சினிமா செய்திகள்
படுக்கையும்... படவாய்ப்பும்...

சமீபகாலமாக இந்த படுக்கைக்கு அழைத்தல் பற்றி வட இந்திய நடிகைகள் மட்டுமின்றி தென்னிந்திய நடிகைகளே ஓங்கி குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை சினிமாவில் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ எனப்படும் வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளுதல் இருக்கிறதா? என்று எந்த நடிகையிடமாவது கேட்டால் ‘ச்சே ச்சே... அப்படியெல்லாம் எதுவும் இல்லை’ என்று மறுப்பதோடு, இந்த கேள்வியே வேண்டாமே ‘ப்ளஸ்’ என்று தவிர்த்து விடுவார்கள்.

ஆனால் சமீபகாலமாக இந்த படுக்கைக்கு அழைத்தல் பற்றி வட இந்திய நடிகைகள் மட்டுமின்றி தென்னிந்திய நடிகைகளே ஓங்கி குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

அரசல் புரசலாக மட்டுமே இதுவரை பேசப்பட்டு வந்த இந்த விஷயம் அம்பலத்துக்கு வந்தது எப்போது? எப்படி?

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வென்ஸ்டின் பட வாய்ப்பு அளிக்க 80 பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்ற பெயரில் தென்னிந்திய மொழி நடிகர் நடிகைகளின் ஆபாச படங்களும் வீடியோக்களும் வெளியாகத் தொடங்கின. பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் ஐடியில் இருந்து இவை ஒவ்வொன்றாக வர ஆரம்பித்ததும் தமிழ்பட உலகம் பரபரப்பானது.

சுசி லீக்ஸில் தான் தென்னிந்திய சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருப்பது பற்றி பெயர்களுடன் முதன் முதலாக சொல்லப்பட்டது.

அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ராதிகா ஆப்தே தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானபோது ஒரு ஹீரோ தன்னுடைய பாதத்தை வருடி படுக்கைக்கு அழைக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டினார்.

அந்த நடிகர் யார் என்றும், தெலுங்கு நடிகரா? தமிழ் நடிகரா? என்று விவாதங்கள் நடந்து வந்த சூழ்நிலையில் இப்போது தெலுங்கு திரையுலகத்தையே ஸ்ரீலீக்ஸ் கதிகலங்க வைத்திருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது என்றும், அவர்கள் பெயர்களை வெளியிடுவேன் என்றும் அந்த முகநூல் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி பகிரங்கமாக அறிவித்து திரையுலகினரை அதிர வைத்தார்.

நயன்தாராவை வைத்து நீ எங்கே என் அன்பே படத்தை இயக்கி பிரபலமான சேகர் கம்முலு, கதாசிரியர் கோனா வெங்கட், நகைச்சுவை நடிகர் விவா ஷர்ஷா, தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் ஆகியோர் ஸ்ரீலீக்சில் சிக்கினார்கள். ராணாவின் தம்பி அபிராமுடன் நெருக்கமாக இருக்கும் படத்தையும் ஸ்ரீரெட்டி வெளியிட்டார்.

பிரபல நடிகர் டாக்டர் ராஜசேகரும் இந்த சர்ச்சையில் மாட்டினார். தினமும் யார் பெயர் ஸ்ரீலீக்சில் வருமோ என்ற பயத்தில் தெலுங்கு பட உலகம் ஆடிப்போய் கிடக்கிறது.

ஸ்ரீரெட்டியின் அரை நிர்வாண போராட்டமும் இந்தியா முழுவதும் கவனிக்க வைத்துள்ளது. சினிமாவில் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கும் அனைத்து பெண்களுக்காகவும் இந்த யுத்தத்தை தொடங்கி இருப்பதாக அவர் கூறினார்.

