சினிமா செய்திகள்
தயாரிப்பாளர்களாக மாறும் முன்னணி கதாநாயகிகள்

முன்னணி கதாநாயகிகள் பலர் விரைவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப் போகிறார்கள்.
தனுஷ், விஷால், ஆர்யா, சந்தானம், சிவகார்த்திகேயன், அதர்வா, சிபிராஜ் என்று கதாநாயகர்கள் பலர் தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள்.

தற்போது கதாநாயகிகளும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை கோடி கோடியாய் முதலீடு செய்து தயாரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். ராதிகா சரத்குமார், குஷ்பு ஆகியோர் ஏற்கனவே பல படங்களை தயாரித்து உள்ளனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தை நயன்தாரா, தனது மானேஜர் பெயரில் சொந்தமாக தயாரித்தார் என்று பேசப்பட்டது. தொடர்ந்து இன்னொரு படத்தையும் அவர் தயாரித்து நடிக்க இருக்கிறார்.

சமந்தா திருமணத்திற்கு பிறகு தயாரிப்பில் கவனம் செலுத்துகிறார். கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘யு டர்ன்’ படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். தமன்னாவும் பட தயாரிப்பில் ஆர்வம் இருப்பதாக தெரிவித்து அதற்காக கதை கேட்டு வருகிறார். திருமணத்துக்கு பின் நடிக்காமல் ஒதுங்கியிருந்த நஸ்ரியா தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.

பட தயாரிப்பில் ஈடுபடப்போவதாக நடிகை சிம்ரனும் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். தமிழன் பட டைரக்டர் எஸ்.மஜித்தை இயக்குநராக வைத்து தமிழில் படம் தயாரிக்கிறார் நடிகை சதா.

இவர்கள் தவிர மேலும் சில நடிகைகளும் விரைவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப் போகிறார்கள்.

இந்தியில் அனுஷ்கா சர்மா, தியா மிர்ஸா, அமிஷா படேல், பிரியங்கா சோப்ரா, பரீத்தி ஜிந்தா, லாரா தத்தா, ஷில்பா ஷெட்டி, ஜுஹி சாவ்லா, பூஜா பட், மனிஷா கொய்ராலா போன்ற நடிகைகள் சொந்தமாக படங்கள் தயாரித்து அவற்றில் கதாநாயகிகளாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.