சினிமா செய்திகள்
அதிரடி நடிகையின் அளவற்ற ஆசைகள்..

தோற்றத்தில் அழகு, நடையுடையில் மிடுக்கு, பேச்சில் அதிரடி காட்டும் இந்தி இளம் நட்சத்திரம் அலியா பட். கவர்ச்சி நிறைந்த இவர் எப்போதுமே மனந்திறந்து பேசக் கூடியவர்.
தோற்றத்தில் அழகு, நடையுடையில் மிடுக்கு, பேச்சில் அதிரடி காட்டும் இந்தி இளம் நட்சத்திரம் அலியா பட். கவர்ச்சி நிறைந்த இவர் எப்போதுமே மனந்திறந்து பேசக் கூடியவர்.

அவருடன் சுறுசுறுப்பான பேட்டி:

நீங்கள் சமீபத்தில் 24 வயதை எட்டியிருக்கிறீர்கள். புதிய வீட்டுக்கு இடம்பெயர்ந்திருக்கிறீர்கள். உங்களின் திரைப்பட வாழ்க்கையும் வெற்றிகரமாகச் செல்கிறது. இந்த சந்தோஷ வேளையில், இப்பிறந்தநாளின் போது நீங்கள் நிர்ணயித்துக்கொண்ட இலக்கு என்ன?

இலக்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மைல்கற் களைத் தாண்டவே நான் விரும்புகிறேன். ஒரு இலக்கை எட்டுவதற்காக மூச்சைப் பிடித்துக்கொண்டு உழைத்துப் பின் ஓய்ந்துபோவதை விட, எப்போதுமே கடின உழைப்பும், வளர்ச்சியும் நல்லது. நாம் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தால், சாதனைகள் தானாகவே உருவாகும்.

தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

நான் ஒரு பிரபல அழகுசாதனப் பொருள் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறேன், அயான் முகர்ஜியின் அறிவியல் கற்பனை படமான ‘டிராகன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

பொதுவாக நீங்கள் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறீர்கள்?

உண்மையில் சாயல் கொண்ட கதாபாத்திரங்களை, நிஜக் கதையை பின்னணியைக் கொண்ட பாத்திரங்களை நான் விரும்புகிறேன். ஒரு பெரிய வரலாற்றுப் படத்தில் நடிக்கவும் ஆசை.

நீங்கள் நடித்த படங்களில், உங்கள் பெற்றோருக்கும் உங்கள் சகோதரிக்கும் பிடித்த படம்?

அவர்களுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு படங்கள் பிடிக்கும். நான் நடித்தவற்றில் அவர் களுக்குப் பிடித்த படம் எது என்று நான் ஒருபோதும் கேட்டதில்லை. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் எனது படத்தைப் பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த நடிகைகள் யார்?

பிரியங்கா சோப்ராவும், கரீனா கபூரும். அவர்கள் படங்களைத் தேர்ந் தெடுக்கும் விதத்தில் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமானவர்கள். ஆனால் இந்த உலகையே வெல்லும் அளவு திறமை கொண்டவர்கள்.

உங்கள் அழகின் ரகசியத்தைச் சொல்லுங்கள்?

அது மிகவும் எளிமையானது. நிறையத் தண்ணீர் குடிப்பேன், நிறைய ஓய்வெடுப்பேன். குறைவே நிறைவு என்ற மனோபாவமும் என் அழகின் ரகசியமாக இருக்கலாம்.

நீங்கள் 10 நிமிடத்தில் தயாராக வேண்டும் என்றால், எந்த மாதிரியான ஆடை அணிவீர்கள்?

நான் உடனே புளூ ஜீன்ஸ் பேண்டும், சிவப்பு நிற உதடுகள் பதித்த ஒரு வெண்ணிற டி ஷர்ட்டும் அணிந்துகொள்வேன். அதுவே அனைவரையும் உற்றுப்பார்க்கச்செய்ய போதுமானது.

என்ன மாதிரியான ‘சூப்பர் சக்தி’ கிடைத்தால் நன் றாகயிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நான் என்னையே ‘குளோனிங்’ செய்ய முடிந்தால் சூப்பராக இருக்கும். ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் இருக்கலாமே!

நீங்கள் உங்களின் சிறுவயதில் அதிகம் திட்டு வாங்கிய விஷயம்?