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் இறங்கி உள்ளன. மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியதால் யார் தலையெல்லாம் உருளுமோ என்ற பதற்றமும் நிலவுகிறது. ஆரம்பத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக இருந்த தெலுங்கு நடிகர் சங்கம் மனித உரிமை கமிஷன் தலையிட்டதும் அவருக்கு விதித்திருந்த தடையை நீக்கி விட்டது. மேலும் நடிகைகள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அந்த குழு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடும் என்றும் அறிவித்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இல்லாத போதிலும் தான் நினைத்ததை சாதித்துள்ளார் ஸ்ரீரெட்டி. பல நடிகைகள் பேச பயப்படும் விஷயத்தை துணிச்சலாக பேசி போராடி வெற்றியும் கண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக இருக்கிறது என்றும், நடிகைகள் வெளியே சொல்ல தயங்கும் அந்த கொடுமை ஸ்ரீரெட்டியால் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது என்றும் பெயர் குறிப்பிடாத இயக்குனர் ஒருவர் கூறினார்.

முந்தைய காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகைகளே இருந்தனர். இப்போது நடிகையாகும் ஆசையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வந்து இறங்குகிறார்கள். சினிமாவில் நல்ல படகம்பெனிகளும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோல் கெட்டவர்களும் உள்ளனர். கருப்பு ஆடுகளிடம் சிக்கும் பெண்கள்தான் ஏமாந்து வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

படுக்கைக்கு மறுக்கும் நடிகைகளும் உண்டு. நடிப்பு ஆசையில் அதற்கு உடன்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

சில நடிகைகளை வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்திவிட்டு பிறகு ஏமாற்றும் பரிதாப நிலையும் இருக்கிறது. ஸ்ரீரெட்டி இந்த ரகத்தை சேர்ந்தவர் என்பது மறுப்பதற்கு இல்லை. பாலியல் மட்டுமின்றி காதலிப்பதாக ஏமாற்றி படுக்கையில் பயன்படுத்தி விட்டு ஏமாற்றும் மோசடிகளும் நடக்கின்றன.

இந்திய அரசியல் சட்டப்படி வயதுக்கு வந்த எந்த ஒரு ஆணும், பெண்ணும் தாங்கள் விருப்பப்பட்டு படுக்கையை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. ஆனால் ஒருவரை வாய்ப்புக்காக கட்டாயப்படுத்துதல் என்பது பாலியல் குற்றத்தில் சேரும். ஒருவேளை முதலில் வாய்ப்புக்காக துணியும் நடிகைகளும் பின்னாளில் இதுபோல குற்றச்சாட்டு சொல்ல வாய்ப்பிருப்பதால் அந்த அச்சத்தில் படுக்கைக்கு அழைப்பது என்பது குறைய வாய்ப்பிருக்கிறது.

அதாவது இப்போது அப்படி ஒரு நிலை இருந்தால் ஸ்ரீரெட்டியின் லீக்ஸை பார்த்த அச்சத்தில் இனிமேல் அது குறையலாம். பிரபலமாவதற்காக நடிகைகள் பொய்யாக இந்த விஷயங்கள் பற்றி பேசினால் அதற்கு சினிமா சங்கங்கள் தான் முடிவு கட்ட வேண்டும். நடிகர் சங்கங்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் வரை குற்றசாட்டுகளில் இருக்கும் மர்மம் தொடரத்தான் செய்யும்.

என்னை அழைத்த 5 தயாரிப்பாளர்கள் -நடிகை சுருதி ஹரிகரன்

width="168" />‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுருதி ஹரிகரன். ‘நிபுணன்’,‘ ரா ரா ராஜசேகர்’, ‘சோலோ’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவரும் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“நான் 18 வயதில் சினிமாவில் பாடல் காட்சிகளில் நடனம் ஆடி வந்தேன். அப்போது எனக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டன. அது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனது நடன இயக்குனரை அணுகி இதுகுறித்து முறையிட்டு செக்ஸ் தொல்லைகளில் இருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள் என்று கேட்டேன். அவரோ உன்னால் இந்த பிரச்சினைகளை கையாள முடியவில்லை என்றால் சினிமாவில் இருந்தே விலகி விடு என்று அறிவுரை சொன்னார்.

