பள்ளிக்கூடங்களில் பாரம்பரிய உடை!


பள்ளிக்கூடங்களில் பாரம்பரிய உடை!
x

மனித வாழ்க்கையில் மாணவர் பருவம் என்பது மிகவும் மகிழ்ச்சியானது.

மனித வாழ்க்கையில் மாணவர் பருவம் என்பது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த பருவத்தில்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன், இந்த சாதி, அந்த சாதி, இந்த மதம், அந்த மதம், பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் நண்பர்களே என்ற உணர்வு மேலோங்கி நிற்கும். பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் தோன்றிய நட்புதான் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். என் பள்ளிக்கூட நண்பர், என் கல்லூரி நண்பர் என்று முதியோர்கள் கூட ஒருவரையொருவர் பற்றி பேசும்போது பெருமைப்பட கூறுவது வழக்கம். பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்ற வகையில்தான் சீருடை வழங்கப்படுகிறது. அதுவும் அரசே இலவச சீருடையை வழங்குகிறது. அப்படிப்பட்ட மாணவ வாழ்க்கையில் அவ்வப்போது உரசல்கள், நெருடல்கள் இருந்தாலும் அடுத்த நிமிடம் அதையெல்லாம் மறந்து பழகும் பண்பாட்டை கொண்டதுதான் மாணவர் பருவம். பேராசிரியை வெ.இன்சுவை சொல்வது போல, எழுதவும், வாசிக்கவும், மதிப்பெண் பெறவும் உதவுவது மட்டுமே கல்விக்கூடங்களின் பணி இல்லை. அங்கே கல் சிற்பமாகிறது. களிமண் உருவம் பெறுகிறது. ஆளுமைகள் உருவாகின்றன. தரிசு நிலங்களாக உள்ளே நுழைபவர்கள் செழிப்பான சோலைகளாக, தோப்புகளாக மாறும் இடம் கல்விக்கூடங்கள். பள்ளிக்கூட வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என்பது ஆனந்தத்தின் உறைவிடம். இது நிச்சயமான உண்மை. இதுதான் அனைத்து மாணவர்களின் உணர்வும் கூட.

இந்தநிலையில் அருணாசல பிரதேச மாநிலத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அங்குள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் குழந்தைகள் நலச்சங்கம் நடத்திய கூட்டத்தில், ஏராளமான பள்ளிக்கூட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அருணாசல பிரதேச மாநிலம் பழங்குடியினர், அதில் உட்பிரிவுகள் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் என்று பல பிரிவுகளை கொண்டது. இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் வாரம் ஒரு முறை மாணவர்கள் அவர்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு வரவேண்டும். ஆனால் பாரம்பரிய நகைகளை அணிந்துகொண்டு வருவதோ, பாரம்பரிய கத்தியை கொண்டுவருவதோ கூடாது என்று அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நகைகளை அணிந்து கொண்டுவரலாம் என்ற உத்தரவிருந்தால், நிச்சயமாக அங்கே சமத்துவத்தை பார்க்க முடியாது. ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் இந்த பாரம்பரிய உடையை மாணவ-மாணவிகள் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாரம்பரிய உடையை அணிந்து வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதால் உள்ளூர் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். இதன் மூலம் நெசவாளர்களும் வாழ்வுபெறுவார்கள் என்று அங்கே காரணங்கள் கூறப்படுகிறது.

அருணாசல பிரதேசத்தில் பாரம்பரிய உடையை, கலாசாரத்தை மீட்டெடுக்கும் நிலை இருப்பதால் இந்த முடிவு. ஆனால் பொதுவாக ஒரு நாட்டிலோ, மாநிலத்திலோ கட்டுப்பாடுகளை, தடைகளை மேலும், மேலும் விரித்துக் கொண்டு இருக்காமல் தளர்வுகளை அதிகரிக்க வேண்டும். கட்டுப்பாடுகள், தடைகளை விரித்துக் கொண்டு இருந்தால் இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, சட்டமீறல் என்பது போன்ற சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். நல்ல வேளையாக தமிழக இளைஞர்களும், இளம்பெண்களும் இப்போதெல்லாம் நமது கலாசாரத்தை மறக்கவில்லை, பின்பற்றாமலும் இல்லை. தமிழக இளைய சமுதாயத்தினர் வேட்டி, சேலை அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். முக்கிய பண்டிகைகள், நிகழ்வுகள், திருமணம் போன்ற நாட்களில் நமது இளம் வயதினரை வேட்டி, சேலையிலேயே அதிகம் பார்க்க முடிகிறது. பாரம்பரிய உடை அணிவதில் ஒரு கவுரவம் இருக்கிறது என்ற பெருமைமிகு உணர்வு அவர்களிடம் உள்ளது. நகைகளில் கூட பாரம்பரிய நகைகளுக்கு அதிக கிராக்கி இருக்கிறது. தமிழர்களுக்கே உரித்தான கலாசாரத்தை பேணி காப்பதிலும் இளைய சமுதாயம் சளைத்ததல்ல. மொத்தத்தில் தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற வகையில் தமிழக இளைஞர்கள் தமிழக கலாசாரம், பாரம்பரியம், பண்பாட்டை அப்படியே பின்பற்றுவது பாராட்டுக்குரியது, போற்றுதலுக்குரியது.


Next Story