் என்பவர் தொடங்கிய ஜீவ சாந்தி அறக்கட்டளையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பெண்கள் என்று அனைத்து சமயத்தினரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆதரவற்றோர், அனாதைகள், ஏழைகள் மற்றும் மருத்துவமனை பிண அறைகளில் வெகுநாட்களாக உரிமை கோரப்படாத உடல்களை சகல மரியாதையுடன் அவரவர் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்வது இவர்களின் முக்கிய பணி. இதுவரை 10 ஆயிரத்துக்கு மேல், இவ்வாறு இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்து இருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களையும் அடக்கம் செய்து உதவினார்கள்.

கொரோனா நேரத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த அனைத்து மதத்தினரையும் சந்தித்து, அவரவர் மதத்தினரை வைத்து ஆறுதல் அளித்து, தேவையான உதவிகளை செய்தார்கள். அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக கோவையில் உள்ள சி.எஸ்.ஐ. சகல பரிசுத்தவான்கள் கிறிஸ்தவ ஆலய பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், சாதி, சமய, ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கொரோனா நேரத்தில் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் செய்த சேவைக்காக 7 நிர்வாகிகளை ஆலயத்தில் நடந்த பிரார்த்தனைக்கு அழைத்து, அவர்களை கவுரவிக்க ஏற்பாடுகளை செய்தார். ஆலயத்தில் அந்த நாள் பிரார்த்தனையின் கருப்பொருள் "கடவுள்-அனைத்து மத நம்பிக்கையுள்ள மக்கள்" என்றும் பாதிரியார் சொன்னார். இதில் முத்தாய்ப்பாக ஷெஹனாஸ் பர்வீன் என்ற முஸ்லிம் நிர்வாகி பீடத்தில் நின்று ஆங்கிலத்தில் அருளுரை வழங்கினார்.

"மனித குலத்துக்கு நாங்கள் ஆற்றும் சேவை இறைவன் மீது மட்டுமே எங்களுக்கு உள்ள உண்மையான அன்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இருக்கிறது. இதுபோன்ற பண்புகள்தான் நாட்டுக்கு இப்போது தேவை. எல்லா மதங்களுமே அன்பையும், நல்லிணக்கத்தையும்தான் வலியுறுத்துகிறது. பைபிளில் கூட ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக்கொடுப்பார் (நீதிமொழிகள் 19:17) என்று கூறப்பட்டுள்ளது" என்று அவர் கூறியது, ஆலயத்தில் பலத்த பாராட்டுகளைப் பெற்றது. இந்த மதநல்லிணக்க சம்பவம், "இதுதான் எங்கள் தமிழ்நாடு" என்று நெஞ்சை நிமிர்த்த வைக்கிறது. இதுபோன்ற நல்லிணக்கம் தொடரட்டும், மதம் என்பது ஒரு வழிபாட்டு முறை. அது நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி விடக்கூடாது.


Next Story