சினிமா செய்திகள்
கோடையில் வெளியாகும் படங்கள்

பட அதிபர்கள் வேலை நிறுத்தம் முடிந்துள்ளதால் கோடையை குறிவைத்து பல படங்கள் வரிசை கட்டுகின்றன.
அடுத்த இரண்டு மாதங்களில் 30 படங்கள்வரை திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இறுதியில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், பக்கா, தியா, பாடம் ஆகிய 4 படங்கள் வெளியாகின்றன.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து 2015-ல் வெளியாகி வசூல் குவித்த படத்தின் தழுவல். அரவிந்தசாமி, அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். சித்திக் டைரக்டு செய்துள்ளார். பக்கா படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், நிக்கி கல்ராணி, பிந்து மாதவி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.சூர்யா டைரக்டு செய்துள்ளார்.

தியா படம் சாய் பல்லவி-நாகசவுரியா ஜோடியாக நடிக்க விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது. இதில் சாய் பல்லவி ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே கரு என்று இதற்கு பெயர் வைத்து பின்னர் தியா என்று மாற்றி உள்ளனர்.

உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் அவெஞ்சர்ஸ்-3 ஹாலிவுட் படமும் தமிழ், ஆங்கில மொழிகளில் இந்த மாதம் திரைக்கு வருகிறது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து உள்ளார். கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படம் அதற்கு முன்பாகவே திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி-அஞ்சலி நடித்துள்ள காளி, திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ள மிஸ்டர் சந்திரமவுலி, ஜீவா நடித்துள்ள கீ, ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள டிக் டிக் டிக், சந்திரன், சாட்னா டைட்டஸ் நடித்துள்ள திட்டம் போட்டு திருடுற கூட்டம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கோலி சோடா-2, காத்திருப்போர் பட்டியல், காவியன், அபியும் அனுவும், எச்சரிக்கை உள்ளிட்ட பல படங்கள் கோடையில் திரைக்கு வருகின்றன.