வரவேற்கிறோம் நமது பிரதமரை; எதிர்பார்க்கிறோம் நிறைய அறிவிப்புகளை!


வரவேற்கிறோம் நமது பிரதமரை; எதிர்பார்க்கிறோம் நிறைய அறிவிப்புகளை!
x

பொதுவாக டெல்லியில் இருந்து பிரதமர், மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் சரி, தமிழக முதல்-அமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சரி, என்ன புதிய அறிவிப்புகளை வெளியிடப்போகிறார்களோ? என்று மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பது வழக்கம்.

பொதுவாக டெல்லியில் இருந்து பிரதமர், மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் சரி, தமிழக முதல்-அமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சரி, என்ன புதிய அறிவிப்புகளை வெளியிடப்போகிறார்களோ? என்று மக்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்ப்பது வழக்கம். அந்தவகையில்தான் நேற்று முன்தினம் மேட்டூருக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 77 ஆண்டுகளில் இல்லாத வகையில், மே மாதத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார். இவ்வளவு சீக்கிரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால், அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக கடைமடை பகுதிகளுக்கும் சென்று குறுவை சாகுபடியில் 5.22 லட்சம் ஏக்கரில் பயிரிட வழிவகுத்துள்ளது. அதன்பிறகு சேலம் ஆத்தூரில் நடந்த, "ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை" விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார். எப்படி அணையை அவர் திறந்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல தண்ணீர் சீறிப் பாய்ந்ததோ, அதுபோல ஆத்தூரில் அவரது பேச்சும் அமைந்திருந்தது. ஆணித்தரமாக அவர் பல கருத்துகளை சொன்னாலும், இப்போது கூறப்படும் பல விமர்சனங்களுக்கு விடையளிக்கும் வகையில், "எவரது பக்திக்கும், எவரது உணர்வுகளுக்கும் தடையாக திராவிட முன்னேற்ற கழக அரசு இருந்ததும் இல்லை, இனியும் இருக்காது என்று கூறி ஆன்மிகத்துக்கு தனது அரசு எதிரானது அல்ல" என்று பட்டவர்த்தனமாக கூறிவிட்டார். அதன்பிறகு சென்னையில் நேற்று நடந்த 2 நிகழ்ச்சிகளிலும் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

அடுத்த சிறப்பாக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு சூறாவளி சுற்றுப்பயணமாக வருகிறார். மாலை 5.10 மணிக்கு சென்னை வரும் அவர் இரவு 7.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். இடைப்பட்ட நேரத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் கலந்து கொள்கிறார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு அவரும், பிரதமரும் ஒரே மேடையில் அமர்ந்து கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்ற வகையிலும் இன்றைய நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு உண்டு. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் மதுரை, விருதுநகருக்கு வரும் வகையிலும், அந்த நிகழ்ச்சிகளில் அவரும் முதல்-அமைச்சரும் ஒன்றாக கலந்து கொள்வதாகவும் பயணத்திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக அந்த விழாக்கள் நடைபெறவில்லை. இன்றைய விழாவில் பிரதமர் ரூ.31,400 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கும், தேனிக்கும் இடையில் ஏற்கனவே இருந்த மீட்டர்கேஜ் ரெயில் பாதைக்கு பதிலாக அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், ரூ.500 கோடி மதிப்பிலான 75 கிலோ மீட்டர் ரெயில் பாதையை தொடங்கி வைக்கிறார்.

இதுபோல தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான ரெயில் திட்டம் உள்பட பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் சென்னை-பெங்களூரு இடையே ரூ.14 ஆயிரத்து 870 கோடிக்கான பறக்கும் சாலை திட்டம், ரூ.1,800 கோடி மதிப்பில் சென்னை எழும்பூர், ராமேசுவரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அடிக்கல் நாட்டும் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி, குறிப்பிட்ட காலக்கெடுவை வரையறுத்து நிறைவேற்றவேண்டும். மேலும் இந்த விழாவில் புதிய அறிவிப்புகளையும் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கவேண்டும். நீட் தேர்வு ரத்து, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி நிலுவையை தரவேண்டும் என்பது உள்பட 14 கோரிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி பிரதமரிடம், முதல்-அமைச்சர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகளையும், புதிய திட்டங்களையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நிறைவாக எங்கள் பிரதமரே! தமிழ்நாட்டுக்கு வருக! வருக! புதிய அறிவிப்புகளை தருக! தருக! என்பதே தமிழக மக்கள் அன்புடன் வெளிக்காட்டும் உணர்வாக இருக்கிறது.


Next Story