சினிமா செய்திகள்
ரஜினிகாந்தின் ‘காலா’ பாடல்கள் வெளியாகிறது

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல்கள் அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை உயர்த்தியும், ஏழைகளுக்கு அவர் உதவும் குணாதிசயங்களை புகழ்வது போன்றும் எதிரிகளை ஓட விடும் துணிச்சலை பாராட்டுவது போன்றும் பாடல்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சிறியதும் பெரியதுமாக 7 பாடல்கள் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கபாலி படத்தில் ரஜினிகாந்த் கம்பீரமாக நடக்கும் பின்னணியில் வரும் ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம்’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதே சாயலில் இந்த படத்திலும் பாடல் இருக்க வேண்டும் என்ற ரசிகர்கள் ஆர்வப்படுகிறார்கள். காலா பாடல்களை கேட்க உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளிவந்து இணையதளத்தில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு உள்ளது. காலா படம் ஜூன் மாதம் 7-ந்தேதி திரைக்கு வருகிறது. முதலில் ஏப்ரல் 27-ந்தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பட அதிபர்கள் வேலை நிறுத்தமும் முன்கூட்டி தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கட்டுப்பாடுகளும் காலா ரிலீஸை தள்ளி வைத்து விட்டது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று வசிக்கும் தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பை தாராவி பகுதியில் நடத்தி முடித்தனர். இதில் கதாநாயகியாக கியூமா குரோஷி வருகிறார். சமுத்திரக்கனி, சம்பத், நானா படேகர், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்க நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.