கிணற்றில் இருந்து பொங்கி வரும் கங்கை


கிணற்றில் இருந்து பொங்கி வரும் கங்கை
x

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து, பசித்திருப்பவருக்கு அன்னம் இடுவதை விட பெரிய தர்மம் உலகத்தில் எதுவும் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தஞ்சை மாவட்டம் காவேரி கரை அருகில் மத்தியார்ஜுன சேத்திரத்தில் அமைந்த திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர், ஸ்ரீதர ஐயாவாள். இவர் முழு பெயர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்பதாகும். இவர் சிவபெருமானை ஆராதனை செய்து வேதங்களை நன்கு கற்றவர். எல்லையில்லா சிவ பக்தி உள்ளவர். மைசூர் சமஸ்தானத்தில் திவானாக பணிபுரிந்து வந்தவர். ஆனாலும் அதில் ஈடுபாடு இல்லாமல், இறைவனைத் தரிசிப்பதிலும், சிவநாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார். எனவே, பதவியைத் துறந்துவிட்டு நாடெங்கும் சிவதரிசனம் செய்யப் புறப்பட்டுவிட்டார்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் காவிரியின் வடக்கு, தெற்குக் கரைகளில் அமைந்திருக்கும் சிவாலயங்களைத் தரிசித்து வணங்கியபடி திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்துக்கு வந்தார். அங்கிருந்த மகாலிங்க சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார். தினமும் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், அருகிலுள்ள திருவிசநல்லூரிலேயே தங்கினார். தஞ்சையை ஆண்ட மன்னர் சாகாஜி அளித்த கிராமம், சாகாஜி ராஜபுரம் என்ற திருவிசைநல்லூர். ஸ்ரீதர ஐயாவாளின் பெருமையை அறிந்த தஞ்சை மன்னர், அவரை நல்ல முறையில் கவுரவித்து நிலம், வீடு போன்ற மானியங்கள் அளித்தார்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்

தினமும் மாலையில் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க மூர்த்தியை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ண த்வாதச மஞ்சரி, ஸ்தோத்ர பத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லட்சணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா போன்ற பக்தி நூல்களை எழுதியுள்ளார்.

சம்பிரதாயத்தை மீறிய அய்யாவாள்

இவர் ஒரு சமயம் தன்னுடைய முன்னோர்களுக்காக சிரார்த்தம் (திதி )கொடுக்க வேண்டியிருந்தது. அப்பொழுது சிரார்தத்திற்கு தேவையான உணவுகளை மிகுந்த ஆச்சாரத்துடன் தயார் செய்தார். அப்பொழுது அங்கு சாப்பிட வந்த பிராமணர்கள் குளிக்கச் சென்றார்கள். அந்த நேரத்தில் ஒரு புலையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் 'எனக்கு மிகவும் பசிக்கிறது; உணவு தாருங்கள்' என்று ஸ்ரீதர ஐயாவாளிடம் வந்து வேண்டினார். அவரது கஷ்டத்தை கண்டு மனம் உருகிய ஸ்ரீதர ஐயாவாள், அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, வாழை இலை போட்டு, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்து வைத்த உணவை பரிமாறி சாப்பிட வைத்தார். 350 வருடங்களுக்கு முன் இது மிகப் பெரிய விஷயம். இவ்வாறு செய்தவரை, ஊரை விட்டு விலகி வைக்க கூட தயக்க மாட்டார்கள். ஆனால் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சம்பிரதாயத்தைவிட, ஒருவரின் பசியை ஆற்றுவது முக்கியமானதாக பட்டது.