அதன்பிறகுதான் எனக்கு சினிமாவை பற்றிய புரிதல் ஏற்பட்டது. தவறான கண்ணோட்டத்தில் நெருங்குபவர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பதை தெரிந்துகொண்டேன். தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தேன். நான் நடித்த கன்னட படமொன்று நன்றாக ஓடி வசூல் குவித்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை பிரபல தமிழ்பட தயாரிப்பாளர் ஒருவர் வாங்கி இருந்தார்.

தமிழிலும் நான்தான் நடிக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அந்த படத்தில் நடிக்க தயாரானேன். அப்போது அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அவருக்கு நெருக்கமான மேலும் 4 தயாரிப்பாளர்களின் ஆசைக்கும் நான் இணங்க வேண்டும் என்றார். நான் கையில் எப்போதும் செருப்புடன்தான் இருப்பேன் என்று அந்த தயாரிப்பாளரை எச்சரித்து பதிலடி கொடுத்தேன்.

இவ்வாறு சுருதி ஹரிகரன் கூறினார்.

நடிகை கஸ்தூரியிடம் ‘குருதட்சணை’ கேட்ட டைரக்டர்

width="182" />அறிவுப்பூர்வமாக பேசுவதும், மனதில் தோன்றுவதை துணிச்சலுடன் வெளியில் சொல்வதும், நடிகை கஸ்தூரியின் அடையாளங்கள்.

அவரிடம், பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சில டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி கேட்டபோது, துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் குண்டுகள் போல் கஸ்தூரி அளித்த பதில் வருமாறு:-

“பொதுவாகவே பெண்களின் நிலை இன்று மிக மோசமாக இருக்கிறது. பெண்களை கடவுளாக பார்க்கும் நாடு, இது. இந்த நாட்டில், சினிமாவில் மட்டுமல்ல... எல்லா துறைகளிலும் பெண்களிடம் முறைகேடுகள் நடக்கின்றன. படிக்கப் போகும் மாணவிகளும் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு துறையை மட்டும் குற்றம்சாட்டுவது, தவறு.

சினிமா துறையில், உழைத்து முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். எப்படியாவது சினிமா வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏமாறுபவர்களும் இருக்கிறார்கள்.

படிக்கப்போன இடத்தில், ஆசைவார்த்தை காட்டி பிள்ளைகளை சீரழிக்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். அந்த மாதிரி பருந்துகளையும், ஓநாய்களையும் நாம்தான் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

சினிமாவில், எப்படியாவது முன்னுக்கு வந்தால் போதும் என்று நினைக்கிற ஆண்களும் இருக்கிறார்கள். பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைப்பவன், படம் எடுக்க மாட்டான். அவனுடைய தேவைகளை நிறைவேற்றுவதில்தான் குறியாக இருப்பான். அதுபோன்ற கயவர்கள்தான் சினிமாவுக்கு வரும் பெண்களின் பேராசைகளை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டு வாங்கி, நாட்டையே ஏமாற்றுபவர்கள் அரசியலில் இருப்பது போல், பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பெண்களை கெடுக்கும் ஆண்கள், சினிமாவில் இருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் சினிமாவில் இருந்தாலும் சரி, எந்த துறையில் இருந்தாலும் சரி, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். கொள்கைகளையும், தன்மானத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது. எப்படியாவது ‘சான்ஸ்’ கிடைத்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், ஏமாற்றுபவர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என் பரிதாபங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லை இருந்திருக்கிறது. என்னிடம் ஒரு டைரக்டர், ‘குருதட்சணை’ கேட்டார். “ஹீரோ என்ன ‘குருதட்சணை’ கொடுப்பாரோ, அதையே நானும் கொடுத்து விடுகிறேன்” என்று சொன்னேன்.வாயை மூடிக்கொண்டார். பொதுவாக, கயவர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

“பெண் போகப் பொருள் அல்ல” -லட்சுமி ராமகிருஷ்ணன்

width="228" />“பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் அரங்கேறுகிறது. ஆனால் பெண்களாகிய நாம் அதை எப்படி கையாள்கிறோம், எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறோம்? என்பதில்தான் நம்முடைய சுயமரியாதையும், தன்மானமும் இருக்கிறது.

