குமரியில் கேக் தயாரிக்கும் பணி மும்முரம்


குமரியில் கேக் தயாரிக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 Dec 2021 6:24 PM GMT (Updated: 21 Dec 2021 6:24 PM GMT)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் 'கேக்' தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நாகர்கோவில்:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் 'கேக்' தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கொண்டாடுவது வழக்கம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் தேவாலயங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி தங்களது மகிழ்வை வெளிப்படுத்துவார்கள். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் பண்டிகைக்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே உள்ளதால் வீடுகளிலும், தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான கேக் வகைகளை தயார் செய்யும் பணிகளில் பேக்கரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
கேக்குகள் தயார்
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் உள்ளன. பண்டிகையையொட்டி ஒவ்வொரு பேக்கரிகளிலும் வித விதமான கேக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அதிலும் பிரபல பேக்கரிகளில் பல்வேறு வடிவிலான கேக்குகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் மரம் ஆகிய வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் வாடிக்கையாளர்களின் கண்களை கவரும் வகையில் பேக்கரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், ஏராளமான பிளம் கேக்குகளும் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு இருக்கிறது. பண்டிகை அன்று கிறிஸ்தவர்கள் பிளம் கேக்குகளை உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் பரிசாக அளிப்பது வழக்கம். எனவே சாதாரண கேக்குகளை காட்டிலும் பிளம் கேக்குகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விற்பனை படுஜோர்
நாகர்கோவில் பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் இந்த ஆண்டிற்கான கேக் வகைகள் பல வண்ணங்களில் தயாராகி வருகிறது. பிளம் கேக், வெண்ணிலா கேக், ஜெல் கேக், 7 கலர் கொண்ட ரெயின் கேக், சாக்கோ டிரபில் கேக், மிரர் கேக், பட்டர் ஸ்காட்ச் சாக்லெட் கேக் என பல்வேறு வகையிலான கேக்குகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறாா்கள். இந்த கேக்குகள் வியாபாரமும், உற்பத்தியும் படுஜோராக நடந்து வருகிறது.
இதுபற்றி கேக் உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, “ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வித விதமான கேக்குகள் தயார் செய்யப்படுவது வழக்கம். அதிலும் பிளம் கேக் அதிகளவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பிளம் கேக் 860 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். இதுபோக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரத்துக்கும் கேக்குகள் உள்ளன. தற்போது கேக் விற்பனை மும்முரமாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் வாங்கும் கேக்குகளை வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் இருக்கும் தங்களது உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்கிறார்கள்” என்றனர்.
-----------

Next Story