பிஸ்கட் புட்டிங் செய்வது எப்படி?


பிஸ்கட் புட்டிங் செய்வது எப்படி?
x
தினத்தந்தி 13 Oct 2021 7:31 AM GMT (Updated: 13 Oct 2021 7:31 AM GMT)

மிகக் குறைந்த நேரத்தில், எந்த கால நிலையிலும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சிற்றுண்டி இது.

ளிமையானப்  பொருள்களைக் கொண்டு தயாரிக்கக்கூடியது ‘பிஸ்கட் புட்டிங்’. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது. சத்து மிகுந்தது; சுலபமாகச் செய்யக் கூடியது.  

இதில் புரதச் சத்து மற்றும் கால்சியம் நிறைந்துக் காணப்படுவதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மிகக் குறைந்த நேரத்தில், எந்த கால நிலையிலும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான சிற்றுண்டி இது.

தேவையான பொருட்கள்:

பாகு தயாரிப்பதற்கு:

சர்க்கரை - 1 மேசைக் கரண்டி
தண்ணீர் - ½ மேசைக் கரண்டி

அரைப்பதற்கு:

ஏதாவது ஒரு வகை பிஸ்கட் - 10 (பெரியதாக இருந்தால்) அல்லது 20 (சிறியதாக இருந்தால்)
சர்க்கரை - ½ மேசைக் கரண்டி
ஏலக்காய் - 5

புட்டிங் செய்வதற்கு:

முட்டை - 2
நெய் - ½ மேசைக் கரண்டி
காய்ச்சி ஆற வைத்த பால் - 2 மேசைக் கரண்டி

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவும். பாகு தங்க நிறத்தில் வரும் வரை காய்ச்சி, அதை அடி கனமான சிறிய பாத்திரத்தில் ஊற்றவும். பிஸ்கட், சர்க்கரை, ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு மாவு போல பொடித்துக் கொள்ளவும். பின்பு அதை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து (முடிந்தால் முட்டை அடிக்கும் கருவி கொண்டு அடிக்கலாம்), அதனுடன் பிஸ்கட் கலவையைச் சேர்த்து இரண்டையும் நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் பால் சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்துக் கொள்ளவும். 2 நிமிடங்கள் கழித்து இந்தக் கலவையை, சர்க்கரைப் பாகு இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி மூட வேண்டும்.

பின்பு அடுப்பில் இட்லி குக்கரை வைத்து, அதனுள் மூடி வைத்த முட்டை கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து, பாத்திரத்தின் அடி தொடும் வரையில் குக்கரில் தண்ணீர் ஊற்றி மூடி விட வேண்டும். மிதமான தீயில் 30 நிமிடங்கள் வரை கலவை வேக வேண்டும்.

பின் அடுப்பை அணைத்து விட்டு, 15 நிமிடங்கள் வரை புட்டிங்கை நன்றாக ஆறவிடவும். புட்டிங் உள்ள பாத்திரத்தின் ஓரங்களைக் கத்தியைக் கொண்டு பாத்திரத்தில் புட்டிங் ஒட்டாதவாறு இளக்கிக் கொள்ளவும். பிறகு பாத்திரத்தின் மேல் ஒரு தட்டை வைத்து, பாத்திரத்தை அதன் மீது கவிழ்க்கவும்.

இப்போது, பார்ப்பதற்கே கண்ணைக் கவரும் வண்ணமாக, வாயில் வைத்ததும் கரையும் வகையில், பிஸ்கட் புட்டிங் தயார். 

Next Story