இலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்


இலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்
x

தலைமை பொறுப்பில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், சர்வ அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், மக்களின் கோபத்தீக்கு முன்னால், ஆத்திரத்துக்கு முன்னால் நிற்க முடியாது.

தலைமை பொறுப்பில் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், சர்வ அதிகாரம் படைத்தவர்களாக இருந்தாலும், மக்களின் கோபத்தீக்கு முன்னால், ஆத்திரத்துக்கு முன்னால் நிற்க முடியாது. ஓடி ஒளியத்தான் வேண்டும். அதுதான் இப்போது இலங்கையில் நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கிறது. 1948-ல் சுதந்திரம் அடைந்த இலங்கை, தற்போது வரலாறு காணாத விலைவாசி உயர்வை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 54.6 சதவீதமாக இருந்த விலைவாசி உயர்வு, வரும் மாதங்களில் 70 சதவீதத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில், இப்போது சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்-டீசல், பால் பவுடர், மருந்துகள் மற்றும் உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களை வாட்டி வதைக்கிறது.

இலங்கையின் ரூபாய் மதிப்பு அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை வாங்க முடியவில்லை. பசியும் பட்டினியுமாக இருக்கும் மக்கள் எவ்வளவு நாள்தான் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு வீட்டில் முடங்கிக் கிடப்பார்கள்?. வீதிக்கு வந்து போராடத்தொடங்கினார்கள். அதுவும் 3 மாதங்களுக்கு முன்பு பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு முன்பே இரவும்-பகலுமாக போராட்டத்தை தொடங்கினார்கள்.

மக்களின் எதிர்ப்பை தாங்க முடியாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார். உயிர் தப்ப முதலில் கடற்படைக்கு சொந்தமான இடத்தில் தஞ்சம் புகுந்த அவர், இப்போது கொழும்புவில் பலத்த பாதுகாப்புடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்தியாவும், தமிழ்நாடும் மனிதாபிமானத்தோடு எவ்வளவோ உதவிகளைச் செய்தது. ஆனால் இன்னும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும், மக்களால் வாங்க முடியாத விலை உயர்வும் இருக்கிறது. அவர்கள் கோபம் இலங்கை அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே மீது திரும்பியது.

நாட்டின் இந்த நிலைக்கும், தங்களின் இவ்வளவு துயரத்துக்கும் காரணம் ராஜபக்சே குடும்பம்தான் என்ற கோபவெறியோடு இன்னும் கோத்தபய ராஜினாமா செய்யவில்லையே என்ற ஆத்திரத்தில், சாரை சாரையாக அதிபர் மாளிகை நோக்கி படையெடுப்பதுபோல, இலங்கை முழுவதும் இருந்து வந்து குவியத் தொடங்கினார்கள். மக்கள் படை தனக்கு எதிராக வருவதை அறிந்த கோத்தபய ராஜபக்சே தன் குடும்பத்துடன் பயந்து, மாளிகையை விட்டு ஓடிவிட்டார். அதிபர் மாளிகைக்குள் மக்கள் நுழைந்தனர். மக்களின் ஆக்ரோஷத்துக்கு முன்பு போலீசோ, ராணுவமோ நிற்கமுடியவில்லை. அதிபர் மாளிகைக்குள் திரண்ட மக்கள், கோத்தபயவின் படுக்கையில் படுத்துக்கொண்டும், நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டும், சமையல் அறையில் உள்ள பொருட்களை சாப்பிட்டுக் கொண்டும் தங்கள் எரிச்சலை தீர்த்துக்கொள்கிறார்கள்.

இப்போது அந்த மாளிகை ஒரு சுற்றுலா தலமாக மாறிவிட்டது. இது மட்டுமல்லாமல், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துவிட்டனர். கோத்தபய நாளை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். ரணில் விக்ரமசிங்கேயும் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறிவிட்டார். அனைத்து கட்சிகளின் அரசாங்கம் அமைக்கவும், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே இடைக்கால அதிபராக பொறுப்பேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் நிலைமையை உடனடியாக சீர் செய்துவிட முடியாது. இப்போதுள்ள பொருளாதார சீரழிவை சரிசெய்ய வேண்டும் என்றால், ஒரு அரசு பொறுப்பேற்று, சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக நாடுகளின் கதவுகளைத்தட்டி, உதவி கேட்டால்தான் முடியும். இந்தியா உதவிக்கரம் நீட்டியதுபோல, மனிதாபிமானத்தோடு, இரக்க உணர்வோடு உலக நாடுகள் இலங்கைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்தால்தான் முடியும்.


Next Story