எனது பள்ளிக்கூட ஹோம் ஒர்க்கை செய்யாமல் இருந்ததற்காக திட்டு வாங்கியிருக்கிறேன். எனக்கு ஹோம் ஒர்க் செய்ய கொஞ்சம்கூடப் பிடிக்காது.

நீங்கள் இப்போதும் 14 வயது தோற்றத்தில்தான் இருக் கிறீர்கள். அதனால் எதுவும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?

நான் ஒருமுறை லண்டனில் பாருக்குப் போனபோது அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நான் எனது ஐ.டி.யை காட்டியும் மறுத்துவிட்டார்கள். அதையும்கூட அவர்கள் போலி என்று எண்ணினார்கள்.

உங்களின் முதல் ‘டேட்டிங்’ ஞாபகம் இருக்கிறதா?

ஆம், அது சொதப்பலாகப் போய்விட்டது.

நீங்கள் பெரிதும் விரும்பும், வெறுக்கும் உணவு?

எனக்கு ‘சூஷி’ உணவு மிகவும் பிடிக்கும். பிராக்கோலியைக் கண்டாலே ஆகாது.

நீங்கள் அதிக நெருக்கம் கொண்டிருக்கும் உயிரற்ற பொருள் எது?

எனது செல்போன். அதுதானே என்னை எல்லோருடனும் இணைக்கிறது!

நீங்கள் உங்களையே கிண்டலடித்து ரசித்துக் கொள்பவர் என்று தெரியும். அப்படி ஒரு சுவாரசியமான நகைச்சுவை?

நான் ஒரு கடைக்குப் போய் நமது தேசியக் கொடியை வாங்கினேன். அப்போது என்னையறியாமலே ‘வேற கலர் இருக்கா?’ என்று கேட்டு விட்டேன். எல்லோரும் சிரித்து விட்டார்கள். எனக்கு கூச்சமாகி விட்டது.

உங்கள் வாழ்வின் உயர்ந்த தருணம்?

‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர்’ படத்துக்காக முதல்முறையாக கேமராவின் முன் நின்றது.

உங்கள் வீட்டில் நீங்கள்தான் கடைக்குட்டி. அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும், துக்கமும் என்ன?

மகிழ்ச்சியான விஷயம், நான் ரொம்ப செல்லமாக நடத்தப்படுகிறேன். ஆனால் மோசமான விஷயம், எந்த விஷயமும் என் காதுக்கு கடைசியாகத்தான் வந்து சேரும்.

எது உங்களை எளிதில் எரிச்சலடையச் செய்யும்?

எனக்கான உணவு சரியான நேரத்தில் வராவிட்டால் எரிச்சலாகிவிடுவேன்.

உங்களைப்பற்றி நீங்களே பரப்பிவிட விரும்பும் வதந்தி?

ஏற்கனவே என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. உங்கள் ஆசைக்காக நான் ஒரு ஆலிவுட் படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்று வேண்டுமானால் கிளப்பிவிடலாம்.

உங்களையும், நடிகர் வருண் தவானையும் இணைத்து நிறையச் செய்திகள் வருகின்றனவே?

ஒருவர் ஆண் என்பதால் அவருடன் நெருங்கிப் பழகக்கூடாதா? வருண் எனது நல்ல நண்பர், அவ்வளவுதான்!

உங்களுக்கென்று குறிப்பிட்ட நடிப்பு முறையை கையாளுகிறீர்களா?

இல்லை, நான் இயக்குனர்களின் நடிகை. இயக்குனர் விரும்பும் பாணியையே நான் பின்பற்றுவேன்.

இப்போது உங்கள் ஒப்பனைப் பையைத் திறந்துபார்த்தால் அதில் என்னவெல்லாம் இருக்கும்?

குறைந்த அளவே ஒப்பனையிட்டுக் கொள்வது எனக்குப் பிடிக்கும். எனவே எனது ஒப்பனைப் பையில், லிப் பாம், காஜல் மற்றும் மஸ்காராதான் இருக்கும்.

கீழ்க்கண்ட பெயர்களைச் சொல்லும்போது உங்களுக்கு உடனே தோன்றுவது என்ன?

அப்பா மகேஷ்பட்: சிறந்த நண்பர்.

இயக்குனர் கரண் ஜோகர்: குரு

சகோதரி பூஜா பட்: வழிகாட்டி