சினிமா செய்திகள்
“அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்”-ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார்

திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் நாடு முழுவதும் பரபரப்பான விவாதமாகி உள்ளது.
செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் ஸ்ரீலீக்ஸ் முகநூலில் இதனை அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மும்பையில் தயாராகி உள்ள ஆவணப்படமொன்றில் நடிகைகள் பலர் செக்ஸ் தொல்லைகள் குறித்து காரசாரமாக பேசி உள்ளனர். நடிகை ராதிகா ஆப்தே ஆவணப்படத்தில் கூறும்போது, “திரையுலகில் இருக்கும் சிலரை மக்கள் கடவுள் போல பார்க்கிறார்கள். அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் பாலியல் தொல்லைகள் குறித்து பேசினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் தனது சினிமா வாழ்க்கையும் பாதித்து விடும் என்று அச்சப்பட்டு நடிகைகள் வெளியே சொல்வது இல்லை” என்றார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ள நடிகை உஷா ஜாதவ் கூறும்போது, “திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்கள் இந்த குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். பட வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என்று என்னை அழைத்தார்கள்” என்றார்.

இன்னொரு நடிகை கூறும்போது, “நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தரும் ஏஜெண்ட் ஒருவர் என்னிடம் நடிகைகள் செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார். என்னை கண்ட இடத்தில் தொட்டார். நான் மறுத்ததும் நீ சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டாய் என்று கூறிவிட்டு சென்று விட்டார்” என்றார்.