வங்கிப் பணிகளில் தமிழ் தெரியாதவர்கள்!


வங்கிப் பணிகளில் தமிழ் தெரியாதவர்கள்!
x

கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில், குறிப்பாக ரெயில்வே, தபால் துறை, வங்கிப் பணிகள் போன்ற பல பணிகளில் தமிழ் தெரியாத அலுவலர்கள், பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில், குறிப்பாக ரெயில்வே, தபால் துறை, வங்கிப் பணிகள் போன்ற பல பணிகளில் தமிழ் தெரியாத அலுவலர்கள், பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, அடிப்படை பணியாளர்கள்கூட வெளிமாநில பணியாளர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, இந்தத் துறைகளின் சேவைகளை பயன்படுத்தி வரும் பொதுமக்களுக்கு தகவல் பரிமாற்றத்தில் பெரிய சிக்கல் இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த ஒரு குடும்பத்தினர், டிக்கெட் பரிசோதகரிடம், தங்கள் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவருக்கு மேல் படுக்கை வேண்டாம், கீழ் படுக்கையில் இடம் வேண்டும் என்று தமிழில் கேட்டுப்பார்த்தபோது, வடமாநிலத்தை சேர்ந்த அந்த டிக்கெட் பரிசோதகர், "என்னால் தமிழில் புரிந்துகொள்ள முடியாது. இந்தியில் சொல்லுங்கள் அல்லது ஆங்கிலத்திலாவது சொல்லுங்கள்" என்று பதில் கூற, அந்தப் பயணிக்கு பெரிய தர்மசங்கடமாகிவிட்டது.

சில பணிகளுக்கு மாநில மொழிகள் தெரிந்திருப்பது கட்டாயம் என்று இருந்தாலும், அதிலும் வடமாநிலத்தினர் எப்படியோ நுழைந்துவிடுகிறார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தமிழில் பெறும் மதிப்பெண்ணைவிட வடமாநிலத்தவர், தமிழில் எப்படி அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்? என்பது புரியாத புதிராக இருந்தது. அதற்கும் இப்போது விடை கிடைத்துவிட்டது.

சமீபத்தில் வடமாநிலங்களை சேர்ந்த பலர், தமிழ்நாட்டில் 10-வது படித்து தேர்ச்சி பெற்றிருப்பதாக போலி சான்றிதழை கொடுத்து, பல்வேறு பணிகளில் சேர்ந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இந்த போலி சான்றிதழ்களை கொடுத்து பெரும்பாலானோர் தபால் இலாகா, எண்ணெய் நிறுவனம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வங்கியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் தன்னாட்சி நிறுவனமான வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம், "வங்கிகளில் கிளார்க் வேலையில் சேர மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை" என்று அறிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பணியாளர்களுக்கான தேர்வு அறிவிப்புகளில், மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று கூறிய நிலையில், இந்த அறிவிப்பு பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனால், 2022-2023-ம் ஆண்டுக்கான புதிய தேர்வில் 843 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ 400 பேர் தமிழ் தெரியாத வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆரம்ப காலக்கட்டத்தில் கிராமங்கள் அல்லது சிறு நகரங்களிலுள்ள வங்கிக் கிளைகளில்தான் பணிபுரிய வேண்டும். அங்கெல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்று விரும்புபவர்கள், ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஏதாவது சேவைக்காக சென்றால், அங்குள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பேசும் தமிழ் தெரியாமல், அவர்களின் தேவை என்னவென்றே தெரியாத நிலையில், தமிழ் தெரிந்த மற்ற பணியாளர்களிடம் கையை காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்கு தமிழ் தேவையே இல்லை என்றநிலை ஒருபோதும் வந்துவிடக்கூடாது. தமிழில் பேச, எழுத, புரிந்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும். அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளில், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களை, தமிழ்நாட்டில் பணிபுரிய தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால், கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்கவேண்டும் என்று சொன்னால், அவர்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கும் வேலை கிடைக்கும், தமிழக இளைஞர்களுக்கும் அதிக அளவில் வேலை கிடைக்கும்.

அரசுப் பணி, வங்கிப் பணிகள் எல்லாம் மக்களுக்கு சேவை ஆற்றுவதற்கே என்றநிலை தொடர வேண்டுமானால், தமிழ்நாட்டில் பணியாற்றும், எந்தப்பணியில் உள்ளவர்கள் என்றாலும், தமிழ் தெரிந்திருக்கவேண்டும் என்பதை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story