உடல் ரீதியாக தொல்லை கொடுப்பது மட்டுமல்ல, பெண்களை தவறாக பார்ப்பதும், பெண்கள் வன்கொடுமை பட்டியலில்தான் சேரும். அப்படி தவறான பார்வை வீசுபவர்களிடம், “உனக்கு என்னையா பிரச்சினை?” என்று துணிந்து கேட்பதற்கான தைரியமும், வளர்ப்பும் என்னை போன்ற பெண்களுக்கு உண்டு.

ஆனால், இதை எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்கமுடியாது. அது, அவர்களுடைய குற்றமும் கிடையாது. ஏதோ ஒரு வகையில் நடிகைகளிடம் இருக்கக்கூடிய இயலாமையை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் சினிமா துறையில் இருக்கக்கூடிய சாபம்.

மேலும் சினிமா நடிகர்-நடிகைகளின் வளர்ச்சி வெகு சிலரது கைகளில் இருப்பதால், அவர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் பாலியல் தொல்லைகள் அதிகரித்துவிட்டன.

இதில் நல்ல செய்தி என்னவென்றால்... இந்த காலத்து நடிகைகள் சினிமாவுடன் மற்ற துறைகளிலும் அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள்.

என்ஜினீயர், மருத்துவர், தொழில் முனைவோர் என நடிகைகளுக்கு பல முகங்கள் இருப்பதால், சினிமாவை நம்பித்தான் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் சினிமா வாழ்க்கையை சுட்டிக்காட்டி அரங்கேறும் பாலியல் கொடுமைகள், இனி படிப்படியாக குறைந்துவிடும்.

இனி மாறவேண்டியது பொதுமக்களின் பார்வைதான். நடிகைகளை தியேட்டர் திரையில் ரசிக்கும் சமூகம், நடிகையுடன் ‘போட்டோ’ எடுக்க துடிக்கும் சமூகம், அவளை தங்களது வீட்டு மருமகளாக ஏற்க தயங்குகிறது. இந்த விஷயத்தில், சமூகத்தை மட்டுமே குறைகூறிவிட முடியாது. ஏனெனில், சினிமாவில் நடிக்கும் நடிகைகள், கவர்ச்சி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லவா..?

சினிமாவில் பெண்களை ஏன் போகப் பொருளாக காண்பிக்கிறார்கள்? என்ற கேள்வியை விட, அத்தகைய காட்சிகளில் பெண்கள் ஏன் நடிக்கிறார்கள்? என்ற கேள்வியே அதிக கவனம் பெறுகிறது. பெண்களை போகப் பொருளாக காண்பிப்பது தவறு என்றால், அத்தகைய காட்சிகளில் நடிகைகள் நடிப்பதும் தவறுதானே? அங்குதான் நடிகைகள் மீதான மரியாதை தடுமாற ஆரம்பிக்கிறது.

உதாரணத்துக்கு... நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக நீச்சல் உடை அணிவதற்கும், கால் அழகை அடுத்தவருக்கு காண்பிப்பதற்காக அதே நீச்சல் உடையை அணிவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இதுதான் அவசியத்துக்கும், அனாவசியத்துக்கும் உள்ள வித்தியாசம்.

சினிமா துறையாக இருக்கட்டும், அல்லது வேறு எந்த துறையாக இருக்கட்டும்.... பெண்களை தவறாக பயன்படுத்தும் முறை ஒழிய வேண்டும் என்றால், பெண்கள் அதற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவேண்டும். பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துவதற்கு எதிராக இருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக நாம் சரியாக இருக்கவேண்டும். பெண்கள் எந்த வகையிலும் பாலியல் சீண்டல்களுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடக்கூடாது.

ஒரு பெண் நிர்வாணமாக நடந்து சென்றாலும், அவளை தொடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

ஆனால், என்னுடைய கருத்து அது அல்ல. நீயே, உன்னை இத்தகைய சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக்கொள்ளாதே என்பதே என்னுடைய கருத்து. என்ன உடை அணியவேண்டும்? என்ன பேசவேண்டும்? எப்படி வாழவேண்டும்... என்பதை பெண்ணாகிய நீயே முடிவு செய்துகொள். ஆனால் முடிவு செய்கையில் உன்னுடைய பொறுப்பு என்ன என்பதையும் புரிந்துகொள்.

