சினிமா செய்திகள்
அக்‌ஷய்குமாரின் படப்பிடிப்பில் தீவிபத்து

அக்‌ஷய்குமார் படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் அக்‌ஷய்குமார் தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வருகிறார். இந்தியில் கேசரி, அவுஸ்புல்-4, மொகுல், கோட் உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். கேசரி படப்பிடிப்பு மராட்டியத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இதில் அக்‌ஷய்குமார், அவில்தார் இஷ்தார் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 1897-ம் ஆண்டில் 10 ஆயிரம் ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்த்து போராடிய 21 சீக்கியர்களை பற்றிய வரலாற்று படமாக இது தயாராகிறது. அக்‌ஷய்குமார் ஜோடியாக பிரணிதா சோப்ரா நடிக்கிறார். இந்த படத்துக்காக அதிக பொருட் செலவில் அரங்குகள் அமைத்து சண்டை காட்சியை படமாக்கி வந்தனர்.

அப்போது அரங்கில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி மொத்த அரங்குமே எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீவிபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.