இதற்கிடையே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற அந்தணர்கள் திரும்பி வந்தனர். அப்போது வீட்டிற்குள் புலையர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு, ஸ்ரீதர ஐயாவாள் உணவு அளித்ததை அறிந்து கோபம் கொண்டனர். பின்னர், சாஸ்திரத்தை மீறி நடந்து கொண்டதால், 'உங்களுடைய வீட்டில் தர்ப்பண காரியங்களைச் செய்ய மாட்டோம்' என்று கூறிவிட்டனர். அப்போது ஸ்ரீதர ஐயாவாள், "மறுபடியும் வீட்டை சுத்தம் செய்து தங்களுக்கு தனியாக உணவு தயாரித்து பரிமாறுகிறேன்" என்றார். ஆனால் அதை ஏற்க அந்தணர்கள் தயாராக இல்லை.

இறைவன் திருவிளையாடல்

"நீ கங்கைக்கு சென்று குளித்துவிட்டு இந்த பாவத்தை போக்கிவிட்டு வா, பின் நான் உங்கள் இல்லத்தில் உணவு அருந்துகிறோம்" எனக்கு கூறி எல்லா அந்தணர்களும் சாப்பிடாமல் திரும்பிச் சென்றனர். ஐயாவாள் ஒரு தர்ப்பையை எடுத்து முறைப்படி ஆவாகனம் செய்து முன்னோர்களுக்கு வேட்டி தட்சிணை பழம் முதலில் வைத்து படைத்தார். அன்று மாலை மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்ய கோவிலுக்குச் சென்றார். மாலையில் கோவிலை திறந்த அர்ச்சகர் திகைத்து நின்றார். கோவிலின் உட்புறம் ஸ்ரீதர ஐயாவாள், தன்னுடைய வீட்டில் முன்னோர்களுக்கு படைத்த புதிய வேட்டி, பழம், தட்சிணை முதலானவை மகாலிங்கேஸ்வரர் சன்னிதியில் இருந்தன.

இருப்பினும் தன்னுடைய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய முடியாததை எண்ணி வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், மற்ற அந்தணர்கள் கூறியபடி கங்கையில் நீராடுவதற்காக காசிக்கு புறப்பட ஆயத்தமானார். அவர் வீட்டை விட்டு வெளியில் வந்த சில அடி தூரத்தில், அவருக்கு எதிரில் ஒரு அழகிய பெண் வந்தாள். அவள் ஸ்ரீதர ஐயாவாளிடம், "நான் உனது கிணற்றில் இருக்கும் பொழுது, நீ ஏன் என்னை தேடி காசிக்கு செல்கிறாய்" என்று கூறியபடியே திடீரென்று மறைந்து போனாள்.

பொங்கி எழுந்த கங்கை

இந்த நிகழ்வைப் பற்றி ஸ்ரீதர ஐயாவாள், அந்தப் பகுதியில் இருந்தவர்களிடமும், அந்தணர்களிடமும் கூறினார். ஆனால் யாரும் அவரை நம்பவில்லை. அப்போது அவரது வீட்டிற்குள் இருந்த நீர் பெருக்கெடுத்து வெளியே வந்து தெருக்களில் ஓடியது. அப்போது அனைவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஸ்ரீதர ஐயாவாள் வீட்டின் கிணற்றில் இருந்து நீர் பொங்கி எழுந்து பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். ஸ்ரீதர ஐயாவாளுக்கு சிவபெருமானின் அருள் இருப்பதை நினைத்து அனைவரும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் அவரது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து வைத்தனர்.

ஸ்ரீதர ஐயாவாள் இல்லத்து கிணற்றில் இருந்து கங்கை பிரவாகம் எடுத்து பொங்கியது, ஒரு கார்த்திகை அமாவாசை திதி தினம் ஆகும். இந்த நிகழ்ச்சி இன்று கூட, அதாவது வருடம் தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில், ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த மடத்தில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வருவதைக் காண முடியும்.

இவரது வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து, தீண்டத்தகாதவர்கள் என்று உலகத்தில் ஒருவரும் இல்லை என்றும், பசித்திருப்பவருக்கு அன்னம் இடுவதை விட பெரிய தர்மம் உலகத்தில் எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

அமைவிடம்

கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.


Next Story