சினிமா கேள்வி பதில்! குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

Update: 2018-04-29 10:28 GMT
குருவியாரே, ரஜினிகாந்த் முழுக்க முழுக்க காதல் நாயகனாக நடித்த படம் எது? அந்த படத்தின் கதாநாயகி யார்? டைரக்டர் யார்? (பி.கணேஷ் சுப்பிரமணியன், சென்னை-1)

ரஜினிகாந்த் முழுக்க முழுக்க காதல் நாயகனாக நடித்த படம், ‘புதுக்கவிதை.’ அந்த படத்தின் கதாநாயகி, ஜோதி. டைரக்டர், எஸ்.பி.முத்துராமன்!

***

குருவியாரே, ‘கனவுக்கன்னி’ நயன்தாரா பேய் வேடங்களில் நடிப்பது, அவருடைய தீவிர ரசிகரான எனக்கு பிடிக்கவில்லை. அடுத்து வரும் படங்களிலாவது அவர் அழகுக்கு அழகு சேர்க்கும் வேடங்களில் நடிப்பாரா? (கே.மன்மதராசா, மேட்டுக்குப்பம்)

நயன்தாரா, ‘மாயா’ என்ற ஒரே ஒரு படத்தில்தான் பேய் வேடத்தில் நடித்தார். அடுத்து ஒரு படத்தில், பேய் வேடத்தில் நடிக்க இருக்கிறார். அது, பயமுறுத்தும் பேய் அல்ல. மோகமூட்டும் வசீகர மோகினி பிசாசு வேடமாம்!

***

தமிழ் நடிகர்-நடிகைகளில் ஜோதிடத்தை கரைத்து குடித்தவர் யார்? ஜோதிடம் தெரிந்த-அதன் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளவர் யார்? (எஸ்.ராம்குமார், திருச்சி)

டி.ராஜேந்தர், ராஜேஷ் ஆகிய இருவரும் ஜோதிடம் தெரிந்தவர்கள். அதன் மீது நம்பிக்கை மிகுந்தவர்கள்!

***

குருவியாரே, அனுஷ்கா, அமலாபால் ஆகிய இரண்டு பேரில் மிக மென்மையானவர் யார்? (கே.பிரதாப், ஊட்டி)

மனதளவில், அனுஷ்கா. உடல் அளவில், அமலாபால்!

***

கமல்ஹாசன் நடித்த வேடங்களில், நினைத்து நினைத்து சிரிக்க வைத்த வேடம் எது? (ஜெ.செல்வகுமார், சேலம்)

நடிப்பு, வசன உச்சரிப்பு இரண்டும் அதி அற்புதமாக பொருந்தி, அனைத்து தரப்பினரையும் நினைத்து நினைத்து சிரிக்க வைத்தவர், ‘தசாவதாரம்’ படத்தில் வந்த பல்ராம் நாயுடுதான்!

***

ஸ்ரேயா ஏன் சினிமாவை விட்டு விலகினார்? அவரைப் போன்ற நடிகைகள் எல்லாம் திருமணம் செய்து கொண்ட பின், தொடர்ந்து நடிக்கிறார்களே...? (ஏ.காதர் பாட்ஷா, பெங்களூரு)

ஸ்ரேயா இன்னும் சினிமாவை விட்டு விலகவில்லையாம். கதாநாயகி வேடம் வந்தால், அதை ஏற்று நடிக்க தயாராக இருக்கிறார். அவரை தேடி வயதான வேடங்களே வருவதால், தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறாராம்!

***

குருவியாரே, டாப்சிக்கும், ரகுல் பிரீத்சிங்குக்கும் இடையே என்ன மோதல்? (இசக்கி பாண்டியன், தென்காசி)

நிச்சயமாக, சக்களத்தி சண்டை அல்ல! தொழில் ரீதியான மோதல்தான்!

***

குருவியாரே, சரத்குமார் நடித்த ‘சூரியன்,’ வெற்றி படமா, தோல்வி படமா? (ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

‘சூரியன்,’ மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம்!

***

சினிமா வட்டாரத்தில் பிரச்சினைகள் அதிகரிக்க என்ன காரணம்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

பெரும்பாலானவர் களின் கவனம் அதை நோக்கி இருப்பதால்...!

