சினிமா செய்திகள்
ஸ்ரீதேவி மறைவால், திருமணத்தை எளிமையாக நடத்தும் சோனம் கபூர்

பெரியம்மா ஸ்ரீதேவியின் மறைவு காரணமாக தனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருக்கிறார், சோனம் கபூர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியும், பிரபல இந்தி நடிகை சோனம் கபூரும் நெருங்கிய உறவினர்கள். ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூரின் தம்பிதான், முன்னாள் கதாநாயகன் அனில்கபூர். இவருடைய மகள், சோனம் கபூர். இவர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை இம்மாத இறுதியில் திருமணம் செய்கிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், திருமண தேதி மே 7 மற்றும் 8 ஆக மாற்றப்பட்டுள்ளது.

பெரியம்மா ஸ்ரீதேவியின் மறைவு காரணமாக தனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருக்கிறார், சோனம் கபூர். திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். சோனம் கபூர் முதலில் அவருடைய திருமணத்தை சுவிட்சர்லாந்தில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஸ்ரீதேவியின் மறைவு காரணமாக சுவிட்சர்லாந்து திருமண திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார். தன் திருமணத்தை மும்பையிலேயே எளிமையாக நடத்தலாம். ஆடம்பரமாக திருமணத்தை நடத்த வேண்டாம் என்று அப்பா அனில்கபூரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதேபோல் மகள் திருமணத்தை ஊரே வியக்கும் வகையில், ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று அனில்கபூர் ஆசைப்பட்டார். அவரும் அந்த திட்டத்தை மாற்றிக் கொண்டார். மகளின் விருப்பத்தில் நியாயம் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். சோனம் கபூரின் திருமணம் எளிமையாக நடந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சியை மும்பை, டெல்லி ஆகிய 2 நகரங்களில் மிக சிறப்பாக நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில், ஸ்ரீதேவியின் பட பாடல்களுக்கு அவருடைய மகள் ஜான்வி கபூர் நடனம் ஆடுகிறார்.