சினிமா செய்திகள்
‘டார்லிங் தெர்மாகோல் ஞானி’அமைச்சரை கலாய்த்த நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி சமூக, அரசியல் விஷயங்கள் குறித்து டுவிட்டரில் தொடர்ந்து கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்.
நடிகை கஸ்தூரி அரசியல் கட்சிகளை கடுமையாக  சாடுகிறார். இதனால் அவருக்கு வரவேற்பும் எதிர்ப்பும் குவிகிறது. நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து அவரது ரசிகர்கள் கண்டனத்துக்கு உள்ளானார்.

பின்னர் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தினார். நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்தார். கஸ்தூரியை தி.மு.க.வில் இணைக்க முயற்சி நடப்பதாகவும் அவரும் அதற்கு சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதற்கு பதில் அளித்த அவர் “நான் தி.மு.க.வில் சேருகிறேன், கமல்ஹாசன் கட்சியில் இணையப்போகிறேன் என்றெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள். அரசியலை மக்கள் கெட்ட வார்த்தையாக பார்க்கும் சூழ்நிலை இருப்பதால் உடனடியாக எந்த கட்சியிலும் சேர மாட்டேன்” என்றார். டுவிட்டரில் கஸ்தூரி பதிவிடும் கருத்துக்களையும், படங்களையும் விமர்சிப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனாலும் அவற்றை தமாஷாகவே எடுத்துக்கொள்கிறார். எல்லை மீறினால் திட்டுகிறார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதன் கீழ் “எவ்வளவு நாள்தான் பழைய புகைப்படத்தை வைத்து கலாய்ப்பீர்கள். இந்தாங்க புது அவல்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதைப் பார்த்த ஒருவர் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் செல்பி எடுக்கவில்லையா என்று சுட்டி காட்டி இருந்தார். அதற்கு அவர் பொறுத்திருங்கள் என்று பதில் அளித்தார்.

இன்னொருவர் ராஜுவை எப்படி அழைப்பீர்கள் என்று கேள்வி எழுப்ப “என் டார்லிங் தெர்மாகோல் ஞானி வாழ்க” என்று பதில் கருத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.