தண்ணீர் வாரம்


தண்ணீர் வாரம்
x

உலகில் எல்லோருக்கும் காற்று, தண்ணீர், உணவு என்பது உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

உலகில் எல்லோருக்கும் காற்று, தண்ணீர், உணவு என்பது உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அய்யன் வள்ளுவர் கூட "நீர்இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு" என்றார். அதாவது நீர் இல்லாமல் உலகம் வாழமுடியாது. அந்நீரும் மழையில்லாது உண்டாகாது. நீர் பெருக மழை வேண்டும். அத்தகைய மிகவும் மதிப்பு வாய்ந்த தண்ணீரையும், நீர் ஆதாரங்களையும் நிர்வகிக்க, வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? எத்தகைய முதலீடுகள், புதுமை முயற்சிகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆராய சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் உலகம் முழுவதிலும் உள்ள நிபுணர்கள் விவாதிக்கும் கருத்தரங்கு 10 நாட்களுக்கு நடந்து வருகிறது.

1991-ம் ஆண்டு முதல் இந்த நகரில் உள்ள, 'சர்வதேச தண்ணீர் நிறுவனம்' ஆய்வுகளை நடத்திவருகிறது. ஆண்டுதோறும் உலக தண்ணீர் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் வாரம் கடந்த 23-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதிவரை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு, 'காணாத ஒன்றை காண்பது; தண்ணீரின் மதிப்பு' என்பதாகும். தண்ணீரின் பயன்பாடு அதிகமாகிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், வான் மழையினால் கிடைக்கும் தண்ணீரை சேமித்து, பயன்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். உலகில் உள்ள மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா வரப்போகும் ஆண்டுகளில் சீனாவை முந்தி முதல் இடத்துக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகைதான் 17 சதவீதம். ஆனால் நீர் ஆதாரம் 4 சதவீதம்தான். நாட்டில் உள்ள நிலத்தடி நீரில் 90 சதவீதம் நீர்ப்பாசனத்துக்குத்தான் அதாவது விவசாயத்துக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு உணவு தானியத்தை விளைவிக்க பயன்படுத்தும் தண்ணீரைவிட இந்திய விவசாயிகள் 2 முதல் 4 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆற்று வளம் அதிகமாக இல்லை. வடகிழக்கு மழையினால் நமக்கு அதிக பயன் இல்லை. தென் மேற்கு பருவமழைதான் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பரவலாக பெய்து, நமது தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்யும்போது, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரு மகிழ்வடைவார்கள்.ஏனெனில் அங்கு தேக்கி வைக்க முடியாமல் வடிகாலாக மேட்டூர் அணைக்கு பாய்ந்தோட விடுவார்கள். இந்த ஆண்டு மேட்டூர் அணை மே 24-ந் தேதி திறந்து விடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதிதான் திறந்துவிடப்படும் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே திறந்துவிடப்பட்டது.

நடுவர்மன்ற தீர்ப்பில் கூறப்பட்ட கால அட்டவணையின்படி ஜூன் 1 முதல் ஆகஸ்டு 24-ந்தேதி வரை 76 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும். ஆனால் இந்த ஆண்டு மிக அதிகமாக 289.34 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நமது தேவைக்கு மேல் தண்ணீர் கிடைத்து இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தேவைக்கு அதிகமாக வரும் தண்ணீரை திருப்பிவிட்டு தண்ணீர் தேவையுள்ள பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைப்பதற்கான திட்டங்கள் பெரிய அளவில் வகுக்கப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது. இதுபோல வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் சேமித்து வைப்பதற்கான திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படுகிறது என்றாலும், இன்னும் அதிகமான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கிறது.


Next Story