சினிமா செய்திகள்
“நடிகைகளால் நாடு நாசமாகிறது என்றவருக்கு குஷ்பு கண்டனம்”

நடிகைகளால் நாடு நாசமாகிறது என்று டுவிட்டரில் பதிவிட்டவருக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி கூட்டங்களிலும் பேசுகிறார். சமூக வலைத்தளங்களிலும் மனதில் பட்டதை உடனுக்குடன் கருத்துக்களாக பதிவு செய்கிறார். அவருக்கு எதிராக சில நேரங்களில் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன.

இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் நடிகைகள் பலர் டுவிட்டரை விட்டே வெளியேறும் நிலையில் குஷ்பு தைரியமாக அந்த நபர்களுக்கு பதிலடி கொடுத்து கதிகலங்க வைக்கிறார்.

சமீபத்தில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை குறை சொன்னதற்காக தன்னை கூத்தாடி என்று அவதூறு செய்தவரை பார்த்து டேய் லூசு, ஏண்டா அப்புறம் டுவிட்டரில் என்னை பின் தொடர்கிறாய் என்று திட்டினார். அந்த பிரச்சினையில் குஷ்புவுக்கு பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டனர்.

தற்போது மீண்டும் ஒருவருடன் குஷ்பு மோதி இருக்கிறார். அந்த நபர் டுவிட்டரில், “நடிகைகள் இப்படி அரசியல் செய்து பிழைப்பதற்கு பிச்சை எடுத்து சாப்பிடலாம்... இந்த நாடு நாசமா போக காரணம் இந்த நடிகைகள்தான்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்து கோபப்பட்ட குஷ்பு, “அப்போ ஏண்டா நடிகைகளை பின்தொடர்கிறாய். இப்படி ‘பப்ளிசிட்டி’ தேடுறதுக்கு பதிலா பிச்சை எடுத்திறலாம். எந்த இடம்னு சொல்லு. 50 பைசா போட்டுட்டு போறேன்.” என்று அதிரடியாக டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

இந்த மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.