இருபெரும் தலைவர்களின் இணையற்ற பேச்சு!


இருபெரும் தலைவர்களின் இணையற்ற பேச்சு!
x

‘எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி’ என்று பழங்காலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு.

'எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி' என்று பழங்காலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. அதுபோல, 'எல்லா சாலைகளும் சென்னையை நோக்கி' என்ற வகையில், மாமல்லபுரத்தில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. அதிலும் தொடக்க விழா நிகழ்ச்சியும், போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் விருந்தோம்பல் உள்பட அனைத்து வசதிகளும் 187 நாடுகளிலும் இருந்து வந்துள்ள வீரர்கள், நிர்வாகிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த விழாவுக்கு வந்த பிரதமரை வரவேற்பதற்காக, வழிநெடுகிலும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, குறிப்பாக சென்டிரல் ரெயில் நிலையம் அருகே மும்மத தலைவர்களைக்கொண்டு துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்து இருந்த ஏற்பாடுகள் மிக எழுச்சியாக இருந்தது. எல்லோரும் தொடக்க விழா ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை மேம்பாட்டு முதன்மை செயலாளர் அபூர்வாவிடம் வாழ்த்து தெரிவித்தபோது, "எல்லா புகழும் முதல்-அமைச்சருக்கே!, அவரது ஆலோசனை, உத்தரவைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். 'அன்சங் ஹீரோ' என்பார்கள். அதுபோல தொடக்க நாள் கலை நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் ஆலோசனை கூறியது மட்டுமல்லாமல், அதற்கான ஏற்பாடுகளை செய்தது, ஏற்பாட்டு குழு உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின்தான். குறிப்பாக, 'தமிழ்மண்' என்ற பெயரில் தமிழ், தமிழ் இனம், தமிழர்களின் வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறை பறைசாற்றும் முப்பரிமாண காட்சிக்கு குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதற்குரிய விளக்கங்களையும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிநாட்டினருக்கு புரியும் வகையில் கமல்ஹாசனை வைத்து தயாரிக்க ஆலோசனை மட்டுமல்லாமல், அவரிடம் பேசி ஏற்பாடுகளைச் செய்ததும் உதயநிதி ஸ்டாலின்தான். வெளிநாட்டுக்கு புறப்பட்டுக்கொண்டு இருந்த கமல்ஹாசனிடம், ஒரு மொபைல் வேனை அனுப்பி பதிவு செய்தார். கலை நிகழ்ச்சிகளின் வெற்றிக்கு முழு முதல் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான்" என்றார்.

தொடக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது உரையுமே போற்றும்படியாகவும், அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது. முதல்-அமைச்சரின் பேச்சுக்காகவும், அவரது விழா ஏற்பாடுகளுக்காகவும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையே மனதார பாராட்டியிருக்கிறார். இந்த விழாவுக்கு வந்த பிரதமர், தமிழர்கள் அணியும் வேட்டி, சட்டை, துண்டுடன் வந்தது மட்டுமல்லாமல், எப்போதும்போல 'வணக்கம்' என்று கூறி தன் பேச்சை தொடங்கினார். திருக்குறளை மேற்கோள்காட்ட அவர் தவறவில்லை. "இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு". அதாவது, ஒட்டுமொத்த வாழ்வும், நாம் சம்பாதிப்பதும் நமது இல்லத்துக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்கத்தான் என வள்ளுவர் கூறியிருக்கிறார் என பெருமைபட குறிப்பிட்டார்.

தமிழ்நாடுதான் செஸ் விளையாட்டின் சக்கரவர்த்தி. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். சிறந்த மனம், துடிப்பான கலாசாரத்தின் இல்லமாக தமிழ்நாடு உள்ளது. உலகின் பழமையான மொழி தமிழ்மொழி என்று தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் புகழாரம் சூட்டினார். விளையாட்டில் தோற்பவர்கள் இல்லை. அவர்கள் வெற்றியாளர்கள், எதிர்கால வெற்றியாளர்கள் என்ற பாராட்டத்தக்க, அனைத்து விளையாட்டு வீரர்களையும் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை கூறினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையும் என்றென்றும் நினைவுகூரத்தக்க வகையில் இருந்தது. செஸ் ஒலிம்பியாட் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை, என்று தன் பேச்சை தொடங்கிய அவர், இந்த போட்டியை நடத்துவதன் மூலம் தமிழ்நாட்டின் மதிப்பு உயர்கிறது என்றார். மொத்தம் இந்தியாவில் 73 கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த விளையாட்டில் தமிழ்நாடு இந்தியாவின் செஸ் தலைநகராக திகழ்கிறது. 1961-ம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாக புகழ் பெற்ற, பல திறமையாளர்களை ஊக்குவித்த மானுவல் ஆரோன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நமக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய பெருமை ஆகும் என்றார். எந்த ஒரு விழா என்றாலும் அது நீண்ட நெடுங்காலம் மக்களால் பேசப்படவேண்டும். அந்த வகையில், இருபெரும் தலைவர்களின் பேச்சும், கலை நிகழ்ச்சிகளும் சரித்திரத்தில் முத்திரை பதிக்கும்.


Next Story