டெல்லி செங்கோட்டையில் கையெறிகுண்டு கண்டெடுப்பு


டெல்லி செங்கோட்டையில் கையெறிகுண்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 5 May 2017 9:15 PM GMT (Updated: 5 May 2017 7:51 PM GMT)

டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான செங்கோட்டை உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான செங்கோட்டை உள்ளது. 17–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட கோட்டையை சுற்றிப்பார்க்க தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் செங்கோட்டைக்குள் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு கிணற்றை சுத்தம் செய்தபோது அதில், வெடிக்காத கையெறி குண்டு ஒன்று கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தேசிய பாதுகாப்புபடையினர் கிணற்றுக்குள் கிடந்த கையெறி குண்டை பத்திரமாக அப்புறப்படுத்தி, அதனை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

செங்கோட்டைக்குள் கையெறி குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பத்தால் கோட்டையை சுற்றிப்பார்க்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் சற்று பீதியடைந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே போல் செங்கோட்டைக்குள் உள்ள கிணறுகளை சுத்தம் செய்தபோது, ஒரு கிணற்றில் இருந்து வெடிக்காத தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது நினைவுகூரத்தகுந்தது.


Next Story