இலங்கையில் சீன ராணுவம் குவிப்பா?


இலங்கையில் சீன ராணுவம் குவிப்பா?
x

சீன அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், அந்த நாட்டின் அதிபராக 3-வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், அந்த நாட்டின் அதிபராக 3-வது முறையாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், இந்தியாவுக்கு நல்ல நண்பராக இருப்பார், இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு மேலும்.. மேலும்.. வலுப்பெறும் என்று நாட்டு மக்கள் நம்பி இருந்தாலும், யதார்த்த நிலையில் அப்படி இல்லை.

வடக்கே இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது குவிக்கப்படுகிறது என்றால், தெற்கே தமிழகத்தின் கூப்பிடும் தூரத்தில் உள்ள இலங்கையிலும், ஏதாவது காரணத்தை சொல்லி சீனா தன் கால்தடத்தை அழுத்தமாக பதித்துவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பந்தோட்டா துறைமுகத்தை நீண்ட குத்தகைக்கு எடுத்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி சீனாவின் ஆராய்ச்சி கப்பல் என்ற போர்வையில், யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் அந்த துறைமுகத்தில் சில நாட்கள் நங்கூரமிட்டு நின்றது. இந்த கப்பலில் விண்வெளி மற்றும் செயற்கைகோள்களை வேவு பார்க்கும் வசதியும் இருந்தது. மேலும், ஏவுகணைகளை அனுப்பும் வசதியும் இருந்தது. இந்த கப்பலை இலங்கைக்கு வர அனுமதிக்கக்கூடாது என்று இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தவுடன், முதலில் ஓரிரு நாட்கள் இழுத்தடித்த இலங்கை அரசு பின்பு அனுமதித்தது. அந்த கப்பலும் தன் வேலையை முடித்துவிட்டு திரும்பியது.

தொடர்ந்து சீனாவின் வடக்கு பகுதியில் கடல் அட்டை என்று கூறப்படும் 'சீ குக்கும்பர்' பயிரிடும் பணிகளை மேற்கொள்கிறோம் என்று சொல்லிக்கொண்டு நவீன உயர் நுட்ப செயற்கைகோள், டிரோன்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்துக்கொண்டு, ஏதேதோ நடவடிக்கைகளில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், வடக்கு இலங்கை பகுதியிலுள்ள முல்லைத்தீவு, பருத்தித்தீவு, அனலைத்தீவு, மீசலை போன்ற பகுதிகளில் சீன மக்களின் நடமாட்டம் தாராளமாக இருக்கிறது. இதை அங்குள்ள தமிழ் மீனவர்களே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஒரே வழியாக உள்ள கடல் வளத்தை சீனர்கள் சுரண்டுகிறார்கள் என்பது தமிழ் மீனவர்களின் குறையாகும்.

இதுமட்டுமல்லாமல், அந்த சீன மக்கள் இலங்கையில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் துணையோடு கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் கடல்வழியாக நுழைந்திருக்கிறார்கள் என்றும் உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை விஷயத்தில் எதற்கெடுத்தாலும், சீனா இந்தியாவுடன் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுகிறது. இந்தியாவில் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றால், முதுகலை பட்டப்படிப்பை இலங்கையிலேயே படிக்க சீனா உதவி செய்கிறது. இலங்கையில் ஏதாவது காரணத்தை சொல்லி, சுற்றிவரும் சீன ராணுவ நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு, "இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயமாகும்" என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கடலோர மாவட்டங்கள் இப்போது உஷார்படுத்தப்பட்டுள்ளன. நமது நாட்டின் வடக்கு எல்லை பகுதியில் எப்படி ராணுவம் முழு வீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோ, அதுபோல தெற்கே கடலோர பகுதியையும் எல்லைப் பகுதியாக கருதி பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சீன ராணுவ குவிப்பு குறித்து இந்தியா தன் எதிர்ப்பை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிக்கவேண்டும். கடலோர பாதுகாப்பு திட்டங்களுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசாங்கம் கூடுதல் நிதியை தரவேண்டும்.


Next Story