நாம் தனிமனிதன் கிடையாது. நம்மை சார்ந்து ஒரு சமூகம் இருக்கிறது. நம்முடைய குடும்பம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வரும் தலைமுறைகளில் பெண் குழந்தைகள் பத்திரமாக இருக்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியும் இருக்கிறது. இவை அனைத்தையும் உணர்ந்து செயல்பட்டால்தான் நாளைய தலைமுறை பாதுகாப்பாக இருக்கும்.

அன்று பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்தார்கள். அதற்கு எதிராக போராடினோம். ஆனால், அந்த போராட்டங்களே வீண் என்று தோன்றும் அளவுக்கு இன்றைய சமூகம் அழிந்து கிடக்கிறது. பெண் குழந்தைகளை பத்திரமாக உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், நம்முடைய சமூகத்தில் இருக்கும் ஒரு சில எண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளையும், ‘பெண்ணை’ போகப் பொருள் என்று நினைக்கும் கலாசாரத்தையும் ஒழிக்க முடியும்.”

“என்னையும் அழைத்தார்கள்” -நடிகை பார்வதி

width="164" />‘பூ’, ‘மரியான்’ படங்களின் மூலம் பெயர் எடுத்த நடிகை பார்வதி படுக்கைக்கு அழைத்து என்னையும் அணுகினார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

“பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆட்கள் சினிமா துறையில் உள்ளனர். என்னையும் கூட கேட்டிருக்கிறார்கள். அதுவும் படுக்கைக்கு அழைப்பது அவர்களின் உரிமை போன்று அழைத்தார்கள். என்னை படுக்கைக்கு அழைத்தவர்களிடம் முடியாது என்று கூறிவிட்டேன். சினிமா துறையில் வளர்ந்துவிட்டால் படுக்கைக்கு அழைக்கும் தொல்லைகள் இருக்காது.

மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. இது பல துறைகளில் இருக்கிறது. இது தான் உண்மை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறோம்? நான் சிலரின் விருப்பத்தை நிறைவேற்றாததால் எனக்கு பட வாய்ப்புகள் வராமல் இருந்தது.

தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட வேறு எந்த திரையுலகிலும் என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை.

width="182" />மலையாள திரையுலகில் மட்டும் தான் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அழைத்தார்கள். நான் சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை. இது தான் உண்மை என்று அனைவருக்கும் தெரியும். ஒரு காலத்தில் மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் வெளிப்படையாகவே என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நான் பணியாற்றவில்லை. மலையாள திரையுலகில் இப்படி நடந்ததால் நான் தமிழ், கன்னட படங்களில் நடிக்க சென்றேன்.

இவ்வாறு பார்வதி வெளிப்படையாக பேசியது மலையாள முன்னணி நடிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை இலியானா கூறும்போது, “திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள். இதை வெளியே சொன்னால் திரை வாழ்க்கை முடிந்து விடும் என்று பயந்து பல நடிகைகள் வெளியே சொல்வது இல்லை” என்றார்.

“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது வெட்ககேடு”- நடிகை ரம்யா நம்பீசன்

width="202" />பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது குறித்து நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ், மலையாள பட உலகிலும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பீட்சா, குள்ள நரி கூட்டம், சத்யா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ரம்யா நம்பீசன் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

“எனது சக நடிகைகளும் தோழிகளும் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உள்ளிட்ட மோசமான நிகழ்வுகள் நடப்பது குறித்து பேசி வருகின்றனர். இதனை என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனது வேலையில் நான் தெளிவாக இருக்கிறேன். பிடிக்காத விஷயங்களை செய்ய முடியாது என்று மறுத்து விடுவேன்.

ஆனாலும் எனது தோழிகள் இந்த பிரச்சினைகளில் சிக்கி இருப்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு அதுமாதிரி நடக்கவில்லை. பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டும் இல்லை. எல்லா துறைகளிலுமே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பாதிக்கப்படும் பெண்கள் துணிச்சலாக இதுகுறித்து பேச வேண்டும்.”

இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.