***

மறைந்த டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் இயக்கிய கடைசி படம் எது, அதில் நடித்தவர்கள் யார், அது வெளிவந்த வருடம் எது? (மெ.சுந்தர் பழனியப்பன், காரைக்குடி)

சி.வி.ராஜேந்திரனின் கடைசி படம், ‘சின்னப்பதாஸ்.’ அதில் சத்யராஜ்-ராதா நடித்து இருந்தார்கள். அந்த படம், 1989-ம் வருடம் வெளிவந்தது!

***

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். சர்க்கஸ் கலைஞராக நடித்த படம் எது, அந்த படத்தில் அவருக்கு ஜோடி யார்? அதேபோல் ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் சர்க்கஸ் கலைஞராக நடித்த படம் எது? அதில் அவருக்கு ஜோடி யார்? (பெ.மோகன், தூத்துக்குடி-3)

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். சர்க்கஸ் கலைஞராக நடித்த படம், ‘பறக்கும் பாவை.’ அந்த படத்தில் அவருக்கு ஜோடி, சரோஜாதேவி. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் சர்க்கஸ் கலைஞராக நடித்த படம், ‘குலமகள் ராதை.’ அந்த படத்தில் அவருக்கு ஜோடி, சரோஜாதேவி. ஒரு முக்கிய வேடத்தில் தேவிகா நடித்து இருந்தார்!

***

குருவியாரே, அம்பிகா-ராதா சகோதரிகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? (வி.அருண், தஞ்சை)

‘நாயகி’ என்ற சின்னத்திரை தொடரில் அம்பிகா நடித்துக் கொண்டிருக்கிறார். ராதா, அவருடைய கணவருடன் சேர்ந்து மும்பையிலும், கேரளாவிலும் ஓட்டல்களை நடத்தி வருகிறார்!

***

சிவகாசி, திருப்பதி, பழனி, திருத்தணி, திருப்பாச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களில் படம் எடுத்து வந்த டைரக்டர் பேரரசு அடுத்து எந்த ஊர் பெயரில் படம் இயக்க இருக்கிறார்? கதாநாயகன் யார்? (ஏ.ராமஜெயம், கோவில்பட்டி)

டைரக்டர் பேரரசு அடுத்து விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க முயற்சி செய்து வருகிறார். படத்தின் பெயரை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை!

***

குருவியாரே, திரிஷாவுக்கு பாவாடை-தாவணி அழகா? சேலை அழகா? அல்லது உடலை இறுக்கிப் பிடிக்கும் நாகரீக உடைகள் அழகா? (டி.ராஜேஷ், செஞ்சி)

மற்ற உடைகளை விட, பாவாடை-தாவணிதான் திரிஷாவுக்கு அழகு என்று உடையலங்கார நிபுணர்கள் கூறுகிறார்கள்!

***

காஜல் அகர்வால் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரா, பணக்கார குடும்பத்தை சேர்ந்தவரா? (ஆர்.அசோக், விருத்தாசலம்)

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அதனால்தான் காஜல் அகர்வால் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதில்லையாம். உதவியாளர்கள் என்ற பெயரில் நாலைந்து பேர்களை படப்பிடிப்புக்கு இவர் அழைத்து வருவதில்லை!

***

குருவியாரே, ‘ஜானி’ படத்தை அடுத்து பிரஷாந்த் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம் எது? (இரா.செந்தமிழ் செல்வன், காரைக்கால்)

‘ஜானி’ படத்தை அடுத்து பிரஷாந்த் மூன்று புதிய படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இதற் கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன!

***

“திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே...தீபங்கள் ஆராதனை...” என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? (ஜெ.கிஷோர்குமார், விருது நகர்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘திரிசூலம்!’

***

குருவியாரே, நடிகை கஸ்தூரி எதுவரை படித்து இருக்கிறார்? (டி.ஜே.திருமூர்த்தி, பொள்ளாச்சி)

கஸ்தூரி, ஒரு வழக்கறிஞர்!

***

மேலும் செய